MEIKANDAR INSTITUTE &
SPIRITUAL SCHOOL OF LEARNING

chulinks.in




This part of web page is available as android app

* We need to pay for the server
* For operation we need funds
* Cosider helping us
* Support us by making a donation
* Donation allows us to work for you
* Donate via Paypal  


    1.98 திருச்சிராப்பள்ளி
    பண் - குறிஞ்சி

    1058 நன்றுடையானைத் தீயதிலானை நரைவெள்ளே
    றொன்றுடையானை உமையொருபாகம் உடையானைச்
    சென்றடையாத திருவுடையானைச் சிராப்பள்ளிக்
    குன்றுடையானைக் கூறவென்னுள்ளங் குளிரும்மே. 1.98.1
    1059 கைம்மகவேந்திக் கடுவனொடூடிக் கழைபாய்வான்
    செம்முகமந்தி கருவரையேறுஞ் சிராப்பள்ளி
    வெம்முகவேழத் தீருரிபோர்த்த விகிர்தாநீ
    பைம்முகநாகம் மதியுடன்வைத்தல் பழியன்றே. 1.98.2
    1060 மந்தம்முழவம் மழலைததும்ப வரைநீழல்
    செந்தண்புனமுஞ் சுனையுஞ்சூழ்ந்த சிராப்பள்ளிச்
    சந்தம்மலர்கள் சடைமேலுடையார் விடையூரும்
    எந்தம்மடிகள் அடியார்க்கல்லல் இல்லையே. 1.98.3
    1061 துறைமல்குசாரற் சுனைமல்குநீலத் திடைவைகிச்
    சிறைமல்குவண்டுந் தும்பியும்பாடுஞ் சிராப்பள்ளிக்
    கறைமல்குகண்டன் கனலெரியாடுங் கடவுள்ளெம்
    பிறைமல்குசென்னி யுடையவனெங்கள் பெருமானே. 1.98.4
    1062 கொலைவரையாத கொள்கையர்தங்கண் மதின்மூன்றுஞ்
    சிலைவரையாகச் செற்றனரேனுஞ் சிராப்பள்ளித்
    தலைவரைநாளுந் தலைவரல்லாமை யுரைப்பீர்காள்
    நிலவரைநீல முண்டதும்வெள்ளை நிறமாமே. 1.98.5
    1063 வெய்யதண்சாரல் விரிநிறவேங்கைத் தண்போது
    செய்யபொன்சேருஞ் சிராப்பள்ளிமேய செல்வனார்
    தையலொர்பாகம் மகிழ்வர்நஞ்சுண்பர் தலையோட்டில்
    ஐயமுங்கொள்வர் ஆரிவர்செய்கை அறிவாரே. 1.98.6
    1064 வேயுயர்சாரல் கருவிரலூகம் விளையாடும்
    சேயுயர்கோயில் சிராப்பள்ளிமேய செல்வனார்
    பேயுயர்கொள்ளி கைவிளக்காகப் பெருமானார்
    தீயுகந்தாடல் திருக்குறிப்பாயிற் றாகாதே. 1.98.7
    1065 மலைமல்குதோளன் வலிகெடவூன்றி மலரோன்றன்
    தலைகலனாகப் பலிதிரிந்துண்பர் பழியோரார்
    சொலவலவேதஞ் சொலவலகீதஞ் சொல்லுங்கால்
    சிலவலபோலுஞ் சிராப்பள்ளிச்சேடர் செய்கையே. 1.98.8
    1066 அரப்பள்ளியானும் மலருறைவானும் அறியாமைக்
    கரப்புள்ளிநாடிக் கண்டிலரேனுங் கல்சூழ்ந்த
    சிரப்பள்ளிமேய வார்சடைச்செல்வர் மனைதோறும்
    இரப்புள்ளீரும்மை ஏதிலர்கண்டால் இகழாரே. 1.98.9
    1067 நாணாதுடைநீத் தோர்களுங்கஞ்சி நாட்காலை
    ஊணாப்பகலுண் டோ துவோர்கள் உரைக்குஞ்சொல்
    பேணாதுறுசீர் பெறுதுமென்பீரெம் பெருமானார்
    சேணார்கோயில் சிராப்பள்ளிசென்று சேர்மினே. 1.98.10
    1068 தேனயம்பாடுஞ் சிராப்பள்ளியானைத் திரைசூழ்ந்த
    கானல்சங்கேறுங் கழுமலவூரில் கவுணியன்
    ஞானசம்பந்தன் நலம்மிகுபாடல் இவைவல்லார்
    வானசம்பந்தத் தவரொடுமன்னி வாழ்வாரே. 1.98.11

    இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
    சுவாமிபெயர் - தாயுமானேசுவரர், தேவியார் - மட்டுவார்குழலம்மை.

    திருச்சிற்றம்பலம்