MEIKANDAR INSTITUTE &
SPIRITUAL SCHOOL OF LEARNING

chulinks.in




This part of web page is available as android app

* We need to pay for the server
* For operation we need funds
* Cosider helping us
* Support us by making a donation
* Donation allows us to work for you
* Donate via Paypal  


    1.84 திருக்கடனாகைக்காரோணம்
    பண் - குறிஞ்சி

    904 புனையும் விரிகொன்றைக் கடவுள் புனல்பாய
    நனையுஞ் சடைமேலோர் நகுவெண் டலைசூடி
    வினையில் லடியார்கள் விதியால் வழிபட்டுக்
    கனையுங் கடல்நாகைக் காரோ ணத்தானே. 1.84.1
    905 பெண்ணா ணெனநின்ற பெம்மான் பிறைச்சென்னி
    அண்ணா மலைநாடன் ஆரூ ருறையம்மான்
    மண்ணார் முழவோவா மாட நெடுவீதிக்
    கண்ணார் கடல்நாகைக் காரோ ணத்தானே. 1.84.2
    906 பாரோர் தொழவிண்ணோர் பணியம் மதில்மூன்றும்
    ஆரார் அழலூட்டி அடியார்க் கருள்செய்தான்
    தேரார் விழவோவாச் செல்வன் திரைசூழ்ந்த
    காரார் கடல்நாகைக் காரோ ணத்தானே. 1.84.3
    907 மொழிசூழ் மறைபாடி முதிருஞ் சடைதன்மேல்
    அழிசூழ் புனலேற்ற அண்ண லணியாயப்
    பழிசூழ் விலராய பத்தர் பணிந்தேத்தக்
    கழிசூழ் கடல்நாகைக் காரோ ணத்தானே. 1.84.4
    908 ஆணும் பெண்ணுமாய் அடியார்க் கருள்நல்கிச்
    சேணின் றவர்க்கின்னஞ் சிந்தை செயவல்லான்
    பேணி வழிபாடு பிரியா தெழுந்தொண்டர்
    காணுங் கடல்நாகைக் காரோ ணத்தானே. 1.84.5
    909 ஏனத் தெயிறோடும் மரவ மெய்பூண்டு
    வானத் திளந்திங்கள் வளருஞ் சடையண்ணல்
    ஞானத் துறைவல்லார் நாளும் பணிந்தேத்தக்
    கானற் கடல்நாகைக் காரோ ணத்தானே. 1.84.6
    910 அரையார் அழல்நாகம் அக்கோ டசைத்திட்டு
    விரையார் வரைமார்பின் வெண்ணீ றணியண்ணல்
    வரையார் வனபோல வளரும்வங்கங்கள்
    கரையார் கடல்நாகைக் காரோ ணத்தானே. 1.84.7
    911 வலங்கொள் புகழ்பேணி வரையா லுயர்திண்டோ ள்
    இலங்கைக் கிறைவாட அடர்த்தங் கருள்செய்தான்
    பலங்கொள் புகழ்மண்ணிற் பத்தர் பணிந்தேத்தக்
    கலங்கொள் கடல்நாகைக் காரோ ணத்தானே. 1.84.8
    912 திருமா லடிவீழத் திசைநான் முகனேத்தப்
    பெருமா னெனநின்ற பெம்மான் பிறைச்சென்னிச்
    செருமால் விடையூருஞ் செல்வன் திரைசூழ்ந்த
    கருமால் கடல்நாகைக் காரோ ணத்தானே. 1.84.9
    913 நல்லா ரறஞ்சொல்லப் பொல்லார் புறங்கூற
    அல்லா ரலர்தூற்ற அடியார்க் கருள்செய்வான்
    பல்லார் தலைமாலை யணிவான் பணிந்தேத்தக்
    கல்லார் கடல்நாகைக் காரோ ணத்தானே. 1.84.10
    914 கரையார் கடல்நாகைக் காரோ ணம்மேய
    நரையார் விடையானை நவிலுஞ் சம்பந்தன்
    உரையார் தமிழ்மாலை பாடு மவரெல்லாங்
    கரையா வுருவாகிக் கலிவான் அடைவாரே. 1.84.11

    இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
    சுவாமிபெயர் - காயாரோகணேசுவரர், தேவியார் - நீலாயதாட்சியம்மை.

    திருச்சிற்றம்பலம்