1.102 சீகாழி
பண் - குறிஞ்சி
1102 உரவார்கலையின் கவிதைப்புலவர்க் கொருநாளுங்
கரவாவண்கைக் கற்றவர்சேருங் கலிக்காழி
அரவார்அரையா அவுணர்புரமூன் றெரிசெய்த
சரவாவென்பார் தத்துவஞானத் தலையாரே. 1.102.1
1103 மொய்சேர்வண்டுண் மும்மதநால்வாய் முரண்வேழக்
கைபோல்வாழை காய்குலையீனுங் கலிக்காழி
மைசேர்கண்டத் தெண்டோ ள்முக்கண் மறையோனே
ஐயாவென்பார்க் கல்லல்களான அடையாவே. 1.102.2
1104 இளகக்கமலத் தீன்களியங்குங் கழிசூழக்
களகப்புரிசைக் கவினார்சாருங் கலிக்காழி
அளகத்திருநன் நுதலிபங்கா அரனேயென்
றுளகப்பாடும் அடியார்க்குறுநோய் அடையாவே. 1.102.3
1105 எண்ணார்முத்தம் ஈன்றுமரகதம் போற்காய்த்துக்
கண்ணார்கமுகு பவளம்பழுக்குங் கலிக்காழிப்
பெண்ணோர்பாகா பித்தாபிரானே யென்பார்க்கு
நண்ணாவினைகள் நாடொறுமின்பம் நணுகும்மே. 1.102.4
1106 மழையார்சாரல் செம்புனல்வந்தங் கடிவருடக்
கழையார்கரும்பு கண்வளர்சோலைக் கலிக்காழி
உழையார்கரவா உமையாள்கணவா ஒளிர்சங்கக்
குழையாவென்று கூறவல்லார்கள் குணவோரே. 1.102.5
1107 குறியார்திரைகள் வரைகள்நின்றுங் கோட்டாறு
கறியார்கழிசம் பிரசங்கொடுக்குங் கலிக்காழி
வெறியார்கொன்றைச் சடையாவிடையா என்பாரை
அறியாவினைகள் அருநோய்பாவம் அடையாவே. 1.102.6
இப்பதிகத்தின் 7-ம் செய்யுள் சிதைந்து போயிற்று. 1.102.7
1108 உலங்கொள்சங்கத் தார்கலியோதத் துதையுண்டு
கலங்கள்வந்து கார்வயலேறுங் கலிக்காழி
இலங்கைமன்னன் தன்னையிடர்கண் டருள்செய்த
சலங்கொள்சென்னி மன்னாஎன்னத் தவமாமே. 1.102.8
1109 ஆவிக்கமலத் தன்னமியங்குங் கழிசூழக்
காவிக்கண்ணார் மங்கலம்ஓவாக் கலிக்காழிப்
பூவிற்றோன்றும் புத்தேளொடுமா லவன்றானும்
மேவிப்பரவும் அரசேயென்ன வினைபோமே. 1.102.9
1110 மலையார்மாடம் நீடுயர்இஞ்சி மஞ்சாருங்
கலையார்மதியஞ் சேர்தரும்அந்தண் கலிக்காழித்
தலைவாசமணர் சாக்கியர்க்கென்றும் அறிவொண்ணா
நிலையாயென்ன தொல்வினையாய நில்லாவே. 1.102.10
1111 வடிகொள்வாவிச் செங்கழுநீரிற் கொங்காடிக்
கடிகொள்தென்றல் முன்றிலில்வைகுங் கலிக்காழி
அடிகள்தம்மை அந்தமில்ஞான சம்பந்தன்
படிகொள்பாடல் வல்லவர்தம்மேற் பழிபோமே. 1.102.11
திருச்சிற்றம்பலம்