1.74 திருப்புறவம்
பண் - தக்கேசி
798 நறவநிறைவண் டறைதார்க்கொன்றை நயந்துநயனத்தால்
சுறவஞ்செறிவண் கொடியோனுடலம் பொடியாவிழிசெய்தான்
புறவமுறைவண் பதியாமதியார் புரமூன்றெரிசெய்த
இறைவனறவன் இமையோரேத்த உமையோடிருந்தானே. 1.74.1
799 உரவன்புலியின் உரிதோலாடை உடைமேல்படநாகம்
விரவிவிரிபூங் கச்சாவசைத்த விகிர்தன்னுகிர்தன்னால்
பொருவெங்களிறு பிளிறவுரித்துப் புறவம்பதியாக
இரவும்பகலும் இமையோரேத்த உமையோடிருந்தானே. 1.74.2
800 பந்தமுடைய பூதம்பாடப் பாதஞ்சிலம்பார்க்கக்
கந்தமல்கு குழலிகாணக் கரிகாட்டெரியாடி
அந்தண்கடல்சூழ்ந் தழகார்புறவம் பதியாவமர்வெய்தி
எந்தம்பெருமான் இமையோரேத்த உமையோடிருந்தானே. 1.74.3
801 நினைவார்நினைய இனியான்பனியார் மலர்தூய்நித்தலுங்
கனையார்விடையொன் றுடையான்கங்கை திங்கள்கமழ்கொன்றைப்
புனைவார்சடையின் முடியான்கடல்சூழ் புறவம்பதியாக
எனையாளுடையான் இமையோரேத்த உமையோடிருந்தானே. 1.74.4
802 செங்கண்அரவும் நகுவெண்டலையும் முகிழ்வெண்திங்களுந்
தங்குசடையன் விடையனுடையன் சரிகோவணஆடை
பொங்குதிரைவண் கடல்சூழ்ந்தழகார் புறவம்பதியாக
எங்கும்பரவி இமையோரேத்த உமையோடிருந்தானே. 1.74.5
803 பின்னுசடைகள் தாழக்கேழல் எயிறுபிறழப்போய்
அன்னநடையார் மனைகள்தோறும் அழகார்பலிதேர்ந்து
புன்னைமடலின் பொழில்சூழ்ந்தழகார் புறவம்பதியாக
என்னையுடையான் இமையோரேத்த உமையோடிருந்தானே. 1.74.6
804 உண்ணற்கரிய நஞ்சையுண் டொருதோழந்தேவர்
விண்ணிற்பொலிய அமுதமளித்த விடைசேர்கொடியண்ணல்
பண்ணிற்சிறைவண் டறைபூஞ்சோலைப் புறவம்பதியாக
எண்ணிற்சிறந்த இமையோரேத்த உமையோடிருந்தானே. 1.74.7
805 விண்டானதிர வியனார்கயிலை வேரோடெடுத்தான்றன்
திண்டோ ளுடலும் முடியுநெரியச் சிறிதேயூன்றிய
புண்டானொழிய அருள்செய்பெருமான் புறவம்பதியாக
எண்டோ ளுடையான் இமையோரேத்த உமையோடிருந்தானே. 1.74.8
806 நெடியான்நீள்தா மரைமேலயனும் நேடிக்காண்கில்லாப்
படியாமேனி யுடையான்பவள வரைபோல்திருமார்பிற்
பொடியார்கோலம் உடையான்கடல்சூழ் புறவம்பதியாக
இடியார்முழவார் இமையோரேத்த உமையோடிருந்தானே. 1.74.9
807 ஆலும்மயிலின் பீலியமணர் அறிவில்சிறுதேரர்
கோலும்மொழிகள் ஒழியக்குழுவுந் தழலுமெழில்வானும்
போலும்வடிவும் உடையான்கடல்சூழ் புறவம்பதியாக
ஏலும்வகையான் இமையோரேத்த உமையோடிருந்தானே. 1.74.10
808 பொன்னார்மாடம் நீடுஞ்செல்வப் புறவம்பதியாக
மின்னாரிடையாள் உமையாளோடும் இருந்தவிமலனைத்
தன்னார்வஞ்செய் தமிழின்விரகன் உரைத்ததமிழ்மாலை
பன்னாள்பாடி யாடப்பிரியார் பரலோகந்தானே. 1.74.11
திருப்புறவம் என்பதும் சீகாழிக்கொருபெயர்.
திருச்சிற்றம்பலம்