1.79 திருக்கழுமலம்
பண் - குறிஞ்சி
853 அயிலுறு படையினர் விடையினர் முடிமேல்
அரவமும் மதியமும் விரவிய அழகர்
மயிலுறு சாயல் வனமுலை யொருபால்
மகிழ்பவர் வானிடை முகில்புல்கு மிடறர்
பயில்வுறு சரிதையர் எருதுகந் தேறிப்
பாடியு மாடியும் பலிகொள்வர் வலிசேர்
கயிலையும் பொதியிலும் இடமென வுடையார்
கழுமலம் நினையநம் வினைகரி சறுமே. 1.79.1
854 கொண்டலும் நீலமும் புரைதிரு மிடறர்
கொடுமுடி யுறைபவர் படுதலைக் கையர்
பண்டல ரயன்சிரம் அரிந்தவர் பொருந்தும்
படர்சடை யடிகளார் பதியத னயலே
வண்டலும் வங்கமுஞ் சங்கமுஞ் சுறவும்
மறிகடல் திரைகொணர்ந் தெற்றிய கரைமேற்
கண்டலுங் கைதையும் நெய்தலுங் குலவுங்
கழுமலம் நினையநம் வினைகரி சறுமே. 1.792
855 எண்ணிடை யொன்றினர் இரண்டின ருருவம்
எரியிடை மூன்றினர் நான்மறை யாளர்
மண்ணிடை ஐந்தினர் ஆறின ரங்கம்
வகுத்தன ரேழிசை எட்டிருங் கலைசேர்
பண்ணிடை யொன்பதும் உணர்ந்தவர் பத்தர்
பாடிநின் றடிதொழ மதனனை வெகுண்ட
கண்ணிடைக் கனலினர் கருதிய கோயில்
கழுமலம் நினையநம் வினைகரி சறுமே. 1.79.3
856 எரியொரு கரத்தினர் இமையவர்க் கிறைவர்
ஏறுகந் தேறுவர் நீறுமெய் பூசித்
திரிதரு மியல்பினர் அயலவர் புரங்கள்
தீயெழ விழித்தனர் வேய்புரை தோளி
வரிதரு கண்ணிணை மடவர லஞ்ச
மஞ்சுற நிமிர்ந்ததோர் வடிவொடும் வந்த
கரியுரி மருவிய அடிகளுக் கிடமாங்
கழுமலம் நினையநம் வினைகரி சறுமே. 1.79.4
857 ஊரெதிர்ந் திடுபலி தலைகல னாக
உண்பவர் விண்பொலிந் திலங்கிய வுருவர்
பாரெதிர்ந் தடிதொழ விரைதரு மார்பிற்
படஅர வாமையக் கணிந்தவர்க் கிடமாம்
நீரெதிர்ந் திழிமணி நித்தில முத்தம்
நிரைசொரி சங்கமொ டொண்மணி வரன்றிக்
காரெதிர்ந் தோதம்வன் திரைகரைக் கெற்றுங்
கழுமலம் நினையநம் வினைகரி சறுமே. 1.79.5
858 முன்னுயிர்த் தோற்றமும் இறுதியு மாகி
முடியுடை அமரர்கள் அடிபணிந் தேத்தப்
பின்னிய சடைமிசைப் பிறைநிறை வித்த
பேரரு ளாளனார் பேணிய கோயில்
பொன்ணியல் நறுமலர் புனலொடு தூபஞ்
சாந்தமு மேந்திய கையின ராகிக்
கன்னியர் நாடொறும் வேடமே பரவுங்
கழுமலம் நினையநம் வினைகரி சறுமே. 1.79.6
859 கொலைக்கணித் தாவரு கூற்றுதை செய்தார்
குரைகழல் பணிந்தவர்க் கருளிய பொருளின்
நிலைக்கணித் தாவர நினையவல் லார்தம்
நெடுந்துயர் தவிர்த்தவெம் நிமலருக் கிடமாம்
மலைக்கணித் தாவர வன்றிரை முரல
மதுவிரி புன்னைகள் முத்தென வரும்பக்
கலைக்கணங் கானலின் நீழலில் வாழுங்
கழுமலம் நினையநம் வினைகரி சறுமே. 1.79.7
860 புயம்பல வுடையதென் இலங்கையர் வேந்தன்
பொருவரை யெடுத்தவன் பொன்முடி திண்டோ ள்
பயம்பல படவடர்த் தருளிய பெருமான்
பரிவொடு மினிதுறை கோயில தாகும்
வியன்பல விண்ணினும் மண்ணினு மெங்கும்
வேறுவே றுகங்களிற் பெயருள தென்னக்
கயம்பல படக்கடற் றிரைகரைக் கெற்றுங்
கழுமலம் நினையநம் வினைகரி சறுமே. 1.79.8
861 விலங்கலொன் றேந்திவன் மழைதடுத் தோனும்
வெறிகமழ் தாமரை யோனுமென் றிவர்தம்
பலங்களால் நேடியும் அறிவரி தாய
பரிசினன் மருவிநின் றினிதுறை கோயில்
மலங்கிவன் றிரைவரை எனப்பரந் தெங்கும்
மறிகட லோங்கிவெள் ளிப்பியுஞ் சுமந்து
கலங்கடன் சரக்கொடு நிரக்கவந் தேறுங்
கழுமலம் நினையநம் வினைகரி சறுமே. 1.79.9
862 ஆம்பல தவமுயன் றறவுரை சொல்லும்
அறிவிலாச் சமணருந் தேரருங் கணிசேர்
நோம்பல தவமறி யாதவர் நொடிந்த
மூதுரை கொள்கிலா முதல்வர் தம்மேனிச்
சாம்பலும் பூசிவெண் டலைகல னாகத்
தையலா ரிடுபலி வையகத் தேற்றுக்
காம்பன தோளியொ டினிதுறை கோயில்
கழுமலம் நினையநம் வினைகரி சறுமே. 1.79.10
863 கலிகெழு பாரிடை யூரென வுளதாங்
கழுமலம் விரும்பிய கோயில்கொண் டவர்மேல்
வலிகெழு மனம்மிக வைத்தவன் மறைசேர்
வருங்கலை ஞானசம் பந்தன தமிழின்
ஒலிகெழு மாலையென் றுரைசெய்த பத்தும்
உண்மையி னால்நினைந் தேத்தவல் லார்மேல்
மெலிகெழு துயரடை யாவினை சிந்தும்
விண்ணவ ராற்றலின் மிகப்பெறு வாரே. 1.79.11
திருச்சிற்றம்பலம்