MEIKANDAR INSTITUTE &
SPIRITUAL SCHOOL OF LEARNING

chulinks.in




This part of web page is available as android app

* We need to pay for the server
* For operation we need funds
* Cosider helping us
* Support us by making a donation
* Donation allows us to work for you
* Donate via Paypal  



    1.70 திரு ஈங்கோய்மலை
    பண் - தக்கேசி

    754 வானத்துயர்தண் மதிதோய்சடைமேல் மத்தமலர்சூடித்
    தேனொத்தனமென் மொழிமான்விழியாள் தேவிபாகமாக்
    கானத்திரவில் எரிகொண்டாடுங் கடவுளுலகேத்த
    ஏனத்திரள்வந் திழியுஞ்சாரல் ஈங்கோய்மலையாரே. 1.70.1
    755 சூலப்படையொன் றேந்தியிரவிற் சுடுகாடிடமாகக்
    கோலச்சடைகள்தாழக் குழல்யாழ் மொந்தைகொட்டவே
    பாலொத்தனைய மொழியாள்காண ஆடும்பரமனார்
    ஏலத்தொடுநல் இலவங்கமழும் ஈங்கோய்மலையாரே. 1.70.2
    756 கண்கொள்நுதலார் கறைகொள்மிடற்றார் கரியினுரிதோலார்
    விண்கொள்மதிசேர் சடையார்விடையார் கொடியார்வெண்ணீறு
    பெண்கொள்திருமார் பதனில்பூசும் பெம்மானெமையாள்வார்
    எண்கும்அரியுந் திரியுஞ்சாரல் ஈங்கோய்மலையாரே. 1.70.3
    757 மறையின்னிசையார் நெறிமென்கூந்தல் மலையான்மகளோடுங்
    குறைவெண்பிறையும் புனலும்நிலவுங் குளிர்புன்சடைதாழப்
    பறையுங்குழலுங் கழலுமார்ப்பப் படுகாட்டெரியாடும்
    இறைவர்சிறைவண் டறைபூஞ்சாரல் ஈங்கோய்மலையாரே. 1.70.4
    758 நொந்தசுடலைப் பொடிநீறணிவார் நுதல்சேர்கண்ணினார்
    கந்தமலர்கள் பலவும்நிலவு கமழ்புன்சடைதாழப்
    பந்தண்விரலாள் பாகமாகப் படுகாட்டெரியாடும்
    எந்தம்மடிகள் கடிகொள்சாரல் ஈங்கோய்மலையாரே. 1.70.5
    759 நீறாரகலம் உடையார்நிரையார் கொன்றையரவோடும்
    ஆறார்சடையார் அயில்வெங்கணையால் அவுணர்புரம்மூன்றுஞ்
    சீறாவெரிசெய் தேவர்பெருமான் செங்கண்அடல்வெள்ளை
    ஏறார்கொடியார் உமையாளோடும் ஈங்கோய்மலையாரே. 1.70.6
    760 வினையாயினதீர்த் தருளேபுரியும் விகிர்தன்விரிகொன்றை
    நனையார்முடிமேல் மதியஞ்சூடும் நம்பானலமல்கு
    தனையார்கமல மலர்மேலுறைவான் தலையோடனலேந்தும்
    எனையாளுடையான் உமையாளோடும் ஈங்கோய்மலையாரே. 1.70.7
    761 பரக்கும்பெருமை இலங்கையென்னும் பதியிற்பொலிவாய
    அரக்கர்க்கிறைவன் முடியுந்தோளும் அணியார்விரல்தன்னால்
    நெருக்கியடர்த்து நிமலாபோற்றி யென்றுநின்றேத்த
    இரக்கம்புரிந்தார் உமையாளோடும் ஈங்கோய்மலையாரே. 1.70.8
    762 வரியார்புலியின் உரிதோலுடையான் மலையான்மகளோடும்
    பிரியாதுடனாய் ஆடல்பேணும் பெம்மான்திருமேனி
    அரியோடயனும் அறியாவண்ணம் அளவில்பெருமையோ
    டெரியாய்நிமிர்ந்த எங்கள்பெருமான் ஈங்கோய்மலையாரே. 1.70.9
    763 பிண்டியேன்று பெயராநிற்கும் பிணங்குசமணரும்
    மண்டைகலனாக் கொண்டுதிரியும் மதியில்தேரரும்
    உண்டிவயிறார் உரைகள்கொள்ளா துமையோடுடனாகி
    இண்டைச்சடையான் இமையோர்பெருமான் ஈங்கோய்மலையாரே. 1.70.10
    764 விழவாரொலியும் முழவும்ஓவா வேணுபுரந்தன்னுள்
    அழலார்வண்ணத் தடிகளருள்சேர் அணிகொள்சம்பந்தன்
    எழிலார்சுனையும் பொழிலும்புடைசூழ் ஈங்கோய்மலையீசன்
    கழல்சேர்பாடல் பத்தும்வல்லார் கவலைகளைவாரே. 1.70.11

    திருச்சிற்றம்பலம்