1.58 திருக்கரவீரம்
பண் - பழந்தக்கராகம்
623 அரியும் நம்வினை யுள்ளன ஆசற
வரிகொள் மாமணி போற்கண்டங்
கரிய வன்றிக ழுங்கர வீரத்தெம்
பெரிய வன்கழல் பேணவே. 1.58.1
624 தங்கு மோவினை தாழ்சடை மேலவன்
திங்க ளோடுடன் சூடிய
கங்கை யான்றிக ழுங்கர வீரத்தெம்
சங்க ரன்கழல் சாரவே. 1.58.2
625 ஏதம் வந்தடை யாவினி நல்லன
பூதம் பல்படை யாக்கிய
காத லான்திக ழுங்கர வீரத்தெம்
நாதன் பாதம் நணுகவே. 1.58.3
626 பறையும் நம்வினை யுள்ளன பாழ்பட
மறையும் மாமணி போற்கண்டங்
கறைய வன்றிக ழுங்கர வீரத்தெம்
இறைய வன்கழல் ஏத்தவே. 1.58.4
627 பண்ணி னார்மறை பாடலன் ஆடலன்
விண்ணி னார்மதி லெய்தமுக்
கண்ணி னானுறை யுங்கர வீரத்தை
நண்ணு வார்வினை நாசமே. 1.58.5
628 நிழலி னார்மதி சூடிய நீள்சடை
அழலி னாரன லேந்திய
கழலி னாருறை யுங்கர வீரத்தைத்
தொழவல் லார்க்கில்லை துக்கமே. 1.58.6
629 வண்டர் மும்மதில் மாய்தர எய்தவன்
அண்டன் ஆரழல் போலொளிர்
கண்ட னாருறை யுங்கர வீரத்துத்
தொண்டர் மேற்றுயர் தூரமே. 1.58.7
630 புனலி லங்கையர் கோன்முடி பத்திறச்
சினவ லாண்மை செகுத்தவன்
கனல வனுறை கின்ற கரவீரம்
எனவல் லார்க்கிட ரில்லையே. 1.58.8
631 வெள்ளத் தாமரை யானொடு மாலுமாய்த்
தெள்ளத் தீத்திர ளாகிய
கள்ளத் தானுறை யுங்கர வீரத்தை
உள்ளத் தான்வினை ஓயுமே. 1.58.9
632 செடிய மண்ணொடு சீவரத் தாரவர்
கொடிய வெவ்வுரை கொள்ளன்மின்
கடிய வன்னுறை கின்ற கரவீரத்
தடிய வர்க்கில்லை யல்லலே. 1.58.10
633 வீடி லான்விளங் குங்கர வீரத்தெம்
சேடன் மேற்கசி வாற்றமிழ்
நாடு ஞானசம் பந்தன சொல்லிவை
பாடு வார்க்கில்லை பாவமே. 1.58.11
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - கரவீரேசுவரர், தேவியார் - பிரத்தியட்சமின்னாளம்மை.
திருச்சிற்றம்பலம்