4.92 திருவையாறு - திருவிருத்தம்
திருச்சிற்றம்பலம்
883 சிந்திப் பரியன சிந்திப்
பவர்க்குச் சிறந்துசெந்தேன்
முந்திப் பொழிவன முத்தி
கொடுப்பன மொய்த்திருண்டு
பந்தித்து நின்ற பழவினை
தீர்ப்பன பாம்புசுற்றி
அந்திப் பிறையணிந் தாடும்ஐ
யாறன் அடித்தலமே. 4.92.1
884 இழித்தன ஏழேழ் பிறப்பும்
அறுத்தன என்மனத்தே
பொழித்தன போரெழிற் கூற்றை
யுதைத்தன போற்றவர்க்காய்க்
கிழித்தன தக்கன் கிளரொளி
வேள்வியைக் கீழமுன்சென்
றழித்தன ஆறங்க மானஐ
யாறன் அடித்தலமே. 4.92.2
885 மணிநிற மொப்பன பொன்னிற
மன்னின மின்னியல்வாய்
கணிநிற மன்ன கயிலைப்
பொருப்பன காதல்செய்யத்
துணிவன சீலத்த ராகித்
தொடர்ந்து விடாததொண்டர்க்
கணியன சேயன தேவர்க்கை
யாறன் அடித்தலமே. 4.92.3
886 இருள்தரு துன்பப் படல
மறைப்பமெய்ஞ் ஞானமென்னும்
பொருள்தரு கண்ணிழந் துண்பொருள்
நாடிப் புகலிழந்த
குருடருந் தம்மைப் பரவக்
கொடுநர கக்குழிநின்
றருள்தரு கைகொடுத் தேற்றும்ஐ
யாறன் அடித்தலமே. 4.92.4
887 எழுவாய் இறுவாய் இலாதன
வெங்கட் பிணிதவிர்த்து
வழுவா மருத்துவ மாவன
மாநர கக்குழிவாய்
விழுவார் அவர்தம்மை வீழ்ப்பன
மீட்பன மிக்கவன்போ
டழுவார்க் கமுதங்கள் காண்கஐ
யாறன் அடித்தலமே. 4.92.5
888 துன்பக் கடலிடைத் தோணித்
தொழில்பூண்ட தொண்டர்தம்மை
இன்பக் கரைமுகந் தேற்றுந்
திறத்தன மாற்றயலே
பொன்பட் டொழுகப் பொருந்தொளி
செய்யுமப் பொய்பொருந்தா
அன்பர்க் கணியன காண்கஐ
யாறன் அடித்தலமே. 4.92.6
889 களித்துக் கலந்ததோர் காதற்
கசிவொடு காவிரிவாய்க்
குளித்துத் தொழுதுமுன் நின்றவிப்
பத்தரைக் கோதில்செந்தேன்
தெளித்துச் சுவையமு தூட்டி
யமரர்கள் சூழிருப்ப
அளித்துப் பெருஞ்செல்வ மாக்கும்ஐ
யாறன் அடித்தலமே. 4.92.7
890 திருத்திக் கருத்தினைச் செவ்வே
நிறுத்திச் செறுத்துடலை
வருத்திக் கடிமலர் வாளெடுத்
தோச்சி மருங்குசென்று
விருத்திக் குழக்கவல் லோர்கட்கு
விண்பட் டிகையிடுமால்
அருத்தித் தருந்தவ ரேத்தும்ஐ
யாறன் அடித்தலமே. 4.92.8
891 பாடும் பறண்டையு மாந்தையு
மார்ப்பப் பரந்துபல்பேய்க்
கூடி முழவக் குவிகவிழ்
கொட்டக் குறுநரிகள்
நீடுங் குழல்செய்ய வையம்
நெளிய நிணப்பிணக்காட்
டாடுந் திருவடி காண்கஐ
யாறன் அடித்தலமே. 4.92.9
892 நின்போல் அமரர்கள் நீண்முடி
சாய்த்து நிமிர்த்துகுத்த
பைம்போ துழக்கிப் பவளந்
தழைப்பன பாங்கறியா
என்போ லிகள்பறித் திட்ட
இலையும் முகையுமெல்லாம்
அம்போ தெனக்கொள்ளும் ஐயன்ஐ
யாறன் அடித்தலமே. 4.92.10
திருச்சிற்றம்பலம்
Goto Main book