1.115 திரு இராமனதீச்சரம்
பண் - வியாழக்குறிஞ்சி
1238 சங்கொளிர் முன்கையர் தம்மிடையே
அங்கிடு பலிகொளு மவன்கோபப்
பொங்கர வாடலோன் புவனியோங்க
எங்குமன் இராமன தீச்சுரமே. 1.115.1
1239 சந்தநன் மலரணி தாழ்சடையன்
தந்தம தத்தவன் தாதையோதான்
அந்தமில் பாடலோன் அழகன்நல்ல
எந்தவன் இராமன தீச்சுரமே. 1.115.2
1240 தழைமயி லேறவன் தாதையோதான்
மழைபொதி சடையவன் மன்னுகாதிற்
குழையது விலங்கிய கோலமார்பின்
இழையவன் இராமன தீச்சுரமே. 1.115.3
1241 சத்தியு ளாதியோர் தையல்பங்கன்
முத்திய தாகிய மூர்த்தியோதான்
அத்திய கையினில் அழகுசூலம்
வைத்தவன் இராமன தீச்சுரமே. 1.115.4
1242 தாழ்ந்த குழற்சடை முடியதன்மேல்
தோய்ந்த இளம்பிறை துளங்குசென்னிப்
பாய்ந்தகங் கையொடு படவரவம்
ஏய்ந்தவன் இராமன தீச்சுரமே. 1.115.5
1243 சரிகுழல் இலங்கிய தையல்காணும்
பெரியவன் காளிதன் பெரியகூத்தை
அரியவன் ஆடலோன் அங்கையேந்தும்
எரியவன் இராமன தீச்சுரமே. 1.115.6
1244 மாறிலா மாதொரு பங்கன்மேனி
நீறது ஆடலோன் நீள்சடைமேல்
ஆறது சூடுவான் அழகன்விடை
ஏறவன் இராமன தீச்சுரமே. 1.115.7
1245 தடவரை அரக்கனைத் தலைநெரித்தோன்
படவர வாட்டிய படர்சடையன்
நடமது வாடலான் நான்மறைக்கும்
இடமவன் இராமன தீச்சுரமே. 1.115.8
1246 தனமணி தையல்தன் பாகன்றன்னை
அனமணி அயன்அணி முடியுங்காணான்
பனமணி அரவரி பாதங்காணான்
இனமணி இராமன தீச்சுரமே. 1.115.9
1247 தறிபோலாஞ் சமணர்சாக் கியர்சொற்கொளேல்
அறிவோரால் நாமம் அறிந்துரைமின்
மறிகையோன் தன்முடி மணியார்கங்கை
எறிபவன் இராமன தீச்சுரமே. 1.115.10
1248 தேன் மலர்க் கொன்றை யோன்....
.... முந்தமக்கூனமன்றே. 1.115.11
() இப்பதிகத்தில் 11-ம் செய்யுள் சிதைந்து போயிற்று.
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - இராமநாதேசுவரர், தேவியார் - சரிவார்குழலியம்மை.
திருச்சிற்றம்பலம்