1.94 திருஆலவாய் - திருவிருக்குக்குறள்
பண் - குறிஞ்சி
1014 நீல மாமிடற், றால வாயிலான்
பால தாயினார், ஞாலம் ஆள்வரே. 1.94.1
1015 ஞால மேழுமாம், ஆல வாயிலார்
சீல மேசொலீர், காலன் வீடவே. 1.94.2
1015 ஆல நீழலார், ஆல வாயிலார்
கால காலனார், பால தாமினே. 1.94.3
1017 அந்த மில்புகழ், எந்தை யாலவாய்
பந்தி யார்கழல், சிந்தை செய்ம்மினே. 1.94.4
1018 ஆட லேற்றினான், கூட லாலவாய்
பாடி யேமனம், நாடி வாழ்மினே. 1.94.5
1019 அண்ணல் ஆலவாய், நண்ணி னான்றனை
எண்ணி யேதொழத், திண்ணம் இன்பமே. 1.94.6
1020 அம்பொன் ஆலவாய், நம்ப னார்கழல்
நம்பி வாழ்பவர், துன்பம் வீடுமே. 1.94.7
1021 அரக்க னார்வலி, நெருக்க னாலவாய்
உரைக்கு முள்ளத்தார்க், கிரக்கம் உண்மையே. 1.94.8
1022 அருவன் ஆலவாய், மருவி னான்றனை
இருவ ரேத்தநின், றுருவ மோங்குமே. 1.94.9
1023 ஆரம் நாகமாம், சீரன் ஆலவாய்த்
தேர மண்செற்ற, வீர னென்பரே. 1.94.10
1024 அடிகள் ஆலவாய்ப், படிகொள் சம்பந்தன்
முடிவி லின்றமிழ்ச், செடிகள் நீக்குமே. 1.94.11
இத்தலம் பாண்டிநாட்டிலுள்ளது. இதுவே மதுரை.
சுவாமிபெயர் - சொக்கநாதசுவாமி, தேவியார் - மீனாட்சியம்மை.
திருச்சிற்றம்பலம்