1.100 திருப்பரங்குன்றம்
பண் - குறிஞ்சி
1080 நீடலர்சோதி வெண்பிறையோடு நிரைகொன்றைச்
சூடலனந்திச் சுடரெரியேந்திச் சுடுகானில்
ஆடலனஞ்சொல் அணியிழையாளை யொருபாகம்
பாடலன்மேய நன்னகர்போலும் பரங்குன்றே. 1.100.1
1081 அங்கமொராறும் அருமறைநான்கு மருள்செய்து
பொங்குவெண்ணூலும் பொடியணிமார்பிற் பொலிவித்துத்
திங்களும்பாம்புந் திகழ்சடைவைத்தோர் தேன்மொழி
பங்கினன்மேய நன்னகர்போலும் பரங்குன்றே. 1.100.2
1082 நீரிடங்கொண்ட நிமிர்சடைதன்மேல் நிரைகொன்றைச்
சீரிடங்கொண்ட எம்மிறைபோலுஞ் சேய்தாய
ஓருடம்புள்ளே உமையொருபாகம் உடனாகிப்
பாரிடம்பாட இனிதுறைகோயில் பரங்குன்றே. 1.100.3
1083 வளர்பூங்கோங்கம் மாதவியோடு மல்லிகைக்
குளிர்பூஞ்சாரல் வண்டறைசோலைப் பரங்குன்றந்
தளிர்போல்மேனித் தையல்நல்லாளோ டொருபாகம்
நளிர்பூங்கொன்றை சூடினன்மேய நகர்தானே. 1.100.4
1084 பொன்னியல்கொன்றை பொறிகிளர்நாகம் புரிசடைத்
துன்னியசோதி யாகியஈசன் தொன்மறை
பன்னியபாடல் ஆடலன்மேய பரங்குன்றை
உன்னியசிந்தை உடையவர்க்கில்லை உறுநோயே. 1.100.5
1085 கடைநெடுமாடக் கடியரண்மூன்றுங் கனல்மூழ்கத்
தொடைநவில்கின்ற வில்லினனந்திச் சுடுகானில்
புடைநவில்பூதம் பாடநின்றாடும் பொருசூலப்
படைநவில்வான்றன் நன்னகர்போலும் பரங்குன்றே. 1.100.6
1086 அயிலுடைவேலோர் அனல்புல்குகையின் அம்பொன்றால்
எயில்படவெய்த எம்மிறைமேய இடம்போலும்
மயில்பெடைபுல்கி மாநடமாடும் வளர்சோலைப்
பயில்பெடைவண்டு பாடலறாத பரங்குன்றே. 1.100.7
1087 மைத்தகுமேனி வாளரக்கன்றன் மகுடங்கள்
பத்தினதிண்டோ ளிருபதுஞ்செற்றான் பரங்குன்றைச்
சித்தமதொன்றிச் செய்கழலுன்னிச் சிவனென்று
நித்தலுமேத்தத் தொல்வினைநம்மேல் நில்லாவே. 1.100.8
1088 முந்தியிவ்வையந் தாவியமாலும் மொய்யொளி
உந்தியில்வந்திங் கருமறையீந்த உரவோனும்
சிந்தையினாலுந் தெரிவரிதாகித் திகழ்சோதி
பந்தியலங்கை மங்கையொர்பங்கன் பரங்குன்றே. 1.100.9
1089 குண்டாய்முற்றுந் திரிவார்கூறை மெய்போர்த்து
மிண்டாய்மிண்டர் பேசியபேச்சு மெய்யல்ல
பண்டால்நீழல் மேவியஈசன் பரங்குன்றைத்
தொண்டாலேத்தத் தொல்வினைநம்மேல் நில்லாவே. 1.100.10
1090 தடமலிபொய்கைச் சண்பைமன்ஞான சம்பந்தன்
படமலிநாகம் அரைக்கசைத்தான்றன் பரங்குன்றைத்
தொடைமலிபாடல் பத்தும்வல்லார்தந் துயர்போகி
விடமலிகண்டன் அருள்பெறுந்தன்மை மிக்கோரே. 1.100.11
இத்தலம் பாண்டிநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - பரங்கிரிநாதர், தேவியார் - ஆவுடைநாயகியம்மை.
திருச்சிற்றம்பலம்