1.81 சீர்காழி
பண் - குறிஞ்சி
875 நல்லார் தீமேவுந் தொழிலார் நால்வேதஞ்
சொல்லார் கேண்மையார் சுடர்பொற் கழலேத்த
வில்லாற் புரஞ்செற்றான் மேவும் பதிபோலுங்
கல்லார் மதில்சூழ்ந்த காழிந் நகர்தானே. 1.81.1
876 துளிவண் டேன்பாயும் இதழி தூமத்தந்
தெளிவெண் டிங்கள்மா சுணநீர் திகழ்சென்னி
ஒளிவெண் டலைமாலை உகந்தா னூர்போலுங்
களிவண்டியாழ் செய்யுங் காழிந் நகர்தானே. 1.81.2
877 ஆலக் கோலத்தின் நஞ்சுண் டமுதத்தைச்
சாலத் தேவர்க்கீந் தளித்தான் தன்மையால்
பாலற் காய்நன்றும் பரிந்து பாதத்தால்
காலற் காய்ந்தானூர் காழிந் நகர்தானே. 1.81.3
() இப்பதிகத்தில் 4,5,6,7-ம்செய்யுட்கள் மறைந்துபோயின. 1.81.4-7
878 இரவில் திரிவோர்கட் கிறைதோ ளிணைபத்தும்
நிரவிக் கரவாளை நேர்ந்தா னிடம்போலும்
பரவித் திரிவோர்க்கும் பால்நீ றணிவோர்க்குங்
கரவில் தடக்கையார் காழிந் நகர்தானே. 1.81.8
879 மாலும் பிரமனும் அறியா மாட்சியான்
தோலும் புரிநூலுந் துதைந்த வரைமார்பன்
ஏலும் பதிபோலும் இரந்தோர்க் கெந்நாளுங்
காலம் பகராதார் காழிந் நகர்தானே. 1.81.9
880 தங்கை யிடவுண்பார் தாழ்சீ வரத்தார்கள்
பெங்கை யுணராதே பேணித் தொழுமின்கள்
மங்கை யொருபாகம் மகிழ்ந்தான் மலர்ச்சென்னிக்
கங்கை தரித்தானூர் காழிந் நகர்தானே. 1.81.10
881 வாசங் கமழ்காழி மதிசெஞ் சடைவைத்த
ஈசன் நகர்தன்னை இணையில் சம்பந்தன்
பேசுந் தமிழ்வல்லோர் பெருநீ ருலகத்துப்
பாசந் தனையற்றுப் பழியில் புகழாரே. 1.81.11
திருச்சிற்றம்பலம்