MEIKANDAR INSTITUTE &
SPIRITUAL SCHOOL OF LEARNING

chulinks.in




This part of web page is available as android app

* We need to pay for the server
* For operation we need funds
* Cosider helping us
* Support us by making a donation
* Donation allows us to work for you
* Donate via Paypal  


    1.82 திருவீழிமிழலை
    பண் - குறிஞ்சி

    882 இரும்பொன் மலைவில்லா எரியம் பாநாணில்
    திரிந்த புரமூன்றுஞ் செற்றான் உறைகோயில்
    தெரிந்த அடியார்கள் சென்ற திசைதோறும்
    விரும்பி யெதிர்கொள்வார் வீழி மிழலையே. 1.82.1
    883 வாதைப் படுகின்ற வானோர் துயர்தீர
    ஓதக் கடல்நஞ்சை உண்டான் உறைகோயில்
    கீதத் திசையோடுங் கேள்விக் கிடையோடும்
    வேதத் தொலியோவா வீழி மிழலையே. 1.82.2
    884 பயிலும் மறையாளன் தலையிற் பலிகொண்டு
    துயிலும் பொழுதாடுஞ் சோதி யுறைகோயில்
    மயிலும் மடமானும் மதியும் மிளவேயும்
    வெயிலும் பொலிமாதர் வீழி மிழலையே. 1.82.3
    885 இரவன் பகலோனும் எச்சத் திமையோரை
    நிரவிட் டருள்செய்த நிமலன் உறைகோயில்
    குரவஞ் சுரபுன்னை குளிர்கோங் கிளவேங்கை
    விரவும் பொழிலந்தண் வீழி மிழலையே. 1.82.4
    886 கண்ணிற் கனலாலே காமன் பொடியாகப்
    பெண்ணுக் கருள்செய்த பெருமான் உறைகோயில்
    மண்ணிற் பெருவேள்வி வளர்தீப் புகைநாளும்
    விண்ணிற் புயல்காட்டும் வீழி மிழலையே. 1.82.5
    887 மாலா யிரங்கொண்டு மலர்க்கண் ணிடஆழி
    ஏலா வலயத்தோ டீந்தான் உறைகோயில்
    சேலா கியபொய்கைச் செழுநீர்க் கமலங்கள்
    மேலா லெரிகாட்டும் வீழி மிழலையே. 1.82.6
    888 மதியால் வழிபட்டான் வாணாள் கொடுபோவான்
    கொதியா வருகூற்றைக் குமைத்தான் உறைகோயில்
    நெதியான் மிகுசெல்வர் நித்த நியமங்கள்
    விதியால் நிற்கின்றார் வீழி மிழலையே. 1.82.7
    889 எடுத்தான் தருக்கினை இழித்தான் விரலூன்றிக்
    கொடுத்தான் வாள்ஆளாக் கொண்டான் உறைகோயில்
    படித்தார் மறைவேள்வி பயின்றார் பாவத்தை
    விடுத்தார் மிகவாழும் வீழி மிழலையே. 1.82.8
    890 கிடந்தான் இருந்தானுங் கீழ்மேல் காணாது
    தொடர்ந்தாங் கவரேத்தச் சுடரா யவன்கோயில்
    படந்தாங் கரவல்குல் பவளத் துவர்வாய்மேல்
    விடந்தாங் கியகண்ணார் வீழி மிழலையே. 1.82.9
    891 சிக்கார் துவராடைச் சிறுதட் டுடையாரும்
    நக்காங் கலர்தூற்றும் நம்பான் உறைகோயில்
    தக்கார் மறைவேள்வித் தலையா யுலகுக்கு
    மிக்கார் அவர்வாழும் வீழி மிழலையே. 1.82.10
    892 மேனின் றிழிகோயில் வீழி மிழலையுள்
    ஏனத் தெயிற்றானை எழிலார் பொழில்காழி
    ஞானத் துயர்கின்ற நலங்கொள் சம்பந்தன்
    வாய்மைத் திவைசொல்ல வல்லோர் நல்லோரே. 1.82.11

    திருச்சிற்றம்பலம்