1.60 திருத்தோணிபுரம்
பண் - பழந்தக்கராகம்
645 வண்டரங்கப் புனற்கமல மதுமாந்திப் பெடையினொடும்
ஒண்டரங்க இசைபாடும் அளிஅரசே ஒளிமதியத்
துண்டரங்கப் பூண்மார்பர் திருத்தோணி புரத்துறையும்
பண்டரங்கர்க் கென்நிலைமை பரிந்தொருகால் பகராயே. 1.60.1
646 எறிசுறவங் கழிக்கானல் இளங்குருகே என்பயலை
அறிவுறா தொழிவதுவும் அருவினையேன் பயனன்றே
செறிசிறார் பதமோதுந் திருத்தோணி புரத்துறையும்
வெறிநிறார் மலர்க்கண்ணி வேதியர்க்கு விளம்பாயே. 1.60.2
647 பண்பழனக் கோட்டகத்து வாட்டமிலாச் செஞ்சூட்டுக்
கண்பகத்தின் வாரணமே கடுவினையேன் உறுபயலை
செண்பகஞ்சேர் பொழில்புடைசூழ் திருத்தோணி புரத்துறையும்
பண்பனுக்கென் பரிசுரைத்தால் பழியாமோ மொழியாயே. 1.60.3
648 காண்டகைய செங்காலொண் கழிநாராய் காதலாற்
பூண்டகைய முலைமெலிந்து பொன்பயந்தா ளென்றுவளர்
சேண்டகைய மணிமாடத் திருத்தோணி புரத்துறையும்
ஆண்டகையாற் கின்றேசென் றடியறிய உணர்த்தாயே. 1.60.4
649 பாராரே யெனையொருகால் தொழுகின்றேன் பாங்கமைந்த
காராரும் செழுநிறத்துப் பவளக்கால் கபோதகங்காள்
தேராரும் நெடுவீதித் திருத்தோணி புரத்துறையும்
நீராருஞ் சடையாருக் கென்நிலைமை நிகழ்த்தீரே. 1.60.5
650 சேற்றெழுந்த மலர்க்கமலச் செஞ்சாலிக் கதிர்வீச
வீற்றிருந்த அன்னங்காள் விண்ணோடு மண்மறைகள்
தோற்றுவித்த திருத்தோணி புரத்தீசன் துளங்காத
கூற்றுதைத்த திருவடியே கூடுமா கூறீரே. 1.60.6
651 முன்றில்வாய் மடல்பெண்ணைக் குரம்பைவாழ் முயங்குசிறை
அன்றில்காள் பிரிவுறும்நோய் அறியாதீர் மிகவல்லீர்
தென்றலார் புகுந்துலவுந் திருத்தோணி புரத்துறையுங்
கொன்றைவார் சடையார்க்கென் கூர்பயலை கூறீரே. 1.60.7
652 பானாறு மலர்ச்சூதப் பல்லவங்க ளவைகோதி
ஏனோர்க்கும் இனிதாக மொழியுமெழில் இளங்குயிலே
தேனாரும் பொழில்புடைசூழ் திருத்தோணி புரத்தமரர்
கோனாரை என்னிடத்தே வரவொருகாற் கூவாயே. 1.60.8
653 நற்பதங்கள் மிகஅறிவாய் நானுன்னை வேண்டுகின்றேன்
பொற்பமைந்த வாயலகின் பூவைநல்லாய் போற்றுகின்றேன்
சொற்பதஞ்சேர் மறையாளர் திருத்தோணி புரத்துறையும்
விற்பொலிதோள் விகிர்தனுக்கென் மெய்ப்பயலை விளம்பாயே. 1.60.9
654 சிறையாரும் மடக்கிளியே இங்கேவா தேனொடுபால்
முறையாலே உணத்தருவேன் மொய்பவளத் தொடுதரளந்
துறையாருங் கடற்றோணி புரத்தீசன் துளங்குமிளம்
பிறையாளன் திருநாமம் எனக்கொருகாற் பேசாயே. 1.60.10
655 போர்மிகுத்த வயற்றோணி புரத்துறையும் புரிசடையெங்
கார்மிகுத்த கறைக்கண்டத் திறையவனை வண்கமலத்
தார்மிகுத்த வரைமார்பன் சம்பந்தன் உரைசெய்த
சீர்மிகுத்த தமிழ்வல்லார் சிவலோகஞ் சேர்வாரே. 1.60.11
திருச்சிற்றம்பலம்