MEIKANDAR INSTITUTE &
SPIRITUAL SCHOOL OF LEARNING

chulinks.in




This part of web page is available as android app

* We need to pay for the server
* For operation we need funds
* Cosider helping us
* Support us by making a donation
* Donation allows us to work for you
* Donate via Paypal  


    1.133 திருவேகம்பம்
    பண் - மேகராகக்குறிஞ்சி

    1427 வெந்தவெண் பொடிப்பூசு மார்பின்விரி நூலொருபால் பொருந்தக்
    கந்தமல்கு குழலியோடுங் கடிபொழிற் கச்சி தன்னுள்
    அந்தமில் குணத்தா ரவர்போற்ற அணங்கினொ டாடல்புரி
    எந்தை மேவிய ஏகம்பந்தொழு தேத்த இடர்கெடுமே. 1.133.1
    1428 வரந்திகழு மவுணர் மாநகர்மூன் றுடன்மாய்ந் தவியச்
    சரந்துரந் தெரிசெய்த தாழ்சடைச் சங்கரன் மேயவிடம்
    குருந்தம் மல்லிகை கோங்குமா தவிநல்ல குராமரவந்
    திருந்துபைம் பொழிற்கச்சி யேகம்பஞ் சேர விடர்கெடுமே. 1.133.2
    1429 வண்ணவெண் பொடிப்பூசு மார்பின் வரியர வம்புனைந்து
    பெண்ணமர்ந் தெரியாடற் பேணிய பிஞ்ஞகன் மேயவிடம்
    விண்ணமர் நெடுமாட மோங்கி விளங்கிய கச்சிதன்னுள்
    திண்ணமாம் பொழில்சூழ்ந்த ஏகம்பஞ் சேர விடர்கெடுமே. 1.133.3
    1430 தோலும்நூ லுந்துதைந்த வரைமார்பிற் சுடலைவெண் ணீறணிந்து
    காலன்மாள் வுறக்காலாற் காய்ந்த கடவுள் கருதுமிடம்
    மாலைவெண் மதிதோயு மாமதிற் கச்சி மாநகருள்
    ஏலம்நாறிய சோலைசூழ் ஏகம்பம் ஏத்த விடர்கெடுமே. 1.133.4
    1431 தோடணிம் மலர்க்கொன்றை சேர்சடைத் தூமதி யம்புனைந்து
    பாடல்நான் மறையாகப் பல்கணப் பேய்க ளவைசூழ
    வாடல்வெண் டலையோ டனலேந்தி மகிழ்ந்துடன் ஆடல்புரி
    சேடர்சேர் கலிக்கச்சி ஏகம்பஞ் சேர விடர்கெடுமே. 1.133.5
    1432 சாகம்பொன் வரையாகத் தானவர் மும்மதில் சாயவெய்
    தாகம்பெண் ணொருபாக மாக அரவொடு நூலணிந்து
    மாகந்தோய் மணிமாட மாமதிற் கச்சி மாநகருள்
    ஏகம்பத் துறையீசன் சேவடி யேத்த விடர்கெடுமே. 1.133.6
    () இப்பதிகத்தில் 7-ம் செய்யுள் சிதைந்து போயிற்று. 1.133.7
    1433 வாணிலா மதிபுல்கு செஞ்சடை வாளர வம்மணிந்து
    நாணிடத் தினில்வாழ்க்கை பேணி நகுதலையிற் பலிதேர்ந்
    தேணிலா அரக்கன்றன் நீள்முடி பத்தும் இறுத்தவனூர்
    சேணுலாம் பொழிற்கச்சி ஏகம்பஞ் சேர விடர்கெடுமே. 1.133.8
    1434 பிரமனுந் திருமாலுங் கைதொழப் பேரழ லாயபெம்மான்
    அரவஞ் சேர்சடை அந்தணன் அணங்கினொ டமருமிடம்
    கரவில்வண் கையினார்கள் வாழ்கலிக் கச்சி மாநகருள்
    மரவஞ்சூழ் பொழிலேகம் பந்தொழ வில்வினை மாய்ந்தறுமே. 1.133.9
    1435 குண்டுபட் டமணா யவரொடுங் கூறைதம் மெய்போர்க்கும்
    மிண்டர் கட்டிய கட்டுரை யவைகொண்டு விரும்பேன்மின்
    விண்டவர் புரமூன்றும் வெங்கணை ஒன்றி னாலவியக்
    கண்டவன் கலிக்கச்சி யேகம்பங் காண விடர்கெடுமே. 1.133.10
    1436 ஏரினார் பொழில்சூழ்ந்த கச்சி யேகம்பம் மேயவனை
    காரினார் மணிமாட மோங்கு கழுமல நன்னகருள்
    பாரினார் தமிழ்ஞான சம்பந்தன் பரவிய பத்தும்வல்லார்
    சீரினார் புகழோங்கி விண்ணவ ரோடுஞ் சேர்பவரே. 1.133.11

    திருச்சிற்றம்பலம்