MEIKANDAR INSTITUTE &
SPIRITUAL SCHOOL OF LEARNING

chulinks.in




This part of web page is available as android app

* We need to pay for the server
* For operation we need funds
* Cosider helping us
* Support us by making a donation
* Donation allows us to work for you
* Donate via Paypal  


    1.122 திருவிடைமருதூர் - திருவிராகம்
    பண் - வியாழக்குறிஞ்சி

    1315 விரிதரு புலியுரி விரவிய அரையினர்
    திரிதரும் எயிலவை புனைகணை யினிலெய்த
    எரிதரு சடையினர் இடைமரு தடைவுனல்
    புரிதரு மன்னவர் புகழ்மிக வுளதே. 1.122.1
    1316 மறிதிரை படுகடல் விடமடை மிடறினர்
    எறிதிரை கரைபொரும் இடைமரு தெனுமவர்
    செறிதிரை நரையொடு செலவிலர் உலகினில்
    பிறிதிரை பெறுமுடல் பெருகுவ தரிதே. 1.122.2
    1317 சலசல சொரிபுனல் சடையினர் மலைமகள்
    நிலவிய உடலினர் நிறைமறை மொழியினர்
    இலரென இடுபலி யவரிடை மருதினை
    வலமிட வுடல்நலி விலதுள வினையே. 1.122.3
    1318 விடையினர் வெளியதொர் தலைகல னெனநனி
    கடைகடை தொறுபலி யிடுகென முடுகுவர்
    இடைவிட லரியவர் இடைமரு தெனும்நகர்
    உடையவர் அடியிணை தொழுவதெம் உயர்வே. 1.122.4
    1319 உரையரும் உருவினர் உணர்வரு வகையினர்
    அரைபொரு புலியதள் உடையினர் அதன்மிசை
    இரைமரும் அரவினர் இடைமரு தெனவுளம்
    உரைகள துடையவர் புகழ்மிக வுளதே. 1.122.5
    1320 ஒழுகிய புனல்மதி யரவமொ டுறைதரும்
    அழகிய முடியுடை அடிகள தறைகழல்
    எழிலினர் உறையிடை மருதினை மலர்கொடு
    தொழுதல்செய் தெழுமவர் துயருறல் இலரே. 1.122.6
    1321 கலைமலி விரலினர் கடியதொர் மழுவொடும்
    நிலையினர் சலமகள் உலவிய சடையினர்
    மலைமகள் முலையிணை மருவிய வடிவினர்
    இலைமலி படையவர் இடமிடை மருதே. 1.122.7
    1322 செருவடை யிலவல செயல்செயத் திறலொடும்
    அருவரை யினிலொரு பதுமுடி நெரிதர
    இருவகை விரனிறி யவரிடைமருதது
    பரவுவர் அருவினை ஒருவுதல் பெரிதே. 1.122.8
    1323 அரியொடு மலரவன் எனவிவ ரடிமுடி
    தெரிவகை அரியவர் திருவடி தொழுதெழ
    எரிதரும் உருவர்தம் இடைமரு தடைவுறல்
    புரிதரும் மன்னவர் புகழ்மிக உளதே. 1.122.9
    1324 குடைமயி லினதழை மருவிய வுருவினர்
    உடைமரு துவரினர் பலசொல வுறவிலை
    அடைமரு திருவினர் தொழுதெழு கழலவர்
    இடைமரு தெனமனம் நினைவதும் எழிலே. 1.122.10
    1325 பொருகடல் அடைதரு புகலியர் தமிழொடு
    விரகினன் விரிதரு பொழிலிடைமருதினைப்
    பரவிய ஒருபது பயிலவல் லவரிடர்
    விரவிலர் வினையொடு வியனுல குறவே. 1.122.11

    திருச்சிற்றம்பலம்