1.113 திருவல்லம்
பண் - வியாழக்குறிஞ்சி
1218 எரித்தவன் முப்புரம் எரியில்மூழ்கத்
தரித்தவன் கங்கையைத் தாழ்சடைமேல்
விரித்தவன் வேதங்கள் வேறுவேறு
தெரித்தவன் உறைவிடந் திருவல்லமே. 1.113.1
1219 தாயவன் உலகுக்குத் தன்னொப்பிலாத்
தூயவன் தூமதி சூடியெல்லாம்
ஆயவன் அமரர்க்கும் முனிவர்கட்குஞ்
சேயவன் உறைவிடந் திருவல்லமே. 1.113.2
1220 பார்த்தவன் காமனைப் பண்பழியப்
போர்த்தவன் போதகத் தின்னுரிவை
ஆர்த்தவன் நான்முகன் தலையையன்று
சேர்த்தவன் உறைவிடந் திருவல்லமே. 1.113.3
1221 கொய்தஅம் மலரடி கூடுவார்தம்
மைதவழ் திருமகள் வணங்கவைத்துப்
பெய்தவன் பெருமழை யுலகமுய்யச்
செய்தவன் உறைவிடந் திருவல்லமே. 1.113.4
1222 சார்ந்தவர்க் கின்பங்கள் தழைக்கும்வண்ணம்
நேர்ந்தவன் நேரிழை யோடுங்கூடித்
தேர்ந்தவர் தேடுவார் தேடச்செய்தே
சேர்ந்தவன் உறைவிடந் திருவல்லமே. 1.113.5
1223 பதைத்தெழு காலனைப் பாதமொன்றால்
உதைத்தெழு மாமுனிக் குண்மைநின்று
விதிர்த்தெழு தக்கன்றன் வேள்வியன்று
சிதைத்தவன் உறைவிடந் திருவல்லமே. 1.113.6
() இப்பதிகத்தில் 7-ம் செய்யுள் சிதைந்து போயிற்று. 1.113.7
1224 இகழ்ந்தரு வரையினை எடுக்கலுற்றாங்
ககழ்ந்தவல் லரக்கனை அடர்த்தபாதம்
நிகழ்ந்தவர் நேடுவார் நேடச்செய்தே
திகழ்ந்தவன் உறைவிடந் திருவல்லமே. 1.113.8
1225 பெரியவன் சிறியவர் சிந்தைசெய்ய
அரியவன் அருமறை யங்கமானான்
கரியவன் நான்முகன் காணவொண்ணாத்
தெரியவன் உறைவிடந் திருவல்லமே. 1.113.9
1226 அன்றிய அமணர்கள் சாக்கியர்கள்
குன்றிய அறவுரை கூறாவண்ணம்
வென்றவன் புலனைந்தும் விளங்கவெங்குஞ்
சென்றவன் உறைவிடந் திருவல்லமே. 1.113.10
1227 கற்றவர் திருவல்லங் கண்டுசென்று
நற்றமிழ் ஞானசம் பந்தன்சொன்ன
குற்றமில் செந்தமிழ் கூறவல்லார்
பற்றுவர் ஈசன்பொற் பாதங்களே. 1.113.11
இத்தலம் தொண்டைநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - வல்லநாதர், தேவியார் - வல்லாம்பிகையம்மை.
திருச்சிற்றம்பலம்