MEIKANDAR INSTITUTE &
SPIRITUAL SCHOOL OF LEARNING

chulinks.in




This part of web page is available as android app

* We need to pay for the server
* For operation we need funds
* Cosider helping us
* Support us by making a donation
* Donation allows us to work for you
* Donate via Paypal  


    1.108 திருப்பாதாளீச்சரம்
    பண் - வியாழக்குறிஞ்சி

    1163 மின்னியல் செஞ்சடைமேல் விளங்கும்மதி மத்தமொடு நல்ல
    பொன்னியல் கொன்றையினான் புனல்சூடிப் பொற்பமரும்
    அன்னம் அனநடையாள் ஒருபாகத் தமர்ந்தருளி நாளும்
    பன்னிய பாடலினான் உறைகோயில் பாதாளே. 1.108.1
    1164 நீடலர் கொன்றையொடு நிரம்பா மதிசூடி வெள்ளைத்
    தோடமர் காதில்நல்ல குழையான் சுடுநீற்றான்
    ஆடர வம்பெருக அனலேந்திக் கைவீசி வேதம்
    பாடலி னாலினியான் உறைகோயில் பாதாளே. 1.108.2
    1165 நாகமும் வான்மதியும் நலம்மல்கு செஞ்சடையான் சாமம்
    போகநல் வில்வரையாற் புரம்மூன் றெரித்துகந்தான்
    தோகைநல் மாமயில்போல் வளர்சாயல் தூமொழியைக் கூடப்
    பாகமும் வைத்துகந்தான் உறைகோயில் பாதாளே. 1.108.3
    1166 அங்கமும் நான்மறையு மருள்செய் தழகார்ந்த அஞ்சொல்
    மங்கையோர் கூறுடையான் மறையோன் உறைகோயில்
    செங்கயல் நின்றுகளுஞ் செறுவில் திகழ்கின்ற சோதிப்
    பங்கயம் நின்றலரும் வயல்சூழ்ந்த பாதாளே. 1.108.4
    1167 பேய்பல வுந்நிலவப் பெருங்காடரங் காகவுன்னி நின்று
    தீயொடு மான்மறியும் மழுவும் திகழ்வித்துத்
    தேய்பிறை யும்மரவும் பொலிகொன்றைச் சடைதன்மேற் சேரப்
    பாய்புன லும்முடையான் உறைகோயில் பாதாளே. 1.108.5
    1168 கண்ணமர் நெற்றியினான் கமழ்கொன்றைச் சடைதன்மே னின்றும்
    விண்ணியல் மாமதியு முடன்வைத்தவன் விரும்பும்
    பெண்ணமர் மேனியினான் பெருங்கா டரங்காக ஆடும்
    பண்ணியல் பாடலினான் உறைகோயில் பாதாளே. 1.108.6
    1169 விண்டலர் மத்தமொடு மிளிரும்மிள நாகம்வன்னி திகழ்
    வண்டலர் கொன்றைநகு மதிபுல்கு வார்சடையான்
    விண்டவர் தம்புரம்மூன் றெரிசெய் துரைவேதம் நான்குமவை
    பண்டிசை பாடலினான் உறைகோயில் பாதாளே. 1.108.7
    1170 மல்கிய நுண்ணிடையாள் உமைநங்கை மறுகஅன்று கையால்
    தொல்லை மலையெடுத்த அரக்கன்றலை தோள்நெரித்தான்
    கொல்லை விடையுகந்தான் குளிர்திங்கள் சடைக்க ணிந்தோன்
    பல்லிசை பாடலினான் உறைகோயில் பாதாளே. 1.108.8
    1171 தாமரை மேலயனும் அரியுந்தம தாள்வினையாற் றேடிக்
    காமனை வீடுவித்தான் கழல்காண்பில ராயகன்றார்
    பூமரு வுங்குழலாள் உமைநங்கை பொருந்தியிட்ட நல்ல
    பாமரு வுங்குணத்தான் உறைகோயில் பாதாளே. 1.108.9
    1172 காலையில் உண்பவருஞ் சமண்கையருங் கட்டுரைவிட் டன்று
    ஆலவிடம் நுகர்ந்தான் அவன்றன் அடியேபரவி
    மாலையில் வண்டினங்கள் மதுவுண் டிசைமுரல வாய்த்த
    பாலையாழ்ப் பாட்டுகந்தான் உறைகோயில் பாதாளே. 1.108.10
    1173 பன்மலர் வைகுபொழில் புடைசூழ்ந்த பாதாளைச் சேரப்
    பொன்னியன் மாடமல்கு புகலிந்நகர் மன்னன்
    தன்னொளி மிக்குயர்ந்த தமிழ்ஞான சம்பந்தன் சொன்ன
    இன்னிசை பத்தும்வல்லார் எழில்வானத் திருப்பாரே. 1.108.11

    திருச்சிற்றம்பலம்