1.134 திருப்பறியலூர் - திருவீரட்டம்
பண் - மேகராகக்குறிஞ்சி
1437 கருத்தன் கடவுள் கனலேந் தியாடும்
நிருத்தன் சடைமேல் நிரம்பா மதியன்
திருத்த முடையார் திருப்பறி யலூரில்
விருத்தன் எனத்தகும் வீரட்டத் தானே. 1.134.1
1438 மருந்தன் அமுதன் மயானத்துள் மைந்தன்
பெருந்தண் புனற்சென்னி வைத்த பெருமான்
திருந்து மறையோர் திருப்பறி யலூரில்
விரிந்த மலர்ச்சோலை வீரட்டத் தானே. 1.134.2
1439 குளிர்ந்தார் சடையன் கொடுஞ்சிலை விற்காமன்
விளிந்தான் அடங்க வீந்தெய்தச் செற்றான்
தெளிந்தார் மறையோர் திருப்பறி யலூரில்
மிளிர்ந்தார் மலர்ச்சோலை வீரட்டத் தானே. 1.134.3
1440 பிறப்பாதி யில்லான் பிறப்பார் பிறப்புச்
செறப்பாதி யந்தஞ் செலச்செய்யுந் தேசன்
சிறப்பா டுடையார் திருப்பறி யலூரில்
விறற்பா ரிடஞ்சூழ வீரட்டத் தானே. 1.134.4
1441 கரிந்தார் இடுகாட்டி லாடுங் கபாலி
புரிந்தார் படுதம் புறங்காட் டிலாடும்
தெரிந்தார் மறையோர் திருப்பறி யலூரில்
விரிந்தார் மலர்ச்சோலை வீரட்டத் தானே. 1.134.5
1442 அரவுற்ற நாணா அனலம்ப தாகச்
செருவுற் றவர்புரந் தீயெழச் செற்றான்
தெருவிற் கொடிசூழ் திருப்பறி யலூரில்
வெருவுற் றவர்தொழும் வீரட்டத் தானே. 1.134.6
1443 நரையார் விடையான் நலங்கொள் பெருமான்
அரையா ரரவம் அழகா வசைத்தான்
திரையார் புனல்சூழ் திருப்பறி யலூரில்
விரையார் மலர்ச்சோலை வீரட்டத் தானே. 1.134.7
1444 வளைக்கும் மெயிற்றின் னரக்கன் வரைக்கீழ்
இளைக்கும் படிதா னிருந்தேழை யன்னம்
திளைக்கும் படுகர்த் திருப்பறி யலூரில்
விளைக்கும் வயல்சூழ்ந்த வீரட்டத் தானே. 1.134.8
1445 வளங்கொள் மலர்மேல் அயனோத வண்ணன்
துளங்கும் மனத்தார் தொழத்தழ லாய்நின்றான்
இளங்கொம் பனாளோ டிணைந்தும் பிணைந்தும்
விளங்குந் திருப்பறியல் வீரட்டத் தானே. 1.134.9
1446 சடையன் பிறையன் சமண்சாக் கியரோ
டடையன் பிலாதான் அடியார் பெருமான்
உடையன் புலியின் உரிதோல் அரைமேல்
விடையன் திருப்பறியல் வீரட்டத் தானே. 1.134.10
1447 நறுநீ ருகுங்காழி ஞானசம் பந்தன்
வெறிநீர்த் திருப்பறியல் வீரட்டத் தானைப்
பொறிநீ டரவன் புனைபாடல் வல்லார்க்
கறுநீ டவலம் அறும்பிறப் புத்தானே. 1.134.11
திருச்சிற்றம்பலம்