MEIKANDAR INSTITUTE &
SPIRITUAL SCHOOL OF LEARNING

chulinks.in




This part of web page is available as android app

* We need to pay for the server
* For operation we need funds
* Cosider helping us
* Support us by making a donation
* Donation allows us to work for you
* Donate via Paypal  


    1.49 திருநள்ளாறு
    பண் - பழந்தக்கராகம்

    பச்சைத்திருப்பதிகம்
    இது சமணர்கள் வாதின்பொருட்டுத் தீயிலிட்டபோது
    வேகாதிருந்தது.

    526 போகமார்த்த பூண்முலையாள் தன்னோடும் பொன்னகலம்
    பாகமார்த்த பைங்கண்வெள் ளேற்றண்ணல் பரமேட்டி
    ஆகமார்த்த தோலுடையன் கோவண ஆடையின்மேல்
    நாகமார்த்த நம்பெருமான் மேயது நள்ளாறே. 1.49.1
    527 தோடுடைய காதுடையன் தோலுடை யன்தொலையாப்
    பீடுடைய போர்விடையன் பெண்ணுமோர் பாலுடையன்
    ஏடுடைய மேலுலகோ டேழ்கடலுஞ் சூழ்ந்த
    நாடுடைய நம்பெருமான் மேயது நள்ளாறே. 1.49.2
    528 ஆன்முறையா லாற்றவெண்ணீ றாடி அணியிழையோர்
    பான்முறையால் வைத்தபாதம் பத்தர் பணிந்தேத்த
    மான்மறியும் வெண்மழுவுஞ் சூலமும் பற்றியகை
    நான்மறையான் நம்பெருமான் மேயது நள்ளாறே. 1.49.3
    529 புல்கவல்ல வார்சடைமேல் பூம்புனல் பெய்தயலே
    மல்கவல்ல கொன்றைமாலை மதியோ டுடன்சூடிப்
    பல்கவல்ல தொண்டர்தம்பொற் பாத நிழல்சேர
    நல்கவல்ல நம்பெருமான் மேயது நள்ளாறே. 1.49.4
    530 ஏறுதாங்கி யூர்திபேணி யேர்கொள் இளமதியம்
    ஆறுதாங்குஞ் சென்னிமேலோர் ஆடர வஞ்சூடி
    நீறுதாங்கி நூல்கிடந்த மார்பில் நிரைகொன்றை
    நாறுதாங்கு நம்பெருமான் மேயது நள்ளாறே. 1.49.5
    531 திங்களுச்சி மேல்விளங்குந் தேவன் இமையோர்கள்
    எங்களுச்சி யெம்மிறைவன் என்றடி யேயிறைஞ்சத்
    தங்களுச்சி யால்வணங்குந் தன்னடி யார்கட்கெல்லாம்
    நங்களுச்சி நம்பெருமான் மேயது நள்ளாறே. 1.49.6
    532 வெஞ்சுடர்த்தீ யங்கையேந்தி விண்கொள் முழவதிர
    அஞ்சிடத்தோர் ஆடல்பாடல் பேணுவ தன்றியும்போய்ச்
    செஞ்சடைக்கோர் திங்கள்சூடித் திகழ்தரு கண்டத்துள்ளே
    நஞ்சடைத்த நம்பெருமான் மேயது நள்ளாறே. 1.49.7
    533 சிட்டமார்ந்த மும்மதிலுஞ் சிலைவரைத் தீயம்பினால்
    சுட்டுமாட்டிச் சுண்ணவெண்ணீ றாடுவ தன்றியும்போய்ப்
    பட்டமார்ந்த சென்னிமேலோர் பால்மதி யஞ்சூடி
    நட்டமாடும் நம்பெருமான் மேயது நள்ளாறே. 1.49.8
    534 உண்ணலாகா நஞ்சுகண்டத் துண்டுட னேயொடுக்கி
    அண்ணலாகா வண்ணல்நீழ லாரழல் போலுருவம்
    எண்ணலாகா வுள்வினையென் றெள்க வலித்திருவர்
    நண்ணலாகா நம்பெருமான் மேயது நள்ளாறே. 1.49.9
    535 மாசுமெய்யர் மண்டைத்தேரர் குண்டர் குணமிலிகள்
    பேசும்பேச்சை மெய்யென்றெண்ணி அந்நெறி செல்லன்மின்
    மூசுவண்டார் கொன்றைசூடி மும்மதி லும்முடனே
    நாசஞ்செய்த நம்பெருமான் மேயது நள்ளாறே. 1.49.10
    536 தண்புனலும் வெண்பிறையுந் தாங்கிய தாழ்சடையன்
    நண்புநல்லார் மல்குகாழி ஞானசம் பந்தன்நல்ல
    பண்புநள்ளா றேத்துபாடல் பத்தும் இவைவல்லார்
    உண்புநீங்கி வானவரோ டுலகி லுறைவாரே. 1.49.11

    இத்தலம் சோழநாட்டிலுள்ள சப்த தியாகர் தலங்களிலொன்று.
    சுவாமிபெயர் - தெர்ப்பாரணியர்,
    தேவியார் - போகமார்த்தபூண்முலையம்மை.

    திருச்சிற்றம்பலம்