MEIKANDAR INSTITUTE &
SPIRITUAL SCHOOL OF LEARNING

chulinks.in




This part of web page is available as android app

* We need to pay for the server
* For operation we need funds
* Cosider helping us
* Support us by making a donation
* Donation allows us to work for you
* Donate via Paypal  


    1.61 திருச்செங்காட்டங்குடி
    பண் - பழந்தக்கராகம்

    656 நறைகொண்ட மலர்தூவி விரையளிப்ப நாடோ றும்
    முறைகொண்டு நின்றடியார் முட்டாமே பணிசெய்யச்
    சிறைகொண்ட வண்டறையுஞ் செங்காட்டங் குடியதனுள்
    கறைகொண்ட கண்டத்தான் கணபதீச் சரத்தானே. 1.61.1
    657 வாரேற்ற பறையொலியுஞ் சங்கொலியும் வந்தியம்ப
    ஊரேற்ற செல்வத்தோ டோ ங்கியசீர் விழவோவாச்
    சீரேற்ற முடைத்தாய செங்காட்டங் குடியதனுள்
    காரேற்ற கொன்றையான் கணபதீச் சரத்தானே. 1.61.2
    658 வரந்தையான் சோபுரத்தான் மந்திரத்தான் தந்திரத்தான்
    கிரந்தையான் கோவணத்தான் கிண்கிணியான் கையதோர்
    சிரந்தையான் செங்காட்டங் குடியான்செஞ் சடைசேருங்
    கரந்தையான் வெண்ணீற்றான் கணபதீச் சரத்தானே. 1.61.3
    659 தொங்கலுங் கமழ்சாந்தும் அகிற்புகையுந் தொண்டர்கொண்
    டங்கையால் தொழுதேத்த அருச்சுனற்கன் றருள்செய்தான்
    செங்கயல்பாய் வயலுடுத்த செங்காட்டங் குடியதனுள்
    கங்கைசேர் வார்சடையான் கணபதீச் சரத்தானே. 1.61.4
    660 பாலினால் நறுநெய்யாற் பழத்தினாற் பயின்றாட்டி
    நூலினால் மணமாலை கொணர்ந்தடியார் புரிந்தேத்தச்
    சேலினார் வயல்புடைசூழ் செங்காட்டங் குடியதனுள்
    காலினாற் கூற்றுதைத்தான் கணபதீச் சரத்தானே. 1.61.5
    661 நுண்ணியான் மிகப்பெரியான் ஓவுளார் வாயுளான்
    தண்ணியான் வெய்யான்நந் தலைமேலான் மனத்துளான்
    திண்ணியான் செங்காட்டங் குடியான்செஞ் சடைமதியக்
    கண்ணியான் கண்ணுதலான் கணபதீச் சரத்தானே. 1.61.6
    662 மையினார் மலர்நெடுங்கண் மலைமகளோர் பாகமாம்
    மெய்யினான் பையரவம் அரைக்கசைத்தான் மீன்பிறழச்
    செய்யினார் தண்கழனிச் செங்காட்டங் குடியதனுள்
    கையினார் கூரெரியான் கணபதீச் சரத்தானே. 1.61.7
    663 தோடுடையான் குழையுடையான் அரக்கன்றன் தோளடர்த்த
    பீடுடையான் போர்விடையான் பெண்பாகம் மிகப்பெரியான்
    சேடுடையான் செங்காட்டாங் குடியுடையான் சேர்ந்தாடுங்
    காடுடையான் நாடுடையான் கணபதீச் சரத்தானே. 1.61.8
    664 ஆனூரா வுழிதருவான் அன்றிருவர் தேர்ந்துணரா
    வானூரான் வையகத்தான் வாழ்த்துவார் மனத்துளான்
    தேனூரான் செங்காட்டாங் குடியான்சிற் றம்பலத்தான்
    கானூரான் கழுமலத்தான் கணபதீச் சரத்தானே. 1.61.9
    665 செடிநுகருஞ் சமணர்களுஞ் சீவரத்த சாக்கியரும்
    படிநுகரா தயருழப்பார்க் கருளாத பண்பினான்
    பொடிநுகருஞ் சிறுத்தொண்டர்க் கருள்செய்யும் பொருட்டாகக்
    கடிநகராய் வீற்றிருந்தான் கணபதீச் சரத்தானே. 1.61.10
    666 கறையிலங்கு மலர்க்குவளை கண்காட்டக் கடிபொழிலின்
    நறையிலங்கு வயல்காழித் தமிழ்ஞான சம்பந்தன்
    சிறையிலங்கு புனற்படப்பைச் செங்காட்டங் குடிசேர்த்தும்
    மறையிலங்கு தமிழ்வல்லார் வானுலகத் திருப்பாரே. 1.61.11

    இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
    சுவாமிபெயர் - கணபதீசுவரர், தேவியார் - திருக்குழல்மாதம்மை.

    திருச்சிற்றம்பலம்