MEIKANDAR INSTITUTE &
SPIRITUAL SCHOOL OF LEARNING

chulinks.in




This part of web page is available as android app

* We need to pay for the server
* For operation we need funds
* Cosider helping us
* Support us by making a donation
* Donation allows us to work for you
* Donate via Paypal  

    7.39 திருத்தொண்டத்தொகை


    பண் - கொல்லிக்கௌவாணம்
    திருச்சிற்றம்பலம்

    393 தில்லைவாழ் அந்தணர்தம் அடியார்க்கும் அடியேன்
    திருநீல கண்டத்துக் குயவனார்க் கடியேன்
    இல்லையே என்னாத இயற்பகைக்கும் அடியேன்
    இளையான்றன் குடிமாறன் அடியார்க்கும் அடியேன்
    வெல்லுமா மிகவல்ல மெய்ப்பொருளுக் கடியேன்
    விரிபொழில்சூழ் குன்றையார் விறன்மிண்டர்க் கடியேன்
    அல்லிமென் முல்லையந்தார் அமர்நீதிக் கடியேன்
    ஆரூரன் ஆரூரில் அம்மானுக் காளே. 7.39.1
    394 இலைமலிந்த வேல்நம்பி எறிபத்தர்க் கடியேன்
    ஏனாதி நாதன்றன் அடியார்க்கும் அடியேன்
    கலைமலிந்த சீர்நம்பி கண்ணப்பர்க் கடியேன்
    கடவூரிற் கலயன்றன் அடியார்க்கும் அடியேன்
    மலைமலிந்த தோள்வள்ளல் மானக்கஞ் சாறன்
    எஞ்சாத வாட்டாயன் அடியார்க்கும் அடியேன்
    அலைமலிந்த புனல்மங்கை ஆனாயர்க் கடியேன்
    ஆரூரன் ஆரூரில் அம்மானுக் காளே. 7.39.2
    395 மும்மையால் உலகாண்ட மூர்த்திக்கும் அடியேன்
    முருகனுக்கும் உருத்திர பசுபதிக்கும் அடியேன்
    செம்மையே திருநாளைப் போவார்க்கும் அடியேன்
    திருக்குறிப்புத் தொண்டர்தம் அடியார்க்கும் அடியேன்
    மெய்ம்மையே திருமேனி வழிபடா நிற்க
    வெகுண்டெழுந்த தாதைதாள் மழுவினால் எறிந்த
    அம்மையான் அடிச்சண்டிப் பெருமானுக் கடியேன்
    ஆரூரான் ஆரூரில் அம்மானுக் காளே.

    விபூதி, ருத்திராட்சம், சடைமுடி இவைகளுடன் அரசு
    செய்தமையால் மும்மையால் உலகாண்ட மூர்த்தியென்றது. 7.39.3
    396 திருநின்ற செம்மையே செம்மையாக் கொண்ட
    திருநாவுக் கரையன்றன் அடியார்க்கும் அடியேன்
    பெருநம்பி குலச்சிறைதன் அடியார்க்கும் அடியேன்
    பெருமிழலைக் குறும்பர்க்கும் பேயார்க்கும் அடியேன்
    ஒருநம்பி அப்பூதி அடியார்க்கும் அடியேன்
    ஒலிபுனல்சூழ் சாத்தமங்கை நீலநக்கர்க் கடியேன்
    அருநம்பி நமிநந்தி அடியார்க்கும் அடியேன்
    ஆரூரன் ஆரூரில் அம்மானுக் காளே. 7.39.4
    397 வம்பறா வரிவண்டு மணம்நாற மலரும்
    மதுமலர்நற் கொன்றையான் அடியலாற் பேணா
    எம்பிரான் சம்பந்தன் அடியார்க்கும் அடியேன்
    ஏயர்கோன் கலிக்காமன் அடியார்க்கும் அடியேன்
    நம்பிரான் திருமூலன் அடியார்க்கும் அடியேன்
    நாட்டமிகு தண்டிக்கும் மூர்க்கர்க்கும் அடியேன்
    #அம்பரான் சோமாசி மாறனுக்கும் அடியேன்
    ஆரூரன் ஆரூரில் அம்மானுக் காளே.

    பிறவி அந்தகராயிருந்து திருவாரூர்க் கமலாலயத்
    தீர்த்தத்தில் மூழ்கியெழுந்திருக்கும்போது சுவாமி
    யினுடைய திருவருளால் நாட்டம் விளங்கப்பெற்றவ
    ரென்பது தோன்ற நாட்டமிகு தண்டிக்கும்
    என்றருளிச்செய்தது.

    #அம்பரான் சோமாசி - திருஅம்பர் என்னுந் தலத்தில் வாழ்பவர். 7.39.1
    398 வார்கொண்ட வனமுலையாள் உமைபங்கன் கழலே
    மறவாது கல்லெறிந்த சாக்கியர்க்கும் அடியேன்
    சீர்கொண்ட புகழ்வள்ளல் சிறப்புலிக்கும் அடியேன்
    செங்காட்டங் குடிமேய சிறுத்தொண்டர்க் கடியேன்
    கார்கொண்ட கொடைக்கழறிற் றறிவார்க்கும் அடியேன்
    கடற்காழிக் கணநாதன் அடியார்க்கும் அடியேன்
    ஆர்கொண்ட வேற்கூற்றன் களந்தைக்கோன் அடியேன்
    ஆரூரன் ஆரூரில் அம்மானுக் காளே.

    கழறிற்றறிவார் - சேரமானாயனார். 7.39.6
    399 பொய்யடிமை யில்லாத புலவர்க்கும் அடியேன்
    பொழிற்கருவூர்த் துஞ்சிய புகழ்ச்சோழர்க் கடியேன்
    மெய்யடியான் நரசிங்க முனையரையர்க் கடியேன்
    விரிதிரைசூழ் கடல்நாகை அதிபத்தர்க் கடியேன்
    கைதடிந்த வரிசிலையான் கலிக்கம்பன் கலியன்
    கழற்சத்தி வரிஞ்சையர்கோன் அடியார்க்கும் அடியேன்
    ஐயடிகள் காடவர்கோன் அடியார்க்கும் அடியேன்
    ஆரூரன் ஆரூரில் அம்மானுக் காளே.

    சத்திவரிஞ்சையர்கோன் என்பதை வரிஞ்சையூர்ச்
    சத்தியாரென மாற்றுக. 7.39.7
    400 கறைக்கண்டன் கழலடியே காப்புக்கொண் டிருந்த
    கணம்புல்ல நம்பிக்குங் காரிக்கும் அடியேன்
    நிறைக்கொண்ட சிந்தையான் நெல்வேலி வென்ற
    நின்றசீர் நெடுமாறன் அடியார்க்கும் அடியேன்
    துறைக்கொண்ட செம்பவளம் இருளகற்றுஞ் சோதித்
    தொன்மயிலை வாயிலான் அடியார்க்கும் அடியேன்
    அறைக்கொண்ட வேல்நம்பி முனையடுவார்க் கடியேன்
    ஆரூரன் ஆரூரில் அம்மானுக் காளே. 7.39.8
    401 கடல்சூழ்ந்த உலகெலாங் காக்கின்ற பெருமான்
    காடவர்கோன் கழற்சிங்கன் அடியார்க்கும் அடியேன்
    மடல்சூழ்ந்த தார்நம்பி இடங்கழிக்குந் தஞ்சை
    மன்னவனாம் செருத்துணைதன் அடியார்க்கும் அடியேன்
    புடைசூழ்ந்த புலியதள்மேல் அரவாட ஆடி
    பொன்னடிக்கே மனம்வைத்த புகழ்த்துணைக்கும் அடியேன்
    அடல்சூழ்ந்த வேல்நம்பி கோட்புலிக்கும் அடியேன்
    ஆரூரன் ஆரூரில் அம்மானுக் காளே. 7.39.9
    402 பத்தராய்ப் பணிவார்கள் எல்லார்க்கும் அடியேன்
    பரமனையே பாடுவார் அடியார்க்கும் அடியேன்
    சித்தத்தைச் சிவன்பாலே வைத்தார்க்கும் அடியேன்
    திருவாரூர்ப் பிறந்தார்கள் எல்லார்க்கும் அடியேன்
    முப்போதுந் திருமேனி தீண்டுவார்க் கடியேன்
    முழுநீறு பூசிய முனிவர்க்கும் அடியேன்
    அப்பாலும் அடிச்சார்ந்த அடியார்க்கும் அடியேன்
    ஆரூரன் ஆரூரில் அம்மானுக் காளே.

    இவர்கள் ஆதிசைவப்பிராமணர்கள் 7.39.10
    403 மன்னியசீர் மறைநாவன் நின்றவூர்ப் பூசல்
    வரிவளையாள் மானிக்கும் நேசனுக்கும் அடியேன்
    தென்னவனாய் உலகாண்ட செங்கணார்க் கடியேன்
    திருநீல கண்டத்துப் பாணனார்க் கடியேன்
    என்னவனாம் அரனடியே அடைந்திட்ட சடையன்
    இசைஞானி காதலன் திருநாவ லூர்க்கோன்
    அன்னவனாம் ஆரூரன் அடிமைகேட் டுவப்பார்
    ஆரூரில் அம்மானுக் கன்ப ராவாரே. 7.39.11

    இது சுந்தரமூர்த்திசுவாமிகள் திருவாரூர்ப் பரவை நாச்சியார்
    திருமாளிகையிலிருந்து வீதிவிடங்கப் பெருமானைத்
    தரிசுக்கும்பொருட்டு ஆலயத்துக்குள் எழுந்தருழும்போது
    தேவாசரியமண்டபத்தில் வீற்றிருக்குஞ் சிவனடியார்களை
    உள்ளத்தால் வணங்கி இவர்களுக்குநானடியேனாகும்படி
    பரமசிவம் எதிரில் தரிசனங்கொடுத்தருளித் தில்லைவாழ்
    பரமசிவம் எந்நாள் கிருபைசெய்யுமென்று செல்லுகையில்
    அந்தணர்தம் அடியார்க்கும் அடியேன் என்று முதலடி
    எடுத்துக்கொடுக்கப் பாடித் துதிசெய்த பதிகம்.

    திருச்சிற்றம்பலம்


Goto Main book