1.105 திருஆரூர்
பண் - வியாழக்குறிஞ்சி
1133 பாடலன் நான்மறையன் படிபட்ட கோலத்தன் திங்கள்
சூடலன் மூவிலைய சூலம் வலனேந்திக்
கூடலர் மூவெயிலும் எரியுண்ணக் கூரெரிகொண் டெல்லி
ஆடலன் ஆதிரையன் ஆரூர் அமர்ந்தானே. 1.105.1
1134 சோலையில் வண்டினங்கள் சுரும்போ டிசைமுரலச் சூழ்ந்த
ஆலையின் வெம்புகைபோய் முகில்தோயும் ஆரூரில்
பாலொடு நெய்தயிரும் பயின்றாடும் பரமேட்டி பாதம்
காலையும் மாலையும்போய்ப் பணிதல் கருமமே. 1.105.2
1135 உள்ளமோர் இச்சையினால் உகந்தேத்தித் தொழுமின்தொண்டீர் மெய்யே
கள்ளம் ஒழிந்திடுமின் கரவா திருபொழுதும்
வெள்ளமோர் வார்சடைமேற் கரந்திட்ட வெள்ளேற்றான் மேய
அள்ளல் அகன்கழனி ஆரூர் அடைவோமே. 1.105.6
1136 வெந்துறு வெண்மழுவாட் படையான் மணிமிடற்றான் அரையின்
ஐந்தலை யாடரவம் அசைத்தான் அணியாரூர்ப்
பைந்தளிர்க் கொன்றையந்தார்ப் பரமன் அடிபரவப் பாவம்
நைந்தறும் வந்தணையும் நாடொறும் நல்லனவே. 1.105.7
1137 வீடு பிறப்பெளிதாம் அதனை வினவுதிரேல் வெய்ய
காடிட மாகநின்று கனலேந்திக் கைவீசி
ஆடும் அவிர்சடையான் அவன்மேய ஆரூரைச் சென்று
பாடுதல் கைதொழுதல் பணிதல் கருமமே. 1.105.8
1138 கங்கையோர் வார்சடைமேற் கரந்தான் கிளிமழலைக் கேடில்
மங்கையோர் கூறுடையான் மறையான் மழுவேந்தும்
அங்கையி னான்அடியே பரவி யவன்மேய ஆரூர்
தங்கையினாற் றொழுவார் தடுமாற் றறுப்பாரே. 1.105.6
1138 நீறணி மேனியனாய் நிரம்பா மதிசூடி நீண்ட
ஆறணி வார்சடையான் ஆரூர் இனிதமர்ந்தான்
சேறணி மாமலர்மேல் பிரமன் சிரமரிந்த செங்கண்
ஏறணி வெல்கொடியான் அவனெம் பெருமானே. 1.105.7
() இப்பதிகத்தில் 8-ம் செய்யுள் சிதைந்து போயிற்று. 1.105.8
1140 வல்லியந் தோலுடையான் வளர்திங்கள் கண்ணியினான் வாய்த்த
நல்லியல் நான்முகத்தோன் தலையின் னறவேற்றான்
அல்லியங் கோதைதன்னை ஆகத் தமர்ந்தருளி ஆரூர்ப்
புல்லிய புண்ணியனைத் தொழுவாரும் புண்ணியரே. 1.105.9
1141 செந்துவர் ஆடையினார் உடைவிட்டு நின்றுழல்வார் சொன்ன
இந்திர ஞாலமொழிந் தின்புற வேண்டுதிரேல்
அந்தர மூவெயிலு மரணம் எரியூட்டி ஆரூர்த்
தந்திர மாவுடையான் அவனெந் தலைமையனே. 1.105.10
1142 நல்ல புனற்புகலித் தமிழ்ஞான சம்பந்தன் நல்ல
அல்லி மலர்க்கழனி ஆரூர் அமர்ந்தானை
வல்லதோ ரிச்சையினால் வழிபாடிவை பத்தும் வாய்க்கச்
சொல்லுதல் கேட்டல்வல்லார் துன்பந் துடைப்பாரே. 1.105.11
திருச்சிற்றம்பலம்