1.111 திருக்கடைமுடி
பண் - வியாழக்குறிஞ்சி
1196 அருத்தனை அறவனை அமுதனைநீர்
விருத்தனைப் பாலனை வினவுதிரேல்
ஒருத்தனை யல்லதிங் குலகமேத்துங்
கருத்தவன் வளநகர் கடைமுடியே. 1.111.1
1197 திரைபொரு திருமுடி திங்கள்விம்மும்
அரைபொரு புலியதள் அடிகளிடந்
திரையொடு நுரைபொரு தெண்சுனைநீர்
கரைபொரு வளநகர் கடைமுடியே. 1.111.2
1198 ஆலிள மதியினொ டரவுகங்கை
கோலவெண் ணீற்றனைத் தொழுதிறைஞ்சி
ஏலநன் மலரொடு விரைகமழுங்
காலன வளநகர் கடைமுடியே. 1.111.3
1199 கொய்யணி நறுமலர்க் கொன்றையந்தார்
மையணி மிடறுடை மறையவனூர்
பையணி யரவொடு மான்மழுவாள்
கையணி பவனிடங் கடைமுடியே. 1.111.4
1200 மறையவன் உலகவன் மாயமவன்
பிறையவன் புனலவன் அனலுமவன்
இறையவன் எனவுல கேத்துங்கண்டங்
கறையவன் வளநகர் கடைமுடியே. 1.111.5
1201 படவர வேரல்குற் பல்வளைக்கை
மடவர லாளையொர் பாகம்வைத்துக்
குடதிசை மதியது சூடுசென்னிக்
கடவுள்தன் வளநகர் கடைமுடியே. 1.111.6
1202 பொடிபுல்கு மார்பினிற் புரிபுல்குநூல்
அடிபுல்கு பைங்கழல் அடிகளிடங்
கொடிபுல்கு மலரொடு குளிர்சுனைநீர்
கடிபுல்கு வளநகர் கடைமுடியே. 1.111.7
1203 நோதல்செய் தரக்கனை நோக்கழியச்
சாதல்செய் தவனடி சரணெனலும்
ஆதர வருள்செய்த அடிகளவர்
காதல்செய் வளநகர் கடைமுடியே. 1.111.8
1204 அடிமுடி காண்கிலர் ஓரிருவர்
புடைபுல்கி யருளென்று போற்றிசைப்பச்
சடையிடைப் புனல்வைத்த சதுரனிடங்
கடைமுடி யதனயல் காவிரியே. 1.111.9
1205 மண்ணுதல் பறித்தலு மாயமிவை
எண்ணிய காலவை யின்பமல்ல
ஒண்ணுத லுமையையொர் பாகம்வைத்த
கண்ணுதல் வளநகர் கடைமுடியே. 1.111.10
1206 பொன்றிகழ் காவிரிப் பொருபுனல்சீர்
சென்றடை கடைமுடிச் சிவனடியை
நன்றுணர் ஞானசம் பந்தன்சொன்ன
இன்றமி ழிவைசொல இன்பமாமே. 1.111.11
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - கடைமுடியீசுவரர், தேவியார் - அபிராமியம்பிகை.
திருச்சிற்றம்பலம்