2.11 சீகாழி
பண் - இந்தளம்
திருச்சிற்றம்பலம்
111 நல்லானை நான்மறை யோடிய லாறங்கம்
வல்லானை வல்லவர் பான்மலிந் தோங்கிய
சொல்லானைத் தொன்மதிற் காழியே கோயிலாம்
இல்லானை யேத்தநின் றார்க்குள தின்பமே. 01
112 நம்மான மாற்றி நமக்கரு ளாய்நின்ற
பெம்மானைப் பேயுடன் ஆடல் புரிந்தானை
அம்மானை அந்தணர் சேரு மணிகாழி
எம்மானை ஏத்தவல் லார்க்கிட ரில்லையே. 02
113 அருந்தானை யன்புசெய் தேத்தகில் லார்பால்
பொருந்தானைப் பொய்யடி மைத்தொழில் செய்வாருள்
விருந்தானை வேதிய ரோதி மிடைகாழி
இருந்தானை யேத்துமின் நும்வினை யேகவே. 03
114 புற்றானைப் புற்றர வம்மரை யின்மிசைச்
சுற்றானைத் தொண்டுசெய் வாரவர் தம்மொடும்
அற்றானை அந்தணர் காழி யமர்கோயில்
பற்றானைப் பற்றிநின் றார்க்கில்லை பாவமே. 04
115 நெதியானை நெஞ்சிடங் கொள்ள நினைவார்தம்
விதியானை விண்ணவர் தாம்வியந் தேத்திய
கதியானைக் காருல வும்பொழிற் காழியாம்
பதியானைப் பாடுமின் நும்வினை பாறவே. 05
116 செப்பான மென்முலை யாளைத் திகழ்மேனி
வைப்பானை வார்கழ லேத்தி நினைவார்தம்
ஒப்பானை ஓதம் உலாவு கடற்காழி
மெய்ப்பானை மேவிய மாந்தர் வியந்தாரே. 06
117 துன்பானைத் துன்பம் அழித்தரு ளாக்கிய
இன்பானை யேழிசை யின்னிலை பேணுவார்
அன்பானை அணிபொழிற் காழி நகர்மேய
நம்பானை நண்ணவல் லார்வினை நாசமே. 07
118 குன்றானைக் குன்றெடுத் தான்புயம் நாலைந்தும்
வென்றானை மென்மல ரானொடு மால்தேட
நின்றானை நேரிழை யாளொடுங் காழியுள்
நன்றானை நம்பெரு மானை நணுகுமே. 08
இப்பதிகத்தில் 9-ம் செய்யுள் மறைந்து போயிற்று. 09
119 சாவாயும் வாதுசெய் சாவகர் சாக்கியர்
மேவாத சொல்லவை கேட்டு வெகுளேன்மின்
பூவாய கொன்றையி னானைப் புனற்காழிக்
கோவாய கொள்கையி னாணடி கூறுமே. 10
120 கழியார்சீ ரோதமல் குங்கடற் காழியுள்
ஒழியாது கோயில்கொண் டானை யுகந்துள்கித்
தழியார்சொல் ஞானசம் பந்தன் தமிழார
மொழிவார்கள் மூவுல கும்பெறு வார்களே. 11
திருச்சிற்றம்பலம்