MEIKANDAR INSTITUTE &
SPIRITUAL SCHOOL OF LEARNING

chulinks.in




This part of web page is available as android app

* We need to pay for the server
* For operation we need funds
* Cosider helping us
* Support us by making a donation
* Donation allows us to work for you
* Donate via Paypal  

    7.47 ஊர்த்தொகை


    பண் - பழம்பஞ்சுரம்
    திருச்சிற்றம்பலம்

    478 காட்டூர்க் கடலே கடம்பூர் மலையே கானப் பேரூராய்
    கோட்டூர்க் கொழுந்தே அழுந்தூ ரரசே கொழுநற் கொல்லேறே
    பாட்டூர் பலரும் பரவப் படுவாய் பனங்காட் டூரானே
    மாட்டூர் அறவா மறவா துன்னைப் பாடப் பணியாயே. 7.47.1
    479 கொங்கிற் குறும்பிற் குரக்குத் தளியாய் குழகா குற்றாலா
    மங்குற் றிரிவாய் வானோர் தலைவா வாய்மூர் மணவாளா
    சங்கக் குழையார் செவியா அழகா அவியா அனலேந்திக்
    கங்குற் புறங்காட் டாடீ அடியார் கவலை களையாயே. 7.47.2
    480 நிறைக்காட் டானே நெஞ்சத் தானே நின்றி யூரானே
    மிறைக்காட் டானே புனல்சேர் சடையாய் அனல்சேர் கையானே
    மறைக்காட் டானே திருமாந் துறையாய் மாகோ ணத்தானே
    இறைக்காட் டாயே எங்கட் குன்னை எம்மான் றம்மானே. 7.47.3
    481 ஆரூர் அத்தா ஐயாற் றமுதே அளப்பூர் அம்மானே
    காரூர் பொழில்கள் புடைசூழ் புறவிற் கருகா வூரானே
    பேரூர் உறைவாய் பட்டிப் பெருமான் பிறவா நெறியானே
    பாரூர் பலரும் பரவப் படுவாய் பாசூ ரம்மானே. 7.47.4
    482 மருகல் உறைவாய் மாகா ளத்தாய் மதியஞ் சடையானே
    அருகற் பிணிநின் னடியார் மேல அகல அருளாயே
    கருகற் குரலாய் வெண்ணிக் கரும்பே கானூர்க் கட்டியே
    பருகப் பணியாய் அடியார்க் குன்னைப் பவளப் படியானே. 7.47.5
    483 தாங்கூர் பிணிநின் னடியார் மேல அகல அருளாயே
    வேங்கூர் உறைவாய் விளமர் நகராய் விடையார் கொடியானே
    நாங்கூர் உறைவாய் தேங்கூர் நகராய் நல்லூர் நம்பானே
    பாங்கூர் பலிதேர் பரனே பரமா பழனப் பதியானே. 7.47.6
    484 தேனைக் காவல் கொண்டு விண்ட கொன்றைச் செழுந்தாராய்
    வானைக் காவல் கொண்டு நின்றார் அறியா நெறியானே
    ஆனைக் காவில் அரனே பரனே அண்ணா மலையானே
    ஊனைக் காவல் கைவிட் டுன்னை உகப்பார் உணர்வாரே. 7.47.7
    485 துருத்திச் சுடரே நெய்த்தா னத்தாய் சொல்லாய் கல்லாலா
    பருத்தி நியமத் துறைவாய் வெயிலாய்ப் பலவாய்க் காற்றானாய்
    திருத்தித் திருத்தி வந்தென் சிந்தை இடங்கொள் கயிலாயா
    அருத்தித் துன்னை அடைந்தார் வினைக ளகல அருளாயே. 7.47.8
    486 புலியூர்ச் சிற்றம் பலத்தாய் புகலூர்ப் போதா மூதூரா
    பொலிசேர் புரமூன் றெரியச் செற்ற புரிபுன் சடையானே
    வலிசேர் அரக்கன் தடக்கை ஐஞ்ஞான் கடர்த்த மதிசூடீ
    கலிசேர் புறவிற் கடவூ ராளீ காண அருளாயே. 7.47.9
    487 கைம்மா உரிவை யம்மான் காக்கும் பலவூர் கருத்துன்னி
    மைம்மாந் தடங்கண் மதுர மன்ன மொழியாள் மடச்சிங்கடி
    தம்மான் ஊரன் சடையன் சிறுவன் அடியன் றமிழ்மாலை
    செம்மாந் திருந்து திருவாய் திறப்பார் சிவலோ கத்தாரே. 7.47.10

    திருச்சிற்றம்பலம்


Goto Main book