MEIKANDAR INSTITUTE &
SPIRITUAL SCHOOL OF LEARNING

chulinks.in




This part of web page is available as android app

* We need to pay for the server
* For operation we need funds
* Cosider helping us
* Support us by making a donation
* Donation allows us to work for you
* Donate via Paypal  

    6.94 நின்ற - திருத்தாண்டகம்



    திருச்சிற்றம்பலம்

    920 இருநிலனாய்த் தீயாகி நீரு மாகி
    இயமான னாயெறியுங் காற்று மாகி
    அருநிலைய திங்களாய் ஞாயி றாகி
    ஆகாச மாயட்ட மூர்த்தி யாகிப்
    பெருநலமுங் குற்றமும் பெண்ணு மாணும்
    பிறருருவுந் தம்முருவுந் தாமே யாகி
    நெருநலையாய் இன்றாகி நாளை யாகி
    நிமிர்புன் சடையடிகள் நின்ற வாறே. 6.94.1
    921 மண்ணாகி விண்ணாகி மலையு மாகி
    வயிரமுமாய் மாணிக்கந் தானே யாகிக்
    கண்ணாகிக் கண்ணுக்கோர் மணியு மாகிக்
    கலையாகிக் கலைஞானந் தானே யாகிப்
    பெண்ணாகிப் பெண்ணுக்கோ ராணு மாகிப்
    பிரளயத்துக் கப்பாலோ ரண்ட மாகி
    எண்ணாகி எண்ணுக்கோ ரெழுத்து மாகி
    எழுஞ்சுடரா யெம்மடிகள் நின்ற வாறே. 6.94.2
    922 கல்லாகிக் களறாகிக் கானு மாகிக்
    காவிரியாய்க் காலாறாய்க் கழியு மாகிப்
    புல்லாகிப் புதலாகிப் பூடு மாகிப்
    புரமாகிப் புரமூன்றுங் கெடுத்தா னாகிச்
    சொல்லாகிச் சொல்லுக்கோர் பொருளு மாகிச்
    சுலாவாகிச் சுலாவுக்கோர் சூழ லாகி
    நெல்லாகி நிலனாகி நீரு மாகி
    நெடுஞ்சுடராய் நிமிர்ந்தடிகள் நின்ற வாறே. 6.94.3
    923 காற்றாகிக் கார்முகிலாய்க் காலம் மூன்றாய்க்
    கனவாகி நனவாகிக் கங்கு லாகிக்
    கூற்றாகிக் கூற்றுதைத்தகொல் களிறு மாகிக்
    குரைகடலாய்க் குரைகடற்கோர் கோமா னுமாய்
    நீற்றானாய் நீறேற்ற மேனி யாகி
    நீள்விசும்பாய் நீள்விசும்பி னுச்சி யாகி
    ஏற்றானாய் ஏறூர்ந்த செல்வ னாகி
    எழுஞ்சுடராய் எம்மடிகள் நின்ற வாறே. 6.94.4
    924 தீயாகி நீராகித் திண்மை யாகித்
    திசையாகி அத்திசைக்கோர் தெய்வ மாகித்
    தாயாகித் தந்தையாய்ச் சார்வு மாகித்
    தாரகையும் ஞாயிறுந்தண் மதியு மாகிக்
    காயாகிப் பழமாகிப் பழத்தில் நின்ற
    இரதங்கள் நுகர்வானுந் தானே யாகி
    நீயாகி நானாகி நேர்மை யாகி
    நெடுஞ்சுடராய் நிமிர்ந்தடிகள் நின்ற வாறே. 6.94.5
    925 அங்கமா யாதியாய் வேத மாகி
    அருமறையோ டைம்பூதந் தானே யாகிப்
    பங்கமாய்ப் பலசொல்லுந் தானே யாகிப்
    பான்மதியோ டாதியாய்ப் பான்மை யாகிக்
    கங்கையாய்க் காவிரியாய்க் கன்னி யாகிக்
    கடலாகி மலையாகிக் கழியு மாகி
    எங்குமாய் ஏறூர்ந்த செல்வ னாகி
    எழுஞ்சுடராய் எம்மடிகள் நின்ற வாறே. 6.94.6
    926 மாதா பிதாவாகி மக்க ளாகி
    மறிகடலும் மால்விசும்புந் தானே யாகிக்
    கோதா விரியாய்க் குமரி யாகிக்
    கொல்புலித்தோ லாடைக் குழக னாகிப்
    போதாய மலர்கொண்டு போற்றி நின்று
    புனைவார் பிறப்பறுக்கும் புனித னாகி
    யாதானு மெனநினைந்தார்க் கெளிதே யாகி
    அழல்வண்ண வண்ணர்தாம் நின்ற வாறே. 6.94.7
    927 ஆவாகி ஆவினில் ஐந்து மாகி
    அறிவாகி அழலாகி அவியு மாகி
    நாவாகி நாவுக்கோர் உரையு மாகி
    நாதனாய் வேதத்தி னுள்ளோ னாகிப்
    பூவாகிப் பூவுக்கோர் நாற்ற மாகிப்
    பூக்குளால் வாசமாய் நின்றா னாகித்
    தேவாகித் தேவர் முதலு மாகிச்
    செழுஞ்சுடராய்ச் சென்றடிகள் நின்ற வாறே. 6.94.8
    928 நீராகி நீளகலந் தானே யாகி
    நிழலாகி நீள்விசும்பி னுச்சி யாகிப்
    பேராகிப் பேருக்கோர் பெருமை யாகிப்
    பெருமதில்கள் மூன்றினையு மெய்தா னாகி
    ஆரேனுந் தன்னடைந்தார் தம்மை யெல்லாம்
    ஆட்கொள்ள வல்லவெம் மீச னார்தாம்
    பாராகிப் பண்ணாகிப் பாட லாகிப்
    பரஞ்சுடராய்ச் சென்றடிகள் நின்ற வாறே. 6.94.9
    929 மாலாகி நான்முகனாய் மாபூ தமாய்
    மருக்கமாய் அருக்கமாய் மகிழ்வு மாகிப்
    பாலாகி எண்டிசைக்கும் எல்லை யாகிப்
    பரப்பாகிப் பரலோகந் தானே யாகிப்
    பூலோகப் புவலோக சுவலோ கமாய்ப்
    பூதங்க ளாய்ப்புராணன் றானே யாகி
    ஏலா தனவெலாம் ஏல்விப் பானாய்
    எழுஞ்சுடராய் எம்மடிகள் நின்ற வாறே. 6.94.10

    திருச்சிற்றம்பலம்



Goto Main book