1.65 காவிரிப்பூம்பட்டினத்துப்பல்லவனீச்சரம்
பண் - தக்கேசி
701 அடையார்தம் புரங்கள்மூன்றும் ஆரழலில்லழுந்த
விடையார்மேனிய ராய்ச்சீறும் வித்தகர்மேயவிடம்
கடையார்மாடம் நீடியெங்குங் கங்குல்புறந்தடவப்
படையார்புரிசைப் பட்டினஞ்சேர் பல்லவனீச்சரமே. 1.65.1
702 எண்ணாரெயில்கள் மூன்றுஞ்சீறும் எந்தைபிரானிமையோர்
கண்ணாயுலகங் காக்கநின்ற கண்ணுதல்நண்ணுமிடம்
மண்ணார்சோலைக் கோலவண்டு வைகலுந்தேனருந்திப்
பண்ணார்செய்யும் பட்டினத்துப் பல்லவனீச்சரமே. 1.65.2
703 மங்கையங்கோர் பாகமாக வாள்நிலவார்சடைமேல்
கங்கையங்கே வாழவைத்த கள்வனிருந்தவிடம்
பொங்கயஞ்சேர் புணரியோத மீதுயர்பொய்கையின்மேற்
பங்கயஞ்சேர் பட்டினத்துப் பல்லவனீச்சரமே. 1.65.3
704 தாரார்கொன்றை பொன்றயங்கச் சாத்தியமார்பகலம்
நீரார்நீறு சாந்தம்வைத்த நின்மலன்மன்னுமிடம்
போரார்வேற்கண் மாதர்மைந்தர் புக்கிசைபாடலினாற்
பாரார்கின்ற பட்டினத்துப் பல்லவனீச்சரமே. 1.65.4
705 மைசேர்கண்டர் அண்டவாணர் வானவருந்துதிப்ப
மெய்சேர்பொடியர் அடியாரேத்த மேவியிருந்தவிடங்
கைசேர்வளையார் விழைவினோடு காதன்மையாற்கழலே
பைசேரரவார் அல்குலார்சேர் பல்லவனீச்சரமே. 1.65.5
706 குழலினோசை வீணைமொந்தை கொட்டமுழவதிரக்
கழலினோசை யார்க்கஆடுங் கடவுளிருந்தவிடஞ்
சுழியிலாருங் கடலிலோதந் தெண்டிரை மொண்டெறியப்
பழியிலார்கள் பயில்புகாரிற் பல்லவனீச்சரமே. 1.65.6
707 வெந்தலாய வேந்தன்வேள்வி வேரறச்சாடிவிண்ணோர்
வந்தெலாமுன் பேணநின்ற மைந்தன்மகிழ்ந்தவிடம்
மந்தலாய மல்லிகையும் புன்னைவளர்குரவின்
பந்தலாரும் பட்டினத்துப் பல்லவனீச்சரமே. 1.65.7
708 தேரரக்கன் மால்வரையைத் தெற்றியெடுக்கஅவன்
தாரரக்குந் திண்முடிகள் ஊன்றியசங்கரனூர்
காரரக்குங் கடல்கிளர்ந்த காலமெலாமுணரப்
பாரரக்கம் பயில்புகாரில் பல்லவனீச்சரமே. 1.65.8
709 அங்கமாறும் வேதநான்கும் ஓதும்அயன்நெடுமால்
தங்கணாலும் நேடநின்ற சங்கரன்தங்குமிடம்
வங்கமாரும் முத்தம்இப்பி வார்கடலூடலைப்பப்
பங்கமில்லார் பயில்புகாரிற் பல்லவனீச்சரமே. 1.65.9
710 உண்டுடுக்கை யின்றியேநின் றூர்நகவேதிரிவார்
கண்டுடுக்கை மெய்யிற்போர்த்தார் கண்டறியாதவிடந்
தண்டுடுக்கை தாளந்தக்கை சாரநடம்பயில்வார்
பண்டிடுக்கண் தீரநல்கும் பல்லவனீச்சரமே. 1.65.10
711 பத்தரேத்தும் பட்டினத்துப் பல்லவனீச்சரத்தெம்
அத்தன்தன்னை அணிகொள்காழி ஞானசம்பந்தன்சொல்
சித்தஞ்சேரச் செப்புமாந்தர் தீவினைநோயிலராய்
ஒத்தமைந்த உம்பர்வானில் உயர்வினொடோ ங்குவரே. 1.65.11
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - பல்லவனேசர், தேவியார் - சவுந்தராம்பிகையம்மை.
திருச்சிற்றம்பலம்