MEIKANDAR INSTITUTE &
SPIRITUAL SCHOOL OF LEARNING

chulinks.in




This part of web page is available as android app

* We need to pay for the server
* For operation we need funds
* Cosider helping us
* Support us by making a donation
* Donation allows us to work for you
* Donate via Paypal  


    1.103 திருக்கழுக்குன்றம்
    பண் - குறிஞ்சி

    1112 தோடுடையானொரு காதில்தூய குழைதாழ
    ஏடுடையான் தலைகலனாக இரந்துண்ணும்
    நாடுடையான் நள்ளிருள்ஏம நடமாடுங்
    காடுடையான் காதல்செய்கோயில் கழுக்குன்றே. 1.103.1
    1113 கேணவல்லான் கேழல்வெண்கொம்பு குறளாமை
    பூணவல்லான் புரிசடைமேலொர் புனல்கொன்றை
    பேணவல்லான் பெண்மகள்தன்னை யொருபாகங்
    காணவல்லான் காதல்செய்கோயில் கழுக்குன்றே. 1.103.2
    1114 தேனகத்தார் வண்டதுவுண்ட திகழ்கொன்றை
    தானகத்தார் தண்மதிசூடித் தலைமேலோர்
    வானகத்தார் வையகத்தார்கள் தொழுதேத்துங்
    கானகத்தான் காதல்செய்கோயில் கழுக்குன்றே. 1.103.3
    1115 துணையல்செய்தான் தூயவண்டியாழ்செய் சுடர்க்கொன்றை
    பிணையல்செய்தான் பெண்ணின்நல்லாளை யொருபாகம்
    இணையல்செய்யா இலங்கெயின்மூன்றும் எரியுண்ணக்
    கணையல்செய்தான் காதல்செய்கோயில் கழுக்குன்றே. 1.103.4
    1116 பையுடைய பாம்பொடுநீறு பயில்கின்ற
    மெய்யுடையான் வெண்பிறைசூடி விரிகொன்றை
    மையுடைய மாமிடற்றண்ணல் மறிசேர்ந்த
    கையுடையான் காதல்செய்கோயில் கழுக்குன்றே. 1.103.5
    1117 வெள்ளமெல்லாம் விரிசடைமேலோர் விரிகொன்றை
    கொள்ளவல்லான் குரைகழலேத்துஞ் சிறுத்தொண்டர்
    உள்ளமெல்லாம் உள்கிநின்றாங்கே உடனாடுங்
    கள்ளம்வல்லான் காதல்செய்கோயில் கழுக்குன்றே. 1.103.6
    இப்பதிகத்தில் 7-ம் செய்யுள் சிதைந்து போயிற்று. 1.103.7
    1118 ஆதல்செய்தான் அரக்கர்தங்கோனை அருவரையின்
    நோதல்செய்தான் நொடிவரையின்கண் விரலூன்றிப்
    பேர்தல்செய்தான் பெண்மகள்தன்னோ டொருபாகங்
    காதல்செய்தான் காதல்செய்கோயில் கழுக்குன்றே. 1.103.8
    1119 இடந்தபெம்மான் ஏனமதாயும் அனமாயுந்
    தொடர்ந்தபெம்மான் தூமதிசூடி வரையார்தம்
    மடந்தைபெம்மான் வார்கழலோச்சிக் காலனைக்
    கடந்தபெம்மான் காதல்செய்கோயில் கழுக்குன்றே. 1.103.9
    1120 தேயநின்றான் திரிபுரங்கங்கை சடைமேலே
    பாயநின்றான் பலர்புகழ்ந்தேத்த வுலகெல்லாஞ்
    சாயநின்றான் வன்சமண்குண்டர் சாக்கியர்
    காயநின்றான் காதல்செய்கோயில் கழுக்குன்றே. 1.103.10
    1121 கண்ணுதலான் காதல்செய்கோயில் கழுக்குன்றை
    நண்ணியசீர் ஞானசம்பந்தன் தமிழ்மாலை
    பண்ணியல்பாற் பாடியபத்தும் இவைவல்லார்
    புண்ணியராய் விண்ணவரோடும் புகுவாரே. 1.103.11

    இத்தலம் தொண்டைநாட்டிலுள்ளது.
    சுவாமிபெயர் - வேதகிரீசுவரர், தேவியார் - பெண்ணினல்லாளம்மை.

    திருச்சிற்றம்பலம்