MEIKANDAR INSTITUTE &
SPIRITUAL SCHOOL OF LEARNING

chulinks.in




This part of web page is available as android app

* We need to pay for the server
* For operation we need funds
* Cosider helping us
* Support us by making a donation
* Donation allows us to work for you
* Donate via Paypal  



    1.76 திரு இலம்பையங்கோட்டூர்
    பண் - குறிஞ்சி

    820 மலையினார் பருப்பதந் துருத்தி மாற்பேறு
    மாசிலாச் சீர்மறைக் காடுநெய்த் தானம்
    நிலையினான் எனதுரை தனதுரை யாக
    நீறணிந் தேறுகந் தேறிய நிமலன்
    கலையினார் மடப்பிணை துணையொடுந் துயிலக்
    கானலம் பெடைபுல்கிக் கணமயி லாலும்
    இலையினார் பைம்பொழில் இலம்பையங் கோட்டூர்
    இருக்கையாப் பேணியென் எழில்கொள்வ தியல்பே. 1.76.1
    821 திருமலர்க் கொன்றையான் நின்றியூர் மேயான்
    தேவர்கள் தலைமகன் திருக்கழிப் பாலை
    நிருமல னெனதுரை தனதுரை யாக
    நீறணிந் தேறுகந் தேறிய நிமலன்
    கருமலர்க் கமழ்சுனை நீள்மலர்க் குவளை
    கதிர்முலை யிளையவர் மதிமுகத் துலவும்
    இருமலர்த் தண்பொய்கை இலம்பையங் கோட்டூர்
    இருக்கையாப் பேணியென் எழில்கொள்வ தியல்பே. 1.76.2
    822 பாலனாம் விருத்தனாம் பசுபதி தானாம்
    பண்டுவெங் கூற்றுதைத் தடியவர்க் கருளுங்
    காலனாம் எனதுரை தனதுரை யாகக்
    கனலெரி யங்கையில் ஏந்திய கடவுள்
    நீலமா மலர்ச்சுனை வண்டுபண் செய்ய
    நீர்மலர்க் குவளைகள் தாதுவிண் டோ ங்கும்
    ஏலம்நா றும்பொழில் இலம்பையங் கோட்டூர்
    இருக்கையாப் பேணியென் எழில்கொள் வதியல்பே. 1.76.3
    823 உளங்கொள்வார் உச்சியார் கச்சியே கம்பன்
    ஒற்றியூ ருறையுமண் ணாமலை யண்ணல்
    விளம்புவா னெனதுரை தனதுரை யாக
    வெள்ளநீர் விரிசடைத் தாங்கிய விமலன்
    குளம்புறக் கலைதுள மலைகளுஞ் சிலம்பக்
    கொழுங்கொடி யெழுந்தெங்குங் கூவிளங் கொள்ள
    இளம்பிறை தவழ்பொழில் இலம்பையங் கோட்டூர்
    இருக்கையாப் பேணியென் எழில்கொள்வ தியல்பே. 1.76.4
    824 தேனுமா யமுதமாய்த் தெய்வமுந் தானாய்த்
    தீயொடு நீருடன் வாயுவாந் தெரியில்
    வானுமா மெனதுரை தனதுரை யாக
    வரியரா வரைக்கசைத் துழிதரு மைந்தன்
    கானமான் வெருவுறக் கருவிர லூகங்
    கடுவனோ டுகளுமூர் கற்கடுஞ் சாரல்
    ஏனமா னுழிதரும் இலம்பையங் கோட்டூர்
    இருக்கையாப் பேணியென் எழில்கொள்வ தியல்பே. 1.76.5
    825 மனமுலாம் அடியவர்க் கருள்புரி கின்ற
    வகையலாற் பலிதிரிந் துண்பிலான் மற்றோர்
    தனமிலா னெனதுரை தனதுரை யாகத்
    தாழ்சடை யிளமதி தாங்கிய தலைவன்
    புனமெலாம் அருவிகள் இருவிசேர் முத்தம்
    பொன்னொடு மணிகொழித் தீண்டிவந் தெங்கும்
    இனமெலாம் அடைகரை இலம்பையங் கோட்டூர்
    இருக்கையாப் பேணியென் எழில்கொள்வ தியல்பே. 1.76.6
    826 நீருளான் தீயுளான் அந்தரத் துள்ளான்
    நினைப்பவர் மனத்துளான் நித்தமா ஏத்தும்
    ஊருளான் எனதுரை தனதுரை யாக
    ஒற்றைவெள் ளேறுகந் தேறிய வொருவன்
    பாருளார் பாடலோ டாடல றாத
    பண்முரன் றஞ்சிறை வண்டினம் பாடும்
    ஏருளார் பைம்பொழில் இலம்பையங் கோட்டூர்
    இருக்கையாப் பேணியென் எழில்கொள்வ தியல்பே. 1.76.7
    827 வேருலா மாழ்கடல் வருதிரை யிலங்கை
    வேந்தன தடக்கைகள் அடர்த்தவ னுலகில்
    ஆருலா மெனதுரை தனதுரை யாக
    ஆகமோ ரரவணிந் துழிதரு மண்ணல்
    வாருலா நல்லன மாக்களுஞ் சார
    வாரண முழிதரும் மல்லலங் கானல்
    ஏருலாம் பொழிலணி இலம்பையங் கோட்டூர்
    இருக்கையாப் பேணியென் எழில்கொள்வ தியல்பே. 1.76.8
    828 கிளர்மழை தாங்கினான் நான்முக முடையோன்
    கீழடி மேல்முடி தேர்ந்தளக் கில்லா
    உளமழை யெனதுரை தனதுரை யாக
    வொள்ளழல் அங்கையி லேந்திய வொருவன்
    வளமழை யெனக்கழை வளர்துளி சோர
    மாசுண முழிதரு மணியணி மாலை
    இளமழை தவழ்பொழில் இலம்பையங் கோட்டூர்
    இருக்கையாப் பேணியென் எழில்கொள்வ தியல்பே. 1.76.9
    829 உரிஞ்சன கூறைகள் உடம்பின ராகி
    உழிதரு சமணருஞ் சாக்கியப் பேய்கள்
    பெருஞ்செல்வ னெனதுரை தனதுரை யாகப்
    பெய்பலிக் கென்றுழல் பெரியவர் பெருமான்
    கருஞ்சுனை முல்லைநன் பொன்னடை வேங்கைக்
    களிமுக வண்டொடு தேனின முரலும்
    இருஞ்சுனை மல்கிய இலம்பையங் கோட்டூர்
    இருக்கையாப் பேணியென் எழில்கொள்வ தியல்பே. 1.76.10
    830 கந்தனை மலிகனை கடலொலி யோதங்
    கானலங் கழிவளர் கழுமல மென்னும்
    நந்தியா ருறைபதி நால்மறை நாவன்
    நற்றமிழ்க் கின்துணை ஞானசம் பந்தன்
    எந்தையார் வளநகர் இலம்பையங் கோட்டூர்
    இசையொடு கூடிய பத்தும்வல் லார்போய்
    வெந்துயர் கெடுகிட விண்ணவ ரோடும்
    வீடுபெற் றிம்மையின் வீடெளி தாமே. 1.76.11

    இத்தலம் தொண்டைநாட்டிலுள்ளது.
    சுவாமிபெயர் - சந்திரசேகரர், தேவியார் - கோடேந்துமுலையம்மை.

    திருச்சிற்றம்பலம்