MEIKANDAR INSTITUTE &
SPIRITUAL SCHOOL OF LEARNING

chulinks.in




This part of web page is available as android app

* We need to pay for the server
* For operation we need funds
* Cosider helping us
* Support us by making a donation
* Donation allows us to work for you
* Donate via Paypal  


    1.107 திருக்கொடிமாடச்செங்குன்றூர்
    பண் - வியாழக்குறிஞ்சி

    1152 வெந்தவெண் ணீறணிந்து விரிநூல் திகழ்மார்பின் நல்ல
    பந்தணவும் விரலாள் ஒருபாகம் அமர்ந்தருளிக்
    கொந்தணவும் பொழில்சூழ் கொடிமாடச் செங்குன்றூர் நின்ற
    அந்தணனைத் தொழுவார் அவலம் அறுப்பாரே. 1.107.1
    1153 அலைமலி தண்புனலோ டரவஞ் சடைக்கணிந் தாகம்
    மலைமகள் கூறுடையான் மலையார் இளவாழைக்
    குலைமலி தண்பொழில்சூழ் கொடிமாடச் செங்குன்றூர் நின்ற
    தலைமக னைத்தொழுவார் தடுமாற் றறுப்பாரே. 1.107.2
    1154 பாலன நீறுபுனை திருமார்பிற் பல்வளைக்கை நல்ல
    ஏலம லர்க்குழலாள் ஒருபாகம் அமர்ந்தருளிக்
    கோல மலர்ப்பொழில்சூழ் கொடிமாடச் செங்குன்றூர் மல்கும்
    நீலநன் மாமிடற்றான் கழலேத்தல் நீதியே. 1.107.3
    1155 வாருறு கொங்கைநல்ல மடவாள் திகழ்மார்பில் நண்ணுங்
    காருறு கொன்றையொடுங் கதநாகம் பூண்டருளிச்
    சீருறும் அந்தணர்வாழ் கொடிமாடச் செங்குன்றூர் நின்ற
    நீருறு செஞ்சடையான் கழலேத்தல் நீதியே. 1.107.4
    1156 பொன்றிகழ் ஆமையொடு புரிநூல் திகழ்மார்பில் நல்ல
    பன்றியின் கொம்பணிந்து பணைத்தோளியோர் பாகமாகக்
    குன்றன மாளிகைசூழ் கொடிமாடச் செங்குன்றூர் வானில்
    மின்றிகழ் செஞ்சடையான் கழலேத்தல் மெய்ப்பொருளே. 1.107.5
    1157 ஓங்கிய மூவிலைநற் சூல மொருகையன் சென்னி
    தாங்கிய கங்கையொடு மதியஞ் சடைக்கணிந்து
    கோங்கண வும்பொழில்சூழ் கொடிமாடச் செங்குன்றூர் வாய்ந்த
    பாங்கன தாள்தொழுவார் வினையாய பற்றறுமே. 1.107.6
    1158 நீடலர் கொன்றையொடு நிமிர்புன் சடைதாழ வெள்ளை
    வாடலுடை தலையிற் பலிகொள்ளும் வாழ்க்கையனாய்க்
    கோடல் வளம்புறவிற் கொடிமாடச் செங்குன்றூர் நின்ற
    சேடன தாள்தொழுவார் வினையாய தேயுமே. 1.107.7
    1159 மத்தநன் மாமலரும் மதியும்வளர் கொன்றையுடன் துன்று
    தொத்தலர் செஞ்சடைமேல் துதைய வுடன்சூடிக்
    கொத்தலர் தண்பொழில்சூழ் கொடிமாடச் செங்குன்றூர் மேய
    தத்துவனைத் தொழுவார் தடுமாற் றறுப்பாரே. 1.107.8
    1160 செம்பொனின் மேனியனாம் பிரமன்திரு மாலுந்தேட நின்ற
    அம்பவ ளத்திரள்போல் ஒளியாய ஆதிபிரான்
    கொம்பண வும்பொழில்சூழ் கொடிமாடச் செங்குன்றூர் மேய
    நம்பன தாள்தொழுவார் வினையாய நாசமே. 1.107.9
    1161 போதியர் பிண்டியரென் றிவர்கள் புறங்கூறும் பொய்ந்நூல்
    ஓதிய கட்டுரைகேட் டுழல்வீர் வரிக்குயில்கள்
    கோதிய தண்பொழில்சூழ் கொடிமாடச் செங்குன்றூர் நின்ற
    வேதியனைத் தொழநும் வினையான வீடுமே. 1.107.10
    1162 அலைமலி தண்புனல்சூழ்ந் தழகார் புகலிந்நகர் பேணுந்
    தலைமக னாகிநின்ற தமிழ்ஞான சம்பந்தன்
    கொலைமலி மூவிலையான் கொடிமாடச் செங்குன்றூ ரேத்தும்
    நலம்மலி பாடல்வல்லார் வினையான நாசமே. 1.107.11

    இத்தலம் கொங்குநாட்டிலுள்ளது.
    திருச்செங்கோடு என வழங்குகின்றது.
    சுவாமிபெயர் - அர்த்தநாரீசுவரர், தேவியார் - அர்த்தநாரீசுவரி.

    திருச்சிற்றம்பலம்