MEIKANDAR INSTITUTE &
SPIRITUAL SCHOOL OF LEARNING

chulinks.in




This part of web page is available as android app

* We need to pay for the server
* For operation we need funds
* Cosider helping us
* Support us by making a donation
* Donation allows us to work for you
* Donate via Paypal  


    1.89 திரு எருக்கத்தம்புலியூர்
    பண் - குறிஞ்சி

    959 படையார் தருபூதப் பகடார் உரிபோர்வை
    உடையான் உமையோடும் உடனா யிடுகங்கைச்
    சடையான் எருக்கத்தம் புலியூர்த் தகுகோயில்
    விடையான் அடியேத்த மேவா வினைதானே. 1.89.1
    960 இலையார் தருசூலப் படையெம் பெருமானாய்
    நிலையார் மதில்மூன்றும் நீறாய் விழவெய்த
    சிலையான் எருக்கத்தம் புலியூர்த் திகழ்கோயிற்
    கலையான் அடியேத்தக் கருதா வினைதானே. 1.89.2
    961 விண்ணோர் பெருமானே விகிர்தா விடையூர்தீ
    பெண்ணாண் அலியாகும் பித்தா பிறைசூடி
    எண்ணார் எருக்கத்தம் புலியூ ருறைகின்ற
    அண்ணா எனவல்லார்க் கடையா வினைதானே. 1.89.3
    962 அரையார் தருநாகம் அணிவான் அலர்மாலை
    விரையார் தருகொன்றை யுடையான் விடையேறி
    வரையான் எருக்கத்தம் புலியூர் மகிழ்கின்ற
    திரையார் சடையானைச் சேரத் திருவாமே. 1.89.4
    963 வீறார் முலையாளைப் பாகம் மிகவைத்துச்
    சீறா வருகாலன் சினத்தை யழிவித்தான்
    ஏறான் எருக்கத்தம் புலியூ ரிறையானை
    வேறா நினைவாரை விரும்பா வினைதானே. 1.89.5
    964 நகுவெண் டலையேந்தி நானா விதம்பாடிப்
    புகுவா னயம்பெய்யப் புலித்தோல் பியற்கிட்டுத்
    தகுவான் எருக்கத்தம் புலியூர்த் தகைந்தங்கே
    தொகுவான் கழலேத்தத் தொடரா வினைதானே. 1.89.6
    () இப்பதிகத்தின் 7-ம் செய்யுள் சிதைந்து போயிற்று. 1.89.7
    965 ஆவா வெனஅரக்கன் அலற அடர்த்திட்டுத்
    தேவா எனஅருளார் செல்வங் கொடுத்திட்ட
    கோவே யெருக்கத்தம் புலியூர் மிகுகோயிற்
    தேவே யெனஅல்லல் தீர்தல் திடமாமே. 1.89.8
    966 மறையான் நெடுமால்காண் பரியான் மழுவேந்தி
    நிறையா மதிசூடி நிகழ்முத் தின்தொத்தே
    இறையான் எருக்கத்தம் புலியூ ரிடங்கொண்ட
    கறையார் மிடற்றானைக் கருதக் கெடும்வினையே. 1.89.9
    967 புத்தர் அருகர்தம் பொய்கள் புறம்போக்கிச்
    சுத்தி தரித்துறையுஞ் சோதி யுமையோடும்
    நித்தன் எருக்கத்தம் புலியூர் நிகழ்வாய
    அத்தன் அறவன்றன் அடியே அடைவோமே. 1.89.10
    968 ஏரார் எருக்கத்தம் புலியூர் உறைவானைச்
    சீரார் திகழ்காழித் திருவார் சம்பந்தன்
    ஆரா அருந்தமிழ் மாலை யிவைவல்லார்
    பாரா ரவரேத்தப் பதிவான் உறைவாரே. 1.89.11

    இத்தலம் நடுநாட்டிலுள்ளது.
    சுவாமிபெயர் - நீலகண்டேசுரர், தேவியார் - நீலமலர்க்கண்ணம்மை.

    திருச்சிற்றம்பலம்