4.93 திருவையாறு - திருவிருத்தம்
திருச்சிற்றம்பலம்
893 மலையார் மடந்தை மனத்தன
வானோர் மகுடமன்னி
நிலையா யிருப்பன நின்றோர்
மதிப்பன நீணிலத்துப்
புலையாடு புன்மை தவிர்ப்பன
பொன்னுல கம்மளிக்கும்
அலையார் புனற்பொன்னி சூழ்ந்தஐ
யாறன் அடித்தலமே. 4.93.1
894 பொலம்புண் டரீகப் புதுமலர்
போல்வன போற்றியென்பார்
புலம்பும் பொழுதும் புணர்துணை
யாவன பொன்னனைய
சிலம்புஞ் செறிபா டகமுஞ்
செழுங்கிண் கிணித்திரளும்
அலம்பும் திருவடி காண்கஐ
யாறன் அடித்தலமே. 4.93.2
895 உற்றா ரிலாதார்க் குறுதுணை
யாவன ஓதிநன்னூல்
கற்றார் பரவப் பெருமை
யுடையன காதல்செய்ய
கிற்பார் தமக்குக் கிளரொளி
வானகந் தான்கொடுக்கும்
அற்றார்க் கரும்பொருள் காண்கஐ
யாறன் அடித்தலமே. 4.93.3
896 வானைக் கடந்தண்டத் தப்பால்
மதிப்பன மந்திரிப்பார்
ஊனைக் கழித்துய்யக் கொண்டருள்
செய்வன உத்தமர்க்கு
ஞானச் சுடராய் நடுவே
யுதிப்பன நங்கையஞ்ச
ஆனை யுரித்தன காண்கஐ
யாறன் அடித்தலமே. 4.93.4
897 மாதர மானில மாவன
வானவர் மாமுகட்டின்
மீதன மென்கழல் வெங்கச்சு
வீக்கின வெந்நமனார்
தூதரை யோடத் துரப்பன
துன்பறத் தொண்டுபட்டார்க்
காதர மாவன காண்கஐ
யாறன் அடித்தலமே. 4.93.5
898 பேணித் தொழுமவர் பொன்னுல
காளப் பிறங்கருளால்
ஏணிப் படிநெறி யிட்டுக்
கொடுத்திமை யோர்முடிமேல்
மாணிக்க மொத்து மரகதம்
போன்று வயிரமன்னி
ஆணிக் கனகமு மொக்கும்ஐ
யாறன் அடித்தலமே. 4.93.6
899 ஓதிய ஞானமும் ஞானப்
பொருளும் ஒலிசிறந்த
வேதியர் வேதமும் வேள்வியு
மாவன விண்ணுமண்ணுஞ்
சோதியுஞ் செஞ்சுடர் ஞாயிறு
மொப்பன தூமதியோ
டாதியும் அந்தமு மானஐ
யாறன் அடித்தலமே. 4.93.7
900 சுணங்கு முகத்துத் துணைமுலைப்
பாவை சுரும்பொடுவண்
டணங்குங் குழலி யணியார்
வளைக்கரங் கூப்பிநின்று
வணங்கும் பொழுதும் வருடும்
பொழுதும்வண் காந்தளொண்போ
தணங்கும் அரவிந்த மொக்கும்ஐ
யாறன் அடித்தலமே. 4.93.8
901 சுழலார் துயர்வெயிற் சுட்டிடும்
போதடித் தொண்டர்துன்னும்
நிழலா வனவென்று நீங்காப்
பிறவி நிலைகெடுத்துக்
கழலா வினைகள் கழற்றுவ
கால வனங்கடந்த
அழலார் ஒளியன காண்கஐ
யாறன் அடித்தலமே. 4.93.9
902 வலியான் றலைபத்தும் வாய்விட்
டலற வரையடர்த்து
மெலியா வலியுடைக் கூற்றை
யுதைத்துவிண் ணோர்கள்முன்னே
பலிசேர் படுகடைப் பார்த்துப்பன்
னாளும் பலர்இகழ
அலியா நிலைநிற்கும் ஐயன்ஐ
யாறன் அடித்தலமே. 4.93.10
திருச்சிற்றம்பலம்
Goto Main book