1.109 திருச்சிரபுரம்
பண் - வியாழக்குறிஞ்சி
1174 வாருறு வனமுலை மங்கைபங்கன்
நீருறு சடைமுடி நிமலனிடங்
காருறு கடிபொழில் சூழ்ந்தழகார்
சீருறு வளவயற் சிரபுரமே. 1.109.1
1175 அங்கமொ டருமறை யருள்புரிந்தான்
திங்களொ டரவணி திகழ்முடியன்
மங்கையொ டினிதுறை வளநகரஞ்
செங்கயல் மிளிர்வயல் சிரபுரமே. 1.109.2
1176 பரிந்தவன் பன்முடி அமரர்க்காகித்
திரிந்தவர் புரமவை தீயின்வேவ
வரிந்தவெஞ் சிலைபிடித் தடுசரத்தைத்
தெரிந்தவன் வளநகர் சிரபுரமே. 1.109.3
1177 நீறணி மேனியன் நீள்மதியோ
டாறணி சடையினன் அணியிழையோர்
கூறணிந் தினிதுறை குளிர்நகரஞ்
சேறணி வளவயல் சிரபுரமே. 1.109.4
1178 அருந்திறல் அவுணர்கள் அரணழியச்
சரந்துரந் தெரிசெய்த சங்கரனூர்
குருந்தொடு கொடிவிடு மாதவிகள்
திருந்திய புறவணி சிரபுரமே. 1.109.5
1179 கலையவன் மறையவன் காற்றொடுதீ
மலையவன் விண்ணொடு மண்ணுமவன்
கொலையவன் கொடிமதில் கூட்டழித்த
சிலையவன் வளநகர் சிரபுரமே. 1.109.6
1180 வானமர் மதியொடு மத்தஞ்சூடித்
தானவர் புரமெய்த சைவனிடங்
கானமர் மடமயில் பெடைபயிலுந்
தேனமர் பொழிலணி சிரபுரமே. 1.109.7
1181 மறுத்தவர் திரிபுரம் மாய்ந்தழியக்
கறுத்தவன் காரரக் கன்முடிதோள்
இறுத்தவன் இருஞ்சினக் காலனைமுன்
செறுத்தவன் வளநகர் சிரபுரமே. 1.109.8
1182 வண்ணநன் மலருறை மறையவனுங்
கண்ணனுங் கழல்தொழக் கனலுருவாய்
விண்ணுற வோங்கிய விமலனிடம்
திண்ணநன் மதிலணி சிரபுரமே. 1.109.9
1183 வெற்றரை யுழல்பவர் விரிதுகிலார்
கற்றிலர் அறவுரை புறனுரைக்கப்
பற்றலர் திரிபுரம் மூன்றும்வேவச்
செற்றவன் வளநகர் சிரபுரமே. 1.109.10
1184 அருமறை ஞானசம் பந்தனந்தண்
சிரபுர நகருறை சிவனடியைப்
பரவிய செந்தமிழ் பத்தும்வல்லார்
திருவொடு புகழ்மல்கு தேசினரே. 1.109.11
திருச்சிற்றம்பலம்