MEIKANDAR INSTITUTE &
SPIRITUAL SCHOOL OF LEARNING

chulinks.in




This part of web page is available as android app

* We need to pay for the server
* For operation we need funds
* Cosider helping us
* Support us by making a donation
* Donation allows us to work for you
* Donate via Paypal  


    1.44 திருப்பாச்சிலாச்சிராமம் - முயலகன் தீர்த்தது.
    பண் - தக்கராகம்

    470 துணிவளர் திங்கள் துளங்கி விளங்கச்
    சுடர்ச்சடை சுற்றி முடித்துப்
    பணிவளர் கொள்கையர் பாரிடஞ் சூழ
    வாரிடமும் பலி தேர்வர்
    அணிவளர் கோல மெலாஞ்செய்து பாச்சி
    லாச்சிரா மத்துறை கின்ற
    மணிவளர் கண்டரோ மங்கையை வாட
    மயல்செய்வ தோயிவர் மாண்பே. 1.44.1
    471 கலைபுனை மானுரி தோலுடை யாடை
    கனல்சுட ராலிவர் கண்கள்
    தலையணி சென்னியர் தாரணி மார்பர்
    தம்மடி கள்ளிவ ரென்ன
    அலைபுனல் பூம்பொழில் சூழ்ந்தமர் பாச்சி
    லாச்சிரா மத்துறை கின்ற
    இலைபுனை வேலரோ ஏழையை வாட
    இடர்செய்வ தோயிவ ரீடே. 1.44.2
    472 வெஞ்சுட ராடுவர் துஞ்சிருள் மாலை
    வேண்டுவர் பூண்பது வெண்ணூல்
    நஞ்சடை கண்டர் நெஞ்சிட மாக
    நண்ணுவர் நம்மை நயந்து
    மஞ்சடை மாளிகை சூழ்தரு பாச்சி
    லாச்சிரா மத்துறை கின்ற
    செஞ்சுடர் வண்ணரோ பைந்தொடி வாடச்
    சிதைசெய்வ தோவிவர் சீரே. 1.44.3
    473 கனமலர்க் கொன்றை யலங்க லிலங்கக்
    கனல்தரு தூமதிக் கண்ணி
    புனமலர் மாலை யணிந் தழகாய
    புனிதர் கொலாமிவ ரென்ன
    வனமலி வண்பொழில் சூழ்தரு பாச்சி
    லாச்சிரா மத்துறை கின்ற
    மனமலி மைந்தரோ மங்கையை வாட
    மயல்செய்வ தோவிவர் மாண்பே. 1.44.4
    474 மாந்தர்தம் பால்நறு நெய்மகிழ்ந் தாடி
    வளர்சடை மேற்புனல் வைத்து
    மோந்தை முழாக்குழல் தாளமோர் வீணை
    முதிரவோர் வாய்மூரி பாடி
    ஆந்தை விழிச்சிறு பூதத்தர் பாச்சி
    லாச்சிரா மத்துறை கின்ற
    சாந்தணி மார்பரோ தையலை வாடச்
    சதுர்செய்வ தோவிவர் சார்வே. 1.44.5
    475 நீறுமெய்பூசி நிறைசடை தாழ
    நெற்றிக்கண் ணாலுற்று நோக்கி
    ஆறது சூடி ஆடர வாட்டி
    யைவிரற் கோவண ஆடை
    பாறரு மேனியர் பூதத்தர் பாச்சி
    லாச்சிரா மத்துறை கின்ற
    ஏறது ஏறியர் ஏழையை வாட
    இடர்செய்வ தோவிவ ரீடே. 1.44.6
    476 பொங்கிள நாகமொ ரேகவ டத்தோ
    டாமைவெண் ணூல்புனை கொன்றை
    கொங்கிள மாலை புனைந் தழகாய
    குழகர்கொ லாமிவ ரென்ன
    அங்கிள மங்கையோர் பங்கினர் பாச்சி
    லாச்சிரா மத்துறை கின்ற
    சங்கொளி வண்ணரோ தாழ்குழல் வாடச்
    சதிர்செய்வ தோவிவர் சார்வே. 1.44.7
    477 ஏவலத் தால்விச யற்கருள் செய்து
    இராவண னையீ டழித்து
    மூவரி லும்முத லாய்நடு வாய
    மூர்த்தியை யன்றி மொழியாள்
    யாவர் களும்பர வும்மெழிற் பாச்சி
    லாச்சிரா மத்துறை கின்ற
    தேவர்கள் தேவரோ சேயிழை வாடச்
    சிதைசெய்வ தோவிவர் சேர்வே. 1.44.8
    478 மேலது நான்முக னெய்திய தில்லை
    கீழது சேவடி தன்னை
    நீலது வண்ணனு மெய்திய தில்லை
    எனவிவர் நின்றது மல்லால்
    ஆலது மாமதி தோய்பொழிற் பாச்சி
    லாச்சிரா மத்துறை கின்ற
    பாலது வண்ணரோ பைந்தொடி வாடப்
    பழிசெய்வ தோவிவர் பண்பே. 1.44.9
    479 நாணொடு கூடிய சாயின ரேனும்
    நகுவ ரவரிரு போதும்
    ஊணொடு கூடிய உட்குந் தகையார்
    உரைக ளவைகொள வேண்டா
    ஆணொடு பெண்வடி வாயினர் பாச்சி
    லாச்சிரா மத்துறை கின்ற
    பூணெடு மார்பரோ பூங்கொடி வாடப்
    புனைசெய்வ தோவிவர் பொற்பே. 1.44.10
    480 அகமலி அன்பொடு தொண்டர் வணங்க
    ஆச்சிரா மத்துறை கின்ற
    புகைமலி மாலை புனைந் தழகாய
    புனிதர்கொ லாமிவ ரென்ன
    நகைமலி தண்பொழில் சூழ்தரு காழி
    நற்றமிழ் ஞானசம் பந்தன்
    தகைமலி தண்டமிழ் கொண்டிவை யேத்தச்
    சாரகி லாவினை தானே. 1.44.11

    முயலகன் என்பது ஒருவித வலிநோய். இது கொல்லி மழவனின்
    மகளுக்குக் கண்டிருந்து இந்தத் திருப்பதிகம் ஓதியருளினவளவில் தீர்ந்தது.

    இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
    சுவாமிபெயர் - மாற்றறிவரதர், தேவியார் - பாலசுந்தரநாயகியம்மை.

    திருச்சிற்றம்பலம்