4.78 குறைந்த - திருநேரிசை
திருச்சிற்றம்பலம்
754 வென்றிலேன் புலன்க ளைந்தும்
வென்றவர் வளாகந் தன்னுள்
சென்றிலே னாத லாலே
செந்நெறி யதற்குஞ் சேயேன்
நின்றுளே துளும்பு கின்றேன்
நீசனேன் ஈச னேயோ
இன்றுளேன் நாளை யில்லேன்
என்செய்வான் தோன்றி னேனே. 4.78.1
755 கற்றிலேன் கலைகள் ஞானங்
கற்றவர் தங்க ளோடும்
உற்றிலே னாத லாலே
உணர்வுக்குஞ் சேய னானேன்
பெற்றிலேன் பெருந்த டங்கண்
பேதைமார் தமக்கும் பொல்லேன்
எற்றுளேன் இறைவ னேநான்
என்செய்வான் தோன்றி னேனே. 4.78.2
756 மாட்டினேன் மனத்தை முன்னே
மறுமையை உணர மாட்டேன்
மூட்டிநான் முன்னை நாளே
முதல்வனை வணங்க மாட்டேன்
பாட்டினாய் போல நின்று
பற்றதாம் பாவந் தன்னை
ஈட்டினேன் களைய மாட்டேன்
என்செய்வான் தோன்றி னேனே. 4.78.3
757 கரைக்கடந் தோத மேறுங்
கடல்விட முண்ட கண்டன்
உரைக்கடந் தோது நீர்மை
யுணர்ந்திலே னாத லாலே
அரைக்கிடந் தசையு நாகம்
அசைப்பனே இன்ப வாழ்க்கைக்
கிரைக்கிடைந் துருகு கின்றேன்
என்செய்வான் தோன்றி னேனே. 4.78.4
758 செம்மைவெண் ணீறு பூசுஞ்
ச்வனவன் தேவ தேவன்
வெம்மைநோய் வினைகள் தீர்க்கும்
விகிர்தனுக் கார்வ மெய்தி
அம்மைநின் றடிமை செய்யா
வடிவிலா முடிவில் வாழ்க்கைக்
கிம்மைநின் றுருகு கின்றேன்
என்செய்வான் தோன்றி னேனே. 4.78.5
759 பேச்சொடு பேச்சுக் கெல்லாம்
பிறர்தமைப் புறமே பேசக்
கூச்சிலே னாத லாலே
கொடுமையை விடுமா றோரேன்
நாச்சொலி நாளும் மூர்த்தி
நன்மையை யுணர மாட்டேன்
ஏச்சுளே நின்று மெய்யே
என்செய்வான் தோன்றி னேனே. 4.78.6
760 தேசனைத் தேச மாகுந்
திருமாலோர் பங்கன் றன்னைப்
பூசனைப் புனிதன் றன்னைப்
புணரும்புண் டரிகத் தானை
நேசனை நெருப்பன் றன்னை
நிவஞ்சகத் தகன்ற செம்மை
ஈசனை அறிய மாட்டேன்
என்செய்வான் தோன்றி னேனே. 4.78.7
761 விளைக்கின்ற வினையை நோக்கி
வெண்மயிர் விரவி மேலும்
முளைக்கின்ற வினையைப் போக
முயல்கிலேன் இயல வெள்ளந்
திளைக்கின்ற முடியி னான்றன்
திருவடி பரவ மாட்டா
திளைக்கின்றே னிருமி யூன்றி
என்செய்வான் தோன்றி னேனே. 4.78.8
762 விளைவறி விலாமை யாலே
வேதனைக் குழியி லாழ்ந்து
களைகணு மில்லேன் எந்தாய்
காமரங் கற்று மில்லேன்
தளையவிழ் கோதை நல்லார்
தங்களோ டின்ப மெய்த
இளையனு மல்லேன் எந்தாய்
என்செய்வான் தோன்றி னேனே. 4.78.9
763 வெட்டன வுடைய னாகி
வீரத்தால் மலை யெடுத்த
துட்டனைத் துட்டுத் தீர்த்துச்
சுவைப்படக் கீதங் கேட்ட
அட்டமா மூர்த்தி யாய
ஆதியை ஓதி நாளும்
எட்டனை எட்ட மாட்டேன்
என்செய்வான் தோன்றி னேனே. 4.78.10
திருச்சிற்றம்பலம்
Goto Main book