MEIKANDAR INSTITUTE &
SPIRITUAL SCHOOL OF LEARNING

chulinks.in




This part of web page is available as android app

* We need to pay for the server
* For operation we need funds
* Cosider helping us
* Support us by making a donation
* Donation allows us to work for you
* Donate via Paypal  



    1.67 திருப்பழனம்
    பண் - தக்கேசி

    722 வேதமோதி வெண்ணூல்பூண்டு வெள்ளையெருதேறிப்
    பூதஞ்சூழப் பொலியவருவார் புலியினுரிதோலார்
    நாதாஎனவும் நக்காஎனவும் நம்பாஎனநின்று
    பாதந்தொழுவார் பாவந்தீர்ப்பார் பழனநகராரே. 1.67.1
    723 கண்மேற்கண்ணுஞ் சடைமேற்பிறையும் உடையார்காலனைப்
    புண்ணாறுதிர மெதிராறோடப் பொன்றப்புறந்தாளால்
    எண்ணாதுதைத்த எந்தைபெருமான் இமவான்மகளோடும்
    பண்ணார்களிவண் டறைபூஞ்சோலைப் பழனநகராரே. 1.67.2
    724 பிறையும்புனலுஞ் சடைமேலுடையார் பறைபோல்விழிகட்பேய்
    உறையுமயான மிடமாவுடையார் உலகர்தலைமகன்
    அறையும்மலர்கொண் டடியார்பரவி ஆடல்பாடல்செய்
    பறையுஞ்சங்கும் பலியுமோவாப் பழனநகராரே. 1.67.3
    725 உரம்மன்னுயர்கோட் டுலறுகூகை யலறுமயானத்தில்
    இரவிற்பூதம் பாடஆடி எழிலாரலர்மேலைப்
    பிரமன்றலையின் நறவமேற்ற பெம்மானெமையாளும்
    பரமன்பகவன் பரமேச்சுவரன் பழனநகராரே. 1.67.4
    726 குலவெஞ்சிலையால் மதில்மூன்றெரித்த கொல்லேறுடையண்ணல்
    கலவமயிலுங் குயிலும்பயிலுங் கடல்போற்காவேரி
    நலமஞ்சுடைய நறுமாங்கனிகள் குதிகொண்டெதிருந்திப்
    பலவின்கனிகள் திரைமுன்சேர்க்கும் பழனநகராரே. 1.67.5
    727 வீளைக்குரலும் விளிசங்கொலியும் விழவின்னொலியோவா
    மூளைத்தலைகொண் டடியாரேத்தப் பொடியாமதிளெய்தார்
    ஈளைப்படுகில் இலையார்தெங்கின் குலையார்வாழையின்
    பாளைக்கமுகின் பழம்வீழ்சோலைப் பழனநகராரே. 1.67.6
    728 பொய்யாமொழியார் முறையாலேத்திப் புகழ்வார்திருமேனி
    செய்யார்கரிய மிடற்றார்வெண்ணூல் சேர்ந்தஅகலத்தார்
    கையாடலினார் புனலால்மல்கு சடைமேற்பிறையோடும்
    பையாடரவ முடனேவைத்தார் பழனநகராரே. 1.67.7
    729 மஞ்சோங்குயரம் உடையான்மலையை மாறாயெடுத்தான்றோள்
    அஞ்சோடஞ்சும் ஆறுநான்கும் அடரவூன்றினார்
    நஞ்சார்சுடலைப் பொடிநீறணிந்த நம்பான்வம்பாரும்
    பைந்தாமரைகள் கழனிசூழ்ந்த பழனநகராரே. 1.67.8
    730 கடியார்கொன்றைச் சுரும்பின்மாலை கமழ்புன்சடையார்விண்
    முடியாப்படிமூ வடியாலுலக முழுதுந்தாவிய
    நெடியான்நீள்தா மரைமேலயனும் நேடிக்காணாத
    படியார்பொடியா டகலமுடையார் பழனநகராரே. 1.67.9
    731 கண்டான்கழுவா முன்னேயோடிக் கலவைக்கஞ்சியை
    உண்டாங்கவர்கள் உரைக்குஞ்சிறுசொல் லோரார்பாராட்ட
    வண்டாமரையின் மலர்மேல்நறவ மதுவாய்மிகவுண்டு
    பண்டான்கெழும வண்டியாழ்செய்யும் பழனநகராரே. 1.67.10
    732 வேய்முத்தோங்கி விரைமுன்பரக்கும் வேணுபுரந்தன்னுள்
    நாவுய்த்தனைய திறலான்மிக்க ஞானசம்பந்தன்
    பேசற்கினிய பாடல்பயிலும் பெருமான்பழனத்தை
    வாயிற்பொலிந்த மாலைபத்தும் வல்லார்நல்லாரே. 1.67.11

    இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
    சுவாமிபெயர் - ஆபத்சகாயர், தேவியார் - பெரியநாயகியம்மை.

    திருச்சிற்றம்பலம்