MEIKANDAR INSTITUTE &
SPIRITUAL SCHOOL OF LEARNING

chulinks.in




This part of web page is available as android app

* We need to pay for the server
* For operation we need funds
* Cosider helping us
* Support us by making a donation
* Donation allows us to work for you
* Donate via Paypal  


    2.10 திருமங்கலக்குடி
    பண் - இந்தளம்
    திருச்சிற்றம்பலம்

    100 சீரி னார்மணி யும்மகில் சந்துஞ் செறிவரை
    வாரி நீர்வரு பொன்னி வடமங்க லக்குடி
    நீரின் மாமுனி வன்நெடுங் கைகொடு நீர்தனைப்
    பூரித் தாட்டியர்ச் சிக்கஇ ருந்த புராணனே. 01
    101 பணங்கொ ளாடர வல்குல்நல் லார்பயின் றேத்தவே
    மணங்கொள் மாமயி லாலும்பொ ழில்மங்க லக்குடி
    இணங்கி லாமறை யோரிமை யோர்தொழு தேத்திட
    அணங்கி னோடிருந் தானடி யேசர ணாகுமே. 02
    102 கருங்கை யானையின் ஈருரி போர்த்திடு கள்வனார்
    மருங்கெ லாம்மண மார்பொழில் சூழ்மங்க லக்குடி
    அரும்பு சேர்மலர்க் கொன்றையி னானடி யன்பொடு
    விரும்பி யேத்தவல் லார்வினை யாயின வீடுமே. 03
    103 பறையி னோடொலி பாடலும் ஆடலும் பாரிடம்
    மறையி னோடியல் மல்கிடு வார்மங்க லக்குடிக்
    குறைவி லாநிறை வேகுண மில்குண மேயென்று
    முறையி னால்வணங் கும்மவர் முன்னெறி காண்பரே. 04
    104 ஆனி லங்கிளர் ஐந்தும் அவிர்முடி யாடியோர்
    மானி லங்கையி னான்மண மார்மங்க லக்குடி
    ஊனில் வெண்டலைக் கையுடை யானுயர் பாதமே
    ஞான மாகநின் றேத்தவல் லார்வினை நாசமே. 05
    105 தேனு மாயமு தாகிநின் றான்றெளி சிந்தையுள்
    வானு மாய்மதி சூடவல் லான்மங்க லக்குடிக்
    கோனை நாடொறும் ஏத்திக் குணங்கொடு கூறுவார்
    ஊன மானவை போயறும் உய்யும் வகையதே. 06
    106 வேள் படுத்திடு கண்ணினன் மேருவில் லாகவே
    வாள ரக்கர் புரமெரித் தான்மங்க லக்குடி
    ஆளு மாதிப் பிரானடி கள்ளடைந் தேத்தவே
    கோளு நாளவை போயறுங் குற்றமில் லார்களே. 07
    107 பொலியும் மால்வரை புக்கெடுத் தான்புகழ்ந் தேத்திட
    வலியும் வாளொடு நாள்கொடுத் தான்மங்க லக்குடிப்
    புலியின் ஆடையி னானடி யேத்திடும் புண்ணியர்
    மலியும் வானுல கம்புக வல்லவர் காண்மினே. 08
    108 ஞாலம் முன்படைத் தான்நளிர் மாமலர் மேலயன்
    மாலுங் காணவொ ணாஎரி யான்மங்க லக்குடி
    ஏல வார்குழ லாளொரு பாகமி டங்கொடு
    கோல மாகிநின் றான்குணங் கூறுங் குணமதே. 09
    109 மெய்யின் மாசினர் மேனி விரிதுவ ராடையர்
    பொய்யை விட்டிடும் புண்ணியர் சேர்மங்க லக்குடிச்
    செய்ய மேனிச் செழும்புனற் கங்கைசெ றிசடை
    ஐயன் சேவடி யேத்தவல் லார்க்கழ காகுமே. 10
    110 மந்த மாம்பொழில் சூழ்மங்க லக்குடி மன்னிய
    எந்தை யையெழி லார்பொழிற் காழியர் காவலன்
    சிந்தை செய்தடி சேர்த்திடு ஞானசம் பந்தன்சொல்
    முந்தி யேத்தவல் லாரிமை யோர்முத லாவரே. 11
    இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
    சுவாமிபெயர் - புராணவரதேசுவரர், தேவியார் - மங்களநாயகியம்மை.
    திருச்சிற்றம்பலம்