4.85 திருச்சோற்றுத்துறை - திருவிருத்தம்
திருச்சிற்றம்பலம்
812 காலை யெழுந்து கடிமலர்
தூயன தாங்கொணர்ந்து
மேலை யமரர் விரும்பு
மிடம்விரை யான்மலிந்த
சோலை மணங்கமழ் சோற்றுத்
துறையுறை வார்சடைமேல்
மாலை மதியமன் றோவெம்
பிரானுக் கழகியதே. 4.85.1
813 வண்டணை கொன்றையும் வன்னியும்
மத்தமும் வாளரவுங்
கொண்டணைந் தேறு முடியுடை
யான்குரை சேர்கழற்கே
தொண்டணைந் தாடிய சோற்றுத்
துறையுறை வார்சடைமேல்
வெண்டலை மாலையன் றோவெம்
பிரானுக் கழகியதே. 4.85.2
814 அளக்கு நெறியினன் அன்பர்கள்
தம்மனத் தாய்ந்துகொள்வான்
விளக்கு மடியவர் மேல்வினை
தீர்த்திடும் விண்ணவர்கோன்
துளக்குங் குழையணி சோற்றுத்
துறையுறை வார்சடைமேற்
றிளைக்கும் மதியமன் றோவெம்
பிரானுக் கழகியதே. 4.85.3
815 ஆய்ந்தகை வாளர வத்தொடு
மால்விடை யேறியெங்கும்
பேர்ந்தகை மானட மாடுவர்
பின்னு சடையிடையே
சேர்ந்தகைம் மாமலர் துன்னிய
சோற்றுத் துறையுறைவார்
ஏந்துகைச் சூல மழுவெம்
பிரானுக் கழகியதே. 4.85.4
816 கூற்றைக் கடந்ததுங் கோளர
வார்த்ததுங் கோளுழுவை
நீற்றில் துதைந்து திரியும்
பரிசது நாமறியோம்
ஆற்றிற் கிடந்தங் கலைப்ப
அலைப்புண் டசைந்ததொக்குஞ்
சோற்றுத் துறையுறை வார்சடை
மேலதோர் தூமதியே. 4.85.5
817 வல்லாடி நின்று வலிபேசு
வார்கோளர் வல்லசுரர்
கொல்லாடி நின்று குமைக்கிலும்
வானவர் வந்திறைஞ்சச்
சொல்லாடி நின்று பயில்கின்ற
சோற்றுத் துறையுறைவார்
வில்லாடி நின்ற நிலையெம்
பிரானுக் கழகியதே. 4.85.6
818 ஆய முடையது நாமறி
யோம்அர ணத்தவரைக்
காயக் கணைசிலை வாங்கியு
மெய்துந் துயக்கறுத்தான்
தூயவெண் ணீற்றினன் சோற்றுத்
துறையுறை வார்சடைமேற்
பாயும்வெண் ணீர்த்திரைக் கங்கையெம்
மானுக் கழகியதே. 4.85.7
819 அண்டர் அமரர் கடைந்
தெழுந் தோடிய நஞ்சதனை
உண்டும் அதனை ஒடுக்க
வல்லான் மிக்க உம்பர்கள்கோன்
தொண்டு பயில்கின்ற சோற்றுத்
துறையுறை வார்சடைமேல்
இண்டை மதியமன் றோவெம்
பிரானுக் கழகியதே. 4.85.8
820 கடல்மணி வண்ணன் கருதிய
நான்முகன் றானறியான்
விடமணி கண்ட முடையவன்
றானெனை ஆளுடையான்
சுடரணிந் தாடிய சோற்றுத்
துறையுறை வார்சடைமேற்
படமணி நாகமன் றோவெம்
பிரானுக் கழகியதே. 4.85.9
821 இலங்கைக் கிறைவன் இருபது
தோளு முடிநெரியக்
கலங்க விரலினா லூன்றி
அவனைக் கருத்தழித்த
துலங்கல் மழுவினன் சோற்றுத்
துறையுறை வார்சடைமேல்
இலங்கு மதியமன் றோவெம்
பிரானுக் கழகியதே. 4.85.10
திருச்சிற்றம்பலம்
Goto Main book