1.91 திருஆரூர் - திருவிருக்குக்குறள்
பண் - குறிஞ்சி
981 சித்தம் தெளிவீர்காள், அத்தன் ஆரூரைப்
பத்தி மலர்தூவ, முத்தி யாகுமே. 1.91.1
982 பிறவி யறுப்பீர்காள், அறவன் ஆரூரை
மறவா தேத்துமின், துறவி யாகுமே. 1.91.2
983 துன்பந் துடைப்பீர்காள், அன்பன் அணியாரூர்
நன்பொன் மலர்தூவ, இன்ப மாகுமே. 1.91.3
984 உய்ய லுறுவீர்காள், ஐயன் ஆரூரைக்
கையி னாற்றொழ, நையும் வினைதானே. 1.91.4
985 பிண்டம் அறுப்பீர்காள், அண்டன் ஆரூரைக்
கண்டு மலர்தூவ, விண்டு வினைபோமே. 1.915
986 பாசம் அறுப்பீர்காள், ஈசன் அணியாரூர்
வாச மலர்தூவ, நேச மாகுமே. 1.91.6
987 வெய்ய வினைதீர, ஐயன் அணியாரூர்
செய்ய மலர்தூவ, வைய முமதாமே. 1.91.7
988 அரக்கன் ஆண்மையை, நெருக்கி னானாரூர்
கரத்தி னாற்றொழத், திருத்த மாகுமே. 1.91.8
989 துள்ளும் இருவர்க்கும், வள்ளல் ஆரூரை
உள்ளு மவர்தம்மேல், விள்ளும் வினைதானே. 1.91.9
990 கடுக்கொள் சீவரை, அடக்கி னானாரூர்
எடுத்து வாழ்த்துவார், விடுப்பர் வேட்கையே. 1.91.10
991 சீரூர் சம்பந்தன், ஆரூரைச் சொன்ன
பாரூர் பாடலார், பேரா ரின்பமே. 1.91.11
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - வன்மீகநாதர், தேவியார் - அல்லியங்கோதையம்மை.
திருச்சிற்றம்பலம்