MEIKANDAR INSTITUTE &
SPIRITUAL SCHOOL OF LEARNING

chulinks.in




This part of web page is available as android app

* We need to pay for the server
* For operation we need funds
* Cosider helping us
* Support us by making a donation
* Donation allows us to work for you
* Donate via Paypal  

    6.93 பலவகைத் - திருத்தாண்டகம்



    திருச்சிற்றம்பலம்

    910 நேர்ந்தொருத்தி ஒருபாகத் தடங்கக் கண்டு
    நிலைதளர ஆயிரமா முகத்தி னோடு
    பாய்ந்தொருத்தி படர்சடைமேற் பயிலக் கண்டு
    படவரவும் பனிமதியும் வைத்த செல்வர்
    தாந்திருத்தித் தம்மனத்தை ஒருக்காத் தொண்டர்
    தனித்தொருதண் டூன்றிமெய் தளரா முன்னம்
    பூந்துருத்தி பூந்துருத்தி என்பீ ராகிற்
    பொல்லாப் புலாற்றுருத்தி போக்க லாமே. 6.93.1
    911 ஐத்தானத் தகமிடறு சுற்றி யாங்கே
    அகத்தடைந்தால் யாதொன்று மிடுவா ரில்லை
    மைத்தானக் கண்மடவார் தங்க ளோடு
    மாயமனை வாழ்க்கை மகிழ்ந்து வாழ்வீர்
    பைத்தானத் தொண்மதியும் பாம்பும் நீரும்
    படர்சடைமேல் வைத்துகந்த பண்பன் மேய
    நெய்த்தானம் நெய்த்தானம் என்பீ ராகில்
    நிலாவாப் புலாற்றானம் நீக்க லாமே. 6.93.2
    912 பொய்யாறா வாறே புனைந்து பேசிப்
    புலர்ந்தெழுந்த காலைப் பொருளே தேடிக்
    கையாறாக் கரண முடையோ மென்று
    களித்த மனத்தராய்க் கருதி வாழ்வீர்
    நெய்யாறா ஆடிய நீல கண்டர்
    நிமிர்புன் சடைநெற்றிக் கண்ணர் மேய
    ஐயாறே ஐயாறே என்பீ ராகில்
    அல்லல்தீர்ந் தமருலகம் ஆள லாமே. 6.93.3
    913 இழவொன்று தாமொருவர்க் கிட்டொன் றீயார்
    ஈன்றெடுத்த தாய்தந்தை பெண்டீர் மக்கள்
    கழனங்கோ வையாதல் கண்டுந் தேறார்
    களித்த மனத்தராய்க் கருதி வாழ்வீர்
    அழனம்மை நீக்குவிக்கும் அரைய னாக்கும்
    அமருலகம் ஆள்விக்கும் அம்மான் மேய
    பழனம் பழனமே என்பீ ராகிற்
    பயின்றெழுந்த பழவினைநோய் பாற்ற லாமே. 6.93.4
    914 ஊற்றுத் துறையொன்ப துள்நின் றோரீர்
    ஒக்க அடைக்கும்போ துணர மாட்டீர்
    மாற்றுத் துறைவழிகொண் டோ டா முன்னம்
    மாய மனைவாழ்க்கை மகிழ்ந்து வாழ்வீர்
    வேற்றுத் தொழில்பூண்டார் புரங்கள் மூன்றும்
    வெவ்வழல்வாய் வீழ்விக்கும் வேந்தன் மேய
    சோற்றுத்துறை சோற்றுத்துறை என்பீ ராகிற்
    துயர்நீங்கித் தூநெறிக்கண் சேர லாமே. 6.93.5
    915 கலஞ்சுழிக்குங் கருங்கடல்சூழ் வையந் தன்னிற்
    கள்ளக் கடலி லழுந்தி வாளா
    நலஞ்சுழியா எழுநெஞ்சே இன்பம் வேண்டில்
    நம்பன்றன் அடியிணைக்கே நவில்வா யாகில்
    அலஞ்சுழிக்கும் மன்னாகந் தன்னான் மேய
    அருமறையோ டாறங்க மானார் கோயில்
    வலஞ்சுழியே வலஞ்சுழியே என்பீ ராகில்
    வல்வினைகள் தீர்ந்துவா னாள லாமே. 6.93.6
    916 தண்டி குண்டோ தரன்பிங் கிருடி
    சார்ந்த புகழ்நந்தி சங்கு கன்னன்
    பண்டை உலகம் படைத்தான் றானும்
    பாரை யளந்தான்பல் லாண்டி சைப்பத்
    திண்டி வயிற்றுச் சிறுகட் பூதஞ்
    சிலபாடச் செங்கண் விடையொன் றூர்வான்
    கண்டியூர் கண்டியூர் என்பீ ராகிற்
    கடுகநும் வல்வினையைக் கழற்ற லாமே. 6.93.7
    917 விடமூக்கப் பாம்பேபோற் சிந்தி நெஞ்சே
    வெள்ளேற்றான் தன்றமரைக் கண்ட போது
    வடமூக்க மாமுனிவர் போலச் சென்று
    மாதவத்தார் மனத்துளார் மழுவாட் செல்வர்
    படமூக்கப் பாம்பணையிற் பள்ளி யானும்
    பங்கயத்து மேலயனும் பரவிக் காணா
    குடமூக்கே குடமூக்கே என்பீ ராகிற்
    கொடுவினைகள் தீர்ந்தரனைக் குறுக லாமே. 6.93.8
    918 தண்காட்டாச் சந்தனமுந் தவள நீறுந்
    தழையணுகுங் குறுங்கொன்றை மாலை சூடிக்
    கண்காட்டாக் கருவரைபோ லனைய காஞ்சிக்
    கார்மயிலஞ் சாயலார் கலந்து காண
    எண்காட்டாக் காடங் கிடமா நின்று
    எரிவீசி இரவாடும் இறைவர் மேய
    வெண்காடே வெண்காடே என்பீ ராகில்
    வீடாத வல்வினைநோய் வீட்ட லாமே. 6.93.9
    919 தந்தையார் தாயா ருடன் பிறந்தார்
    தாரமார் புத்திரரார் தாந்தா மாரே
    வந்தவா றெங்ஙனே போமா றேதோ
    மாயமா மிதற்கேதும் மகிழ வேண்டா
    சிந்தையீர் உமக்கொன்று சொல்லக் கேண்மின்
    திகழ்மதியும் வாளரவுந் திளைக்குஞ் சென்னி
    எந்தையார் திருநாமம் நமச்சி வாய
    என்றெழுவார்க் கிருவிசும்பி லிருக்க லாமே. 6.93.10

    திருச்சிற்றம்பலம்



Goto Main book