MEIKANDAR INSTITUTE &
SPIRITUAL SCHOOL OF LEARNING

chulinks.in




This part of web page is available as android app

* We need to pay for the server
* For operation we need funds
* Cosider helping us
* Support us by making a donation
* Donation allows us to work for you
* Donate via Paypal  


    1.75 திருவெங்குரு
    பண் - குறிஞ்சி

    809 காலைநன் மாமலர் கொண்டடி பரவிக்
    கைதொழு மாணியைக் கறுத்தவெங் காலன்
    ஓலம திடமுன் உயிரொடு மாள
    உதைத்தவ னுமையவள் விருப்பனெம் பெருமான்
    மாலைவந் தணுக ஓதம்வந் துலவி
    மறிதிரை சங்கொடு பவளம்முன் உந்தி
    வேலைவந் தணையுஞ் சோலைகள் சூழ்ந்த
    வெங்குரு மேவியுள் வீற்றிருந் தாரே. 1.75.1
    810 பெண்ணினைப் பாகம் அமர்ந்துசெஞ் சடைமேற்
    பிறையொடும் அரவினை யணிந் தழகாகப்
    பண்ணினைப் பாடி யாடிமுன் பலிகொள்
    பரமரெம் மடிகளார் பரிசுகள் பேணி
    மண்ணினை மூடி வான்முக டேறி
    மறிதிரை கடல்முகந் தெடுப்பமற் றுயர்ந்து
    விண்ணள வோங்கி வந்திழி கோயில்
    வெங்குரு மேவியுள் வீற்றிருந் தாரே. 1.75.2
    811 ஓரியல் பில்லா உருவம தாகி
    ஒண்டிறல் வேடன துருவது கொண்டு
    காரிகை காணத் தனஞ்சயன் றன்னைக்
    கறுத்தவற் களித்துடன் காதல்செய் பெருமான்
    நேரிசை யாக அறுபத முரன்று
    நிரைமலர்த் தாதுகள் மூசவிண் டுதிர்ந்து
    வேரிக ளெங்கும் விம்மிய சோலை
    வெங்குரு மேவியுள் வீற்றிருந் தாரே. 1.75.3
    812 வண்டணை கொன்றை வன்னியு மத்தம்
    மருவிய கூவிளம் எருக்கொடு மிக்க
    கொண்டணி சடையர் விடையினர் பூதங்
    கொடுகொட்டி குடமுழாக் கூடியு முழவப்
    பண்டிகழ் வாகப் பாடியோர் வேதம்
    பயில்வர்முன் பாய்புனற் கங்கையைச் சடைமேல்
    வெண்பிறை சூடி உமையவ ளோடும்
    வெங்குரு மேவியுள் வீற்றிருந் தாரே. 1.75.4
    813 சடையினர் மேனி நீறது பூசித்
    தக்கைகொள் பொக்கண மிட்டுட னாகக்
    கடைதொறும் வந்து பலியது கொண்டு
    கண்டவர் மனமவை கவர்ந் தழகாகப்
    படையது ஏந்திப் பைங்கயற் கண்ணி
    உமையவள் பாகமு மமர்ந்தருள் செய்து
    விடையொடு பூதஞ் சூழ்தரச் சென்று
    வெங்குரு மேவியுள் வீற்றிருந் தாரே. 1.75.5
    814 கரைபொரு கடலில் திரையது மோதக்
    கங்குல்வந் தேறிய சங்கமு மிப்பி
    உரையுடை முத்தம் மணலிடை வைகி
    ஓங்குவா னிருளறத் துரப்பவெண் டிசையும்
    புரைமலி வேதம் போற்றுபூ சுரர்கள்
    புரிந்தவர் நலங்கொள்ஆ குதியினில் நிறைந்த
    விரைமலி தூபம் விசும்பினை மறைக்கும்
    வெங்குரு மேவியுள் வீற்றிருந் தாரே. 1.75.6
    815 வல்லிநுண் ணிடையாள் உமையவள் தன்னை
    மறுகிட வருமத களிற்றினை மயங்க
    ஒல்லையிற் பிடித்தங் குரித்தவள் வெருவல்
    கெடுத்தவர் விரிபொழில் மிகுதிரு ஆலில்
    நல்லற முரைத்து ஞானமோ டிருப்ப
    நலிந்திட லுற்று வந்தவக் கருப்பு
    வில்லியைப் பொடிபட விழித்தவர் விரும்பி
    வெங்குரு மேவியுள் வீற்றிருந் தாரே. 1.75.7
    816 பாங்கிலா வரக்கன் கயிலைஅன் றெடுப்பப்
    பலதலை முடியொடு தோளவை நெரிய
    ஓங்கிய விரலால் ஊன்றியன் றவற்கே
    ஒளிதிகழ் வாளது கொடுத் தழகாய
    கோங்கொடு செருந்தி கூவிள மத்தம்
    கொன்றையுங் குலாவிய செஞ்சடைச் செல்வர்
    வேங்கைபொன் மலரார் விரைதரு கோயில்
    வெங்குரு மேவியுள் வீற்றிருந் தாரே. 1.75.8
    817 ஆறுடைச் சடையெம் அடிகளைக் காண
    அரியொடு பிரமனும் அளப்பதற் காகிச்
    சேறிடைத் திகழ்வா னத்திடை புக்குஞ்
    செலவறத் தவிர்ந்தனர் எழிலுடைத் திகழ்வெண்
    நீறுடைக் கோல மேனியர் நெற்றிக்
    கண்ணினர் விண்ணவர் கைதொழு தேத்த
    வேறெமை யாள விரும்பிய விகிர்தர்
    வெங்குரு மேவியுள் வீற்றிருந் தாரே. 1.75.9
    818 பாடுடைக் குண்டர் சாக்கியர் சமணர்
    பயில்தரு மறவுரை விட்டழ காக
    ஏடுடை மலராள் பொருட்டு வன்தக்கன்
    எல்லையில் வேள்வியைத் தகர்த்தருள் செய்து
    காடிடைக் கடிநாய் கலந்துடன் சூழக்
    கண்டவர் வெருவுற விளித்து வெய்தாய
    வேடுடைக் கோலம் விரும்பிய விகிர்தர்
    வெங்குரு மேவியுள் வீற்றிருந் தாரே. 1.75.10
    819 விண்ணியல் விமானம் விரும்பிய பெருமான்
    வெங்குரு மேவியுள் வீற்றிருந் தாரை
    நண்ணிய நூலன் ஞானச ம்பந்தன்
    நவின்றயிவ் வாய்மொழி நலம்மிகு பத்தும்
    பண்ணியல் பாகப் பத்திமை யாலே
    பாடியு மாடியும் பயில வல்லார்கள்
    விண்ணவர் விமானங் கொடுவர வேறி
    வியனுல காண்டுவீற் றிருப்பவர் தாமே. 1.75.11

    இதுவுஞ் சீகாழிக்குப்பெயர்.

    திருச்சிற்றம்பலம்