4.84 ஆருயிர்த் - திருவிருத்தம்
திருச்சிற்றம்பலம்
801 எட்டாந் திசைக்கும் இருதிசைக்
கும்மிறை வாமுறையென்
றிட்டார் அமரர்வெம் பூசல்
எனக்கேட் டெரிவிழியா
ஒட்டாக் கயவர் திரிபுரம்
மூன்றையும் ஓரம்பினால்
அட்டான் அடிநிழற் கீழதன்
றோவென்றன் ஆருயிரே. 4.84.1
802 பேழ்வாய் அரவின் அரைக்கமர்ந்
தேறிப் பிறங்கிலங்கு
தேய்வாய் இளம்பிறை செஞ்சடை
மேல்வைத்த தேவர்பிரான்
மூவான் இளகான் முழுவுல
கோடுமண் விண்ணுமற்றும்
ஆவான் அடிநிழற் கீழதன்
றோவென்றன் ஆருயிரே. 4.84.2
803 தரியா வெகுளிய னாய்த்தக்கன்
வேள்வி தகர்த்துகந்த
எரியார் இலங்கிய சூலத்தி
னான்இமை யாதமுக்கட்
பெரியான் பெரியார் பிறப்பறுப்
பானென்றுந் தன்பிறப்பை
அரியான் அடிநிழற் கீழதன்
றோவென்றன் ஆருயிரே. 4.84.3
804 வடிவுடை வாணெடுங் கண்ணுமை
யாளையோர் பால்மகிழ்ந்து
வெடிகொள் அரவொடு வேங்கை
அதள்கொண்டு மேல்மருவிப்
பொடிகொ ளகலத்துப் பொன்பிதிர்ந்
தன்னபைங் கொன்றையந்தார்
அடிகள் அடிநிழற் கீழதன்
றோவென்றன் ஆருயிரே. 4.84.4
805 பொறுத்தான் அமரர்க் கமுதரு
ளிநஞ்ச முண்டுகண்டங்
கறுத்தான் கறுப்பழ காவுடை
யான்கங்கை செஞ்சடைமேற்
செறுத்தான் தனஞ்சயன் சேணா
ரகலங் கணையொன்றினால்
அறுத்தான் அடிநிழற் கீழதன்
றோவென்றன் ஆருயிரே. 4.84.5
806 காய்ந்தான் செறற்கரி யானென்று
காலனைக் காலொன்றினாற்
பாய்ந்தான் பணைமதில் மூன்றுங்
கணையென்னும் ஒள்ளழலால்
மேய்ந்தான் வியனுல கேழும்
விளங்க விழுமியநூல்
ஆய்ந்தான் அடிநிழற் கீழதன்
றோவென்றன் ஆருயிரே. 4.84.6
807 உளைந்தான் செறுத்தற் கரியான்
றலையை உகிரொன்றினாற்
களைந்தான் அதனை நிறைய
நெடுமால் கணார் குருதி
வளைந்தான் ஒருவிர லின்னொடு
வீழ்வித்துச் சாம்பர்வெண்ணீ
றளைந்தான் அடிநிழற் கீழதன்
றோவென்றன் ஆருயிரே. 4.84.7
808 முந்திவட் டத்திடைப் பட்டதெல்
லாம்முடி வேந்தர்தங்கள்
பந்திவட் டத்திடைப் பட்டலைப்
புண்பதற் கஞ்சிக்கொல்லோ
நந்திவட் டந்நறு மாமலர்க்
கொன்றையு நக்கசென்னி
அந்திவட் டத்தொளி யானடிச்
சேர்ந்ததென் ஆருயிரே. 4.84.8
809 மிகத்தான் பெரியதோர் வேங்கை
யதள்கொண்டு மெய்ம்மருவி
அகத்தான் வெருவநல் லாளை
நடுக்குறுப் பான்வரும்பொன்
முகத்தாற் குளிர்ந்திருந் துள்ளத்தி
னாலுகப் பானிசைந்த
அகத்தான் அடிநிழற் கீழதன்
றோவென்றன் ஆருயிரே. 4.84.9
810 பைம்மா ணரவல்குற் பங்கயச்
சீறடி யாள்வெருவக்
கைம்மா வரிசிலைக் காமனை
யட்ட கடவுள்முக்கண்
எம்மான் இவனென் றிருவரு
மேத்த எரிநிமிர்ந்த
அம்மான் அடிநிழற் கீழதன்
றோவென்றன் ஆருயிரே. 4.84.10
811 பழகவோ ரூர்தி யரன்பைங்கட்
பாரிடம் பாணிசெய்யக்
குழலும் முழவொடு மாநட
மாடி உயரிலங்கைக்
கிழவன் இருபது தோளும்
ஒருவிர லாலிறுத்த
அழகன் அடிநிழற் கீழதன்
றோவென்றன் ஆருயிரே. 4.84.11
திருச்சிற்றம்பலம்
Goto Main book