1.112 திருச்சிவபுரம்
பண் - வியாழக்குறிஞ்சி
1207 இன்குர லிசைகெழும் யாழ்முரலத்
தன்கரம் மருவிய சதுரன்நகர்
பொன்கரை பொருபழங் காவிரியின்
தென்கரை மருவிய சிவபுரமே. 1.112.1
1208 அன்றடற் காலனைப் பாலனுக்காய்ப்
பொன்றிட வுதைசெய்த புனிதன்நகர்
வென்றிகொள் ளெயிற்றுவெண் பன்றிமுன்னாள்
சென்றடி வீழ்தரு சிவபுரமே. 1.112.2
1209 மலைமகள் மறுகிட மதகரியைக்
கொலைமல்க வுரிசெய்த குழகன்நகர்
அலைமல்கும் ()அரிசிலி னதனயலே
சிலைமல்கு மதிலணி சிவபுரமே.
() அரிசில் என்பது ஒரு நதி. 1.112.3
1210 மண்புன லனலொடு மாருதமும்
விண்புனை மருவிய விகிர்தன்நகர்
பண்புனை குரல்வழி வண்டுகெண்டிச்
செண்பக மலர்பொழிற் சிவபுரமே. 1.112.4
1211 வீறுநன் குடையவள் மேனிபாகங்
கூறுநன் குடையவன் குளிர்நகர்தான்
நாறுநன் குரவிரி வண்டுகிண்டித்
தேறலுண் டெழுதரு சிவபுரமே. 1.112.5
1212 மாறெதிர் வருதிரி புரமெரித்து
நீறது வாக்கிய நிமலன்நகர்
நாறுடை நடுபவர் உழவரொடுஞ்
சேறுடை வயலணி சிவபுரமே. 1.112.6
1213 ஆவிலைந் தமர்ந்தவன் அரிவையொடு
மேவிநன் கிருந்ததொர் வியனகர்தான்
பூவில்வண் டமர்தரு பொய்கையன்னச்
சேவல்தன் பெடைபுல்கு சிவபுரமே. 1.112.7
1214 எழின்மலை யெடுத்தவல் லிராவணன்றன்
முழுவலி யடக்கிய முதல்வன்நகர்
விழவினி லெடுத்தவெண் கொடிமிடைந்து
செழுமுகி லடுக்கும்வண் சிவபுரமே. 1.112.8
1215 சங்கள வியகையன் சதுர்முகனும்
அங்கள வறிவரி யவன்நகர்தான்
கங்குலும் பறவைகள் கமுகுதொறுஞ்
செங்கனி நுகர்தரு சிவபுரமே. 1.112.9
1216 மண்டையின் குண்டிகை மாசுதரும்
மிண்டரை விலக்கிய விமலன்நகர்
பண்டமர் தருபழங் காவிரியின்
தெண்டிரை பொருதெழு சிவபுரமே. 1.112.10
1217 சிவனுறை தருசிவ புரநகரைக்
கவுணியர் குலபதி காழியர்கோன்
தவமல்கு தமிழிவை சொல்லவல்லார்
நவமொடு சிவகதி நண்ணுவரே. 1.112.11
திருச்சிற்றம்பலம்