1.90 திருப்பிரமபுரம் - திருவிருக்குக்குறள்
பண் - குறிஞ்சி
969 அரனை உள்குவீர், பிரம னூருளெம்
பரனை யேமனம், பரவி உய்ம்மினே. 1.90.1
970 காண உள்குவீர், வேணு நற்புரத்
தாணுவின் கழல், பேணி உய்ம்மினே. 1.90.2
971 நாதன் என்பிர்காள், காதல் ஒண்புகல்
ஆதி பாதமே, ஓதி உய்ம்மினே. 1.90.3
972 அங்கம் மாதுசேர், பங்கம் ஆயவன்
வெங்கு ருமன்னும், எங்க ளீசனே. 1.90.4
973 வாணி லாச்சடைத், தோணி வண்புரத்
தாணி நற்பொனைக், காணு மின்களே. 1.90.5
974 பாந்த ளார்சடைப், பூந்த ராய்மன்னும்
ஏந்து கொங்கையாள், வேந்த னென்பரே. 1.90.6
975 கரிய கண்டனைச், சிரபு ரத்துளெம்
அரசை நாடொறும், பரவி உய்ம்மினே. 1.90.6
976 நறவ மார்பொழிற், புறவம் நற்பதி
இறைவன் நாமமே, மறவல் நெஞ்சமே. 1.90.8
977 தென்றில் அரக்கனைக், குன்றிற் சண்பைமன்
அன்று நெரித்தவா, நின்று நினைமினே. 1.90.9
978 அயனும் மாலுமாய், முயலுங் காழியான்
பெயல்வை எய்திநின், றியலும் உள்ளமே. 1.90.10
979 தேரர் அமணரைச், சேர்வில் கொச்சைமன்
நேரில் கழல்நினைந், தோரும் உள்ளமே. 1.90.11
980 தொழும னத்தவர், கழும லத்துறை
பழுதில் சம்பந்தன், மொழிகள் பத்துமே. 1.90.12
பிரம்மபுரமென்பது சீகாழி.
திருச்சிற்றம்பலம்