MEIKANDAR INSTITUTE &
SPIRITUAL SCHOOL OF LEARNING

chulinks.in




This part of web page is available as android app

* We need to pay for the server
* For operation we need funds
* Cosider helping us
* Support us by making a donation
* Donation allows us to work for you
* Donate via Paypal  


    1.85 திருநல்லம்
    பண் - குறிஞ்சி

    915 கல்லால் நிழல்மேய கறைசேர் கண்டாவென்
    றெல்லா மொழியாலும் இமையோர் தொழுதேத்த
    வில்லால் அரண்மூன்றும் வெந்து விழவெய்த
    நல்லான் நமையாள்வான் நல்லம் நகரானே. 1.85.1
    916 தக்கன் பெருவேள்வி தன்னில் அமரரைத்
    துக்கம் பலசெய்து சுடர்பொற் சடைதாழக்
    கொக்கின் இறகோடு குளிர்வெண் பிறைசூடும்
    நக்கன் நமையாள்வான் நல்லம் நகரானே. 1.85.2
    917 அந்தி மதியோடும் அரவச் சடைதாழ
    முந்தி யனலேந்தி முதுகாட் டெரியாடி
    சிந்தித் தெழவல்லார் தீரா வினைதீர்க்கும்
    நந்தி நமையாள்வான் நல்லம் நகரானே. 1.85.3
    918 குளிரும் மதிசூடிக் கொன்றைச் சடைதாழ
    மிளிரும் மரவோடு வெண்ணூல் திகழ்மார்பில்
    தளிருந் திகழ்மேனித் தையல் பாகமாய்
    நளிரும் வயல்சூழ்ந்த நல்லம் நகரானே. 1.85.4
    919 மணியார் திகழ்கண்டம் முடையான் மலர்மல்கு
    பிணிவார் சடையெந்தை பெருமான் கழல்பேணித்
    துணிவார் மலர்கொண்டு தொண்டர் தொழுதேத்த
    நணியான் நமையாள்வான் நல்லம் நகரானே. 1.85.5
    920 வாசம் மலர்மல்கு மலையான் மகளோடும்
    பூசுஞ் சுடுநீறு புனைந்தான் விரிகொன்றை
    ஈச னெனவுள்கி யெழுவார் வினைகட்கு
    நாசன் நமையாள்வான் நல்லம் நகரானே. 1.85.6
    921 அங்கோல் வளைமங்கை காண அனலேந்திக்
    கொங்கார் நறுங்கொன்றை சூடிக் குழகாக
    வெங்கா டிடமாக வெந்தீ விளையாடும்
    நங்கோன் நமையாள்வான் நல்லம் நகரானே. 1.85.7
    922 பெண்ணார் திருமேனிப் பெருமான் பிறைமல்கு
    கண்ணார் நுதலினான் கயிலை கருத்தினால்
    எண்ணா தெடுத்தானை இறையே விரலூன்றி
    நண்ணார் புரமெய்தான் நல்லம் நகரானே. 1.85.8
    923 நாகத் தணையானும் நளிர்மா மலரானும்
    போகத் தியல்பினாற் பொலிய அழகாகும்
    ஆகத் தவளோடும் அமர்ந்தங் கழகாரும்
    நாகம் மரையார்த்தான் நல்லம் நகரானே. 1.85.9
    924 குறியில் சமணோடு குண்டர் வண்தேரர்
    அறிவில் லுரைகேட்டங் கவமே கழியாதே
    பொறிகொள் ளரவார்த்தான் பொல்லா வினைதீர்க்கும்
    நறைகொள் பொழில்சூழ்ந்த நல்லம் நகரானே. 1.85.10
    925 நலமார் மறையோர்வாழ் நல்லம் நகர்மேய
    கொலைசேர் மழுவானைக் கொச்சை யமர்ந்தோங்கு
    தலமார் தமிழ்ஞான சம்பந் தன்சொன்ன
    கலைக ளிவைவல்லார் கவலை கழிவாரே. 1.85.11

    இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
    சுவாமிபெயர் - உமாமகேசுவரர், தேவியார் - மங்களநாயகியம்மை.

    திருச்சிற்றம்பலம்