MEIKANDAR INSTITUTE &
SPIRITUAL SCHOOL OF LEARNING

chulinks.in




This part of web page is available as android app

* We need to pay for the server
* For operation we need funds
* Cosider helping us
* Support us by making a donation
* Donation allows us to work for you
* Donate via Paypal  


    1.118 திருப்பருப்பதம்
    பண் - வியாழக்குறிஞ்சி

    1271 சுடுமணி யுமிழ்நாகஞ் சூழ்தர அரைக்கசைத்தான்
    இடுமணி யெழிலானை யேறலன் எருதேறி
    விடமணி மிடறுடையான் மேவிய நெடுங்கோட்டுப்
    படுமணி விடுசுடரார் பருப்பதம் பரவுதுமே. 1.118.1
    1272 நோய்புல்கு தோல்திரைய நரைவரு நுகருடம்பில்
    நீபுல்கு தோற்றமெல்லாம் நினையுள்கு மடநெஞ்சே
    வாய்புல்கு தோத்திரத்தால் வலஞ்செய்து தலைவணங்கிப்
    பாய்புலித் தோலுடையான் பருப்பதம் பரவுதுமே. 1.118.2
    1273 துனியுறு துயர்தீரத் தோன்றியோர் நல்வினையால்
    இனியுறு பயனாதல் இரண்டுற மனம்வையேல்
    கனியுறு மரமேறிக் கருமுசுக் கழையுகளும்
    பனியுறு கதிர்மதியான் பருப்பதம் பரவுதுமே. 1.118.3
    1274 கொங்கணி நறுங்கொன்றைத் தொங்கலன் குளிர்சடையான்
    எங்கள்நோய் அகலநின்றா னெனவரு ளீசனிடம்
    ஐங்கணை வரிசிலையான் அநங்கனை அழகழித்த
    பைங்கண்வெள் ளேறுடையான் பருப்பதம் பரவுதுமே. 1.118.4
    1275 துறைபல சுனைமூழ்கித் தூமலர் சுமந்தோடி
    மறையொலி வாய்மொழியால் வானவர் மகிழ்ந்தேத்தச்
    சிறையொலி கிளிபயிலுந் தேனினம் ஒலியோவா
    பறைபடு விளங்கருவிப் பருப்பதம் பரவுதுமே. 1.118.5
    1276 சீர்கெழு சிறப்போவாச் செய்தவ நெறிவேண்டில்
    ஏர்கெழு மடநெஞ்சே யிரண்டுற மனம்வையேல்
    கார்கெழு நறுங்கொன்றைக் கடவுள திடம்வகையால்
    பார்கெழு புகழோவா பருப்பதம் பரவுதுமே. 1.118.6
    1277 புடைபுல்கு படர்கமலம் புகையொடு விரைகமழத்
    தொடைபுல்கு நறுமாலை திருமுடி மிசையேற
    விடைபுல்கு கொடியேந்தி வெந்தவெண் ணீறணிவான்
    படைபுல்கு மழுவாளன் பருப்பதம் பரவுதுமே. 1.118.7
    1278 நினைப்பெனும் நெடுங்கிணற்றை நின்றுநின் றயராதே
    மனத்தினை வலித்தொழிந்தேன் அவலம்வந் தடையாமைக்
    கனைத்தெழு திரள்கங்கை கமழ்சடைக் கரந்தான்றன்
    பனைத்திரள் பாயருவிப் பருப்பதம் பரவுதுமே. 1.118.8
    1279 மருவிய வல்வினைநோய் அவலம்வந் தடையாமல்
    திருவுரு அமர்ந்தானுந் திசைமுகம் உடையானும்
    இருவரும் அறியாமை எழுந்ததோ ரெரிநடுவே
    பருவரை யுறநிமிர்ந்தான் பருப்பதம் பரவுதுமே. 1.118.10
    1279 சடங்கொண்ட சாத்திரத்தார் சாக்கியர் சமண்குண்டர்
    மடங்கொண்ட விரும்பியராய் மயங்கியோர் பேய்த்தேர்ப்பின்
    குடங்கொண்டு நீர்க்குச்செல்வார் போதுமின் குஞ்சரத்தின்
    படங்கொண்ட போர்வையினான் பருப்பதம் பரவுதுமே. 1.118.11
    1280 வெண்செநெல் விளைகழனி விழவொலி கழுமலத்தான்
    பண்செலப் பலபாடல் இசைமுரல் பருப்பதத்தை
    நன்சொலி னாற்பரவு ஞானசம் பந்தன்நல்ல
    ஒண்சொலின் இவைமாலை யுருவெணத் தவமாமே. 1.118.12

    இத்தலம் வடதேசத்திலுள்ளது. ஸ்ரீசைலமென்றும்
    மல்லிகார்ச்சுன மென்றும் வழங்குகின்றது.
    சுவாமிபெயர் - பருப்பதேசுவரர், தேவியார் - பருப்பதமங்கையம்மை.

    திருச்சிற்றம்பலம்