MEIKANDAR INSTITUTE &
SPIRITUAL SCHOOL OF LEARNING

chulinks.in




This part of web page is available as android app

* We need to pay for the server
* For operation we need funds
* Cosider helping us
* Support us by making a donation
* Donation allows us to work for you
* Donate via Paypal  



    1.77 திருஅச்சிறுபாக்கம்
    பண் - குறிஞ்சி

    831 பொன்றிரண் டன்ன புரிசடை புரள
    பொருகடற் பவளமொ டழல்நிறம் புரையக்
    குன்றிரண் டன்ன தோளுடை யகலங்
    குலாயவெண் ணூலொடு கொழும்பொடி யணிவர்
    மின்றிரண் டன்ன நுண்ணிடை யரிவை
    மெல்லிய லாளையோர் பாகமாப் பேணி
    அன்றிரண் டுருவ மாயவெம் அடிகள்
    அச்சிறு பாக்கம தாட்சிகொண் டாரே. 1.77.1
    832 தேனினு மினியர் பாலன நீற்றர்
    தீங்கரும் பனையர்தந் திருவடி தொழுவார்
    ஊன்நயந் துருக உவகைகள் தருவார்
    உச்சிமே லுறைபவர் ஒன்றலா தூரார்
    வானக மிறந்து வையகம் வணங்க
    வயங்கொள நிற்பதோர் வடிவினை யுடையார்
    ஆனையி னுரிவை போர்த்தவெம் மடிகள்
    அச்சிறு பாக்கம தாட்சிகொண் டாரே. 1.77.2
    833 காரிரு ளுருவ மால்வரை புரையக்
    களிற்றின துரிவைகொண் டரிவைமே லோடி
    நீருரு மகளை நிமிர்சடைத் தாங்கி
    நீறணிந் தேறுகந் தேறிய நிமலர்
    பேரரு ளாளர் பிறவியில் சேரார்
    பிணியிலர் கேடிலர் பேய்க்கணஞ் சூழ
    ஆரிருள் மாலை ஆடுமெம் மடிகள்
    அச்சிறு பாக்கம தாட்சிகொண் டாரே. 1.77.3
    834 மைம்மலர்க் கோதை மார்பின ரெனவும்
    மலைமக ளவளொடு மருவின ரெனவும்
    செம்மலர்ப் பிறையுஞ் சிறையணி புனலுஞ்
    சென்னிமே லுடையரெஞ் சென்னிமே லுறைவார்
    தம்மல ரடியொன் றடியவர் பரவத்
    தமிழ்ச்சொலும் வடசொலுந் தாள்நிழற் சேர
    அம்மலர்க் கொன்றை யணிந்த வெம்மடிகள்
    அச்சிறு பாக்கம தாட்சிகொண் டாரே. 1.77.4
    835 விண்ணுலா மதியஞ் சூடின ரெனவும்
    விரிசடை யுள்ளது வெள்ளநீ ரெனவும்
    பண்ணுலாம் மறைகள் பாடின ரெனவும்
    பலபுக ழல்லது பழியில ரெனவும்
    எண்ணலா காத இமையவர் நாளும்
    ஏத்தர வங்களோ டெழில்பெற நின்ற
    அண்ணலா னூர்தி ஏறுமெம் மடிகள்
    அச்சிறு பாக்கம தாட்சிகொண் டாரே. 1.77.5
    836 நீடிருஞ் சடைமேல் இளம்பிறை துளங்க
    நிழல்திகழ் மழுவொடு நீறுமெய் பூசித்
    தோடொரு காதினிற் பெய்துவெய் தாய
    சுடலையி லாடுவர் தோலுடை யாகக்
    காடரங் காகக் கங்குலும் பகலுங்
    கழுதொடு பாரிடங் கைதொழு தேத்த
    ஆடர வாட ஆடுமெம் மடிகள்
    அச்சிறு பாக்கம தாட்சிகொண் டாரே. 1.77.6
    837 ஏறுமொன் றேறி நீறுமெய் பூசி
    இளங்கிளை யரிவையொ டொருங்குட னாகிக்
    கூறுமொன் றருளிக் கொன்றையந் தாருங்
    குளிரிள மதியமுங் கூவிள மலரும்
    நாறுமல் லிகையும் எருக்கொடு முருக்கும்
    மகிழிள வன்னியும் இவைநலம் பகர
    ஆறுமோர் சடைமேல் அணிந்த வெம்மடிகள்
    அச்சிறு பாக்கம தாட்சிகொண் டாரே. 1.77.7
    838 கச்சும்ஒள் வாளுங் கட்டிய வுடையர்
    கதிர்முடி சுடர்விடக் கவரியுங் குடையும்
    பிச்சமும் பிறவும் பெண்ணணங் காய
    பிறைநுத லவர்தமைப் பெரியவர் பேணப்
    பச்சமும் வலியுங் கருதிய வரக்கன்
    பருவரை யெடுத்ததிண் டோ ள்களை யடர்வித்
    தச்சமும் அருளுங் கொடுத்த வெம்மடிகள்
    அச்சிறு பாக்கம தாட்சி கொண்டாரே. 1.77.8
    839 நோற்றலா ரேனும் வேட்டலா ரேனும்
    நுகர்புகர் சாந்தமோ டேந்திய மாலைக்
    கூற்றலா ரேனும் இன்னவா றென்றும்
    எய்தலா காததோர் இயல்பினை யுடையார்
    தோற்றலார் மாலும் நான்முக முடைய
    தோன்றலும் அடியொடு முடியுறத் தங்கள்
    ஆற்றலாற் காணா ராயவெம் மடிகள்
    அச்சிறு பாக்கம தாட்சிகொண் டாரே. 1.77.9
    840 வாதுசெய் சமணுஞ் சாக்கியப்பேய்கள்
    நல்வினை நீக்கிய வல்வினை யாளர்
    ஓதியுங் கேட்டும் உணர்வினை யிலாதார்
    உள்கலா காததோர் இயல்பினை யுடையார்
    வேதமும் வேத நெறிகளு மாகி
    விமலவே டத்தொடு கமலமா மதிபோல்
    ஆதியும் ஈறும் ஆயவெம் மடிகள்
    அச்சிறு பாக்கம தாட்சிகொண் டாரே. 1.77.10
    841 மைச்செறி குவளை தவளைவாய் நிறைய
    மதுமலர்ப் பொய்கையிற் புதுமலர் கிழியப்
    பச்சிற வெறிவயல் வெறிகமழ் காழிப்
    பதியவ ரதிபதி கவுணியர் பெருமான்
    கைச்சிறு மறியவன் கழலலாற் பேணாக்
    கருத்துடை ஞானசம் பந்தன தமிழ்கொண்
    டச்சிறு பாக்கத் தடிகளை யேத்தும்
    அன்புடை யடியவர் அருவினை யிலரே. 1.77.11

    இத்தலம் தொண்டைநாட்டிலுள்ளது.
    சுவாமிபெயர் - பாக்கபுரேசர், தேவியார் - சுந்தரமாதம்மை.

    திருச்சிற்றம்பலம்