4.107 திருக்கழிப்பாலை - திருவிருத்தம்
திருச்சிற்றம்பலம்
1013 நெய்தற் குருகுதன் பிள்ளையென்
றெண்ணி நெருங்கிச்சென்று
கைதை மடற்புல்கு தென்கழிப்
பாலை யதனுறைவாய்
பைதற் பிறையொடு பாம்புடன்
வைத்த பரிசறியோம்
எய்தப் பெறின்இரங் காதுகண்
டாய்நம் மிறையவனே. 4.107.1
1014 பருமா மணியும் பவளமுத்
தும்பரந் துந்திவரை
பொருமால் கரைமேற் றிரைகொணர்ந்
தெற்றப் பொலிந்திலங்குங்
கருமா மிடறுடைக் கண்டனெம்
மான்கழிப் பாலையெந்தை
பெருமா னவனென்னை யாளுடை
யானிப் பெருநிலத்தே. 4.107.2
1015 நாட்பட் டிருந்தின்பம் எய்தலுற்
றிங்கு நமன்தமராற்
கோட்பட் டொழிவதன் முந்துற
வேகுளி ரார்தடத்துத்
தாட்பட்ட தாமரைப் பொய்கையந்
தண்கழிப் பாலையண்ணற்
காட்பட் டொழிந்தவன் றேவல்ல
மாயிவ் வகலிடத்தே. 4.107.3
இப்பதிகத்தில் ஏனைய செய்யுட்கள் சிதைந்து போயின. 4.107.4-10
திருச்சிற்றம்பலம்
Goto Main book