4.101 திருவின்னம்பர் - திருவிருத்தம்
திருச்சிற்றம்பலம்
966 மன்னு மலைமகள் கையால்
வருடின மாமறைகள்
சொன்ன துறைதொறுந் தூப்பொரு
ளாயின தூக்கமலத்
தன்ன வடிவின அன்புடைத்
தொண்டர்க் கமுதருத்தி
இன்னல் களைவன இன்னம்ப
ரான்றன் இணையடியே. 4.101.1
967 பைதற் பிணக்குழைக் காளிவெங்
கோபம்பங் கப்படுப்பான்
செய்தற் கரிய திருநடஞ்
செய்தன சீர்மறையோன்
உய்தற் பொருட்டுவெங் கூற்றை
யுதைத்தன உம்பர்க்கெல்லாம்
எய்தற் கரியன இன்னம்ப
ரான்றன் இணையடியே. 4.101.2
968 சுணங்குநின் றார்கொங்கை யாள்உமை
சூடின தூமலரால்
வணங்கிநின் றும்பர்கள் வாழ்த்தின
மன்னு மறைகள்தம்மிற்
பிணங்கிநின் றின்னன வென்றறி
யாதன பேய்க்கணத்தோ
டிணங்கிநின் றாடின இன்னம்ப
ரான்றன் இணையடியே. 4.101.3
969 ஆறொன் றியசம யங்களின்
அவ்வவர்க் கப்பொருள்கள்
வேறொன் றிலாதன விண்ணோர்
மதிப்பன மிக்குவமன்
மாறொன் றிலாதன மண்ணொடு
விண்ணகம் மாய்ந்திடினும்
ஈறொன் றிலாதன இன்னம்ப
ரான்றன் இணையடியே. 4.101.4
970 அரக்கர்தம் முப்புரம் அம்பொன்றி
னாலட லங்கியின்வாய்க்
கரக்கமுன் வைதிகத் தேர்மிசை
நின்றன கட்டுருவம்
பரக்கவெங் கானிடை வேடுரு
வாயின பல்பதிதோ
றிரக்க நடந்தன இன்னம்ப
ரான்றன் இணையடியே. 4.101.5
971 கீண்டுங் கிளர்ந்தும்பொற் கேழல்முன்
தேடின கேடுபடா
ஆண்டும் பலபல வூழியு
மாயின ஆரணத்தின்
வேண்டும் பொருள்கள் விளங்கநின்
றாடின மேவுசிலம்
பீண்டும் கழலின இன்னம்ப
ரான்றன் இணையடியே. 4.101.6
972 போற்றுந் தகையன பொல்லா
முயலகன் கோபப்புன்மை
ஆற்றுந் தகையன ஆறு
சமயத் தவரவரைத்
தேற்றுந் தகையன தேறிய
தொண்டரைச் செந்நெறிக்கே
ஏற்றுந் தகையன இன்னம்ப
ரான்றன் இணையடியே. 4.101.7
973 பயம்புன்மை சேர்தரு பாவந்
தவிர்ப்பன பார்ப்பதிதன்
குயம்பொன்மை மாமல ராகக்
குலாவின கூடவொண்ணாச்
சயம்புவென் றேதகு தாணுவென்
றேசதுர் வேதங்கள்நின்
றியம்புங் கழலின இன்னம்ப
ரான்றன் இணையடியே. 4.101.8
974 அயன்நெடு மால்இந் திரன்சந்தி
ராதித்தர் அமரரெல்லாஞ்
சயசய என்றுமுப் போதும்
பணிவன தண்கடல்சூழ்
வியனில முற்றுக்கும் விண்ணுக்கும்
நாகர் வியன்நகர்க்கும்
இயபர மாவன இன்னம்ப
ரான்றன் இணையடியே. 4.101.9
975 தருக்கிய தக்கன்றன் வேள்வி
தகர்த்தன தாமரைப்போ
துருக்கிய செம்பொன் உவமன்
இலாதன வொண்கயிலை
நெருக்கிய வாளரக் கன்றலை
பத்தும் நெரித்தவன்றன்
இருக்கியல் பாயின இன்னம்ப
ரான்றன் இணையடியே. 4.101.10
திருச்சிற்றம்பலம்
Goto Main book